You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை தண்ணீர் பிரச்சனை: இரண்டு நாள் மழையில் 18,000 லிட்டர் நீரை சேகரித்த தனியொருவர்
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி
சென்னை முழுவதுமுள்ள நீர்நிலைகள் வறண்ட போன காரணத்தினால், மக்கள் தங்களது தினசரி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு நிறைய பணம் மட்டுமின்றி நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர்.
ஆனால், அதே சென்னையை சேர்ந்த ஒருவர், குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.
69 வயதாகும் இந்திர குமாரை தண்ணீர் குழாய் இணைப்பு பெற்றுக்கொள்ளும் படி, பலமுறை குடிநீர் வாரியத்தின் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.
சென்னை மாநகர் முழுவதும் மக்கள் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திர குமாரின் இந்த விடாப்பிடியான நிலைப்பாட்டிற்கு அவரது வீட்டிலுள்ள திட்டமிடப்பட்ட நீர் தொட்டியே காரணம்.
"கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் மூன்று சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளது. அதன் மூலம், நான் கிட்டத்தட்ட 18,000 லிட்டர் தண்ணீரை சேகரித்துள்ளேன். தண்ணீர் பிரச்சனையில் வாடிக் கொண்டிருப்பது சென்னைதான், நானல்ல" என்று பிபிசியிடம் பேசிய இந்திர குமார் பெருமிதத்துடன் கூறினார்.
"சென்னை முழுவதும் மழை நீரை வீணாக்கப்படுகிறது. ஆனால், சுற்றுச்சூழலுக்கு தகுந்த முறையில் கட்டப்பட்டுள்ள எனது வீட்டில் தண்ணீர் முறையாக சேமிக்கப்படுகிறது ," என்று அவர் மேலும் கூறுகிறார்.
குரோம்பேட்டையில் வசிக்கும் இந்திர குமாரின் இரண்டடுக்கு வீடு பார்ப்பதற்கு பழையது போன்று காட்சியளிக்கிறது. ஆனால், அவரது வீட்டினுள்ளே சென்று பார்த்தால்தான் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான எவ்வளவு வேலைகளை அவர் செய்கிறார் என்று தெரிகிறது.
1986ஆம் ஆண்டு இந்த வீட்டை கட்டிய இந்திர குமார், சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிட்டது. அதாவது, அவரது வீட்டின் தண்ணீர் தேவையை நிறைவேற்றி வந்த நிலத்தடி நீர் சிறிது சிறிதாக உப்பு கரிக்க ஆரம்பித்துவிட்டது. "நான் உடனடியாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை எனது வீட்டில் செயற்படுத்தியதால், அடுத்த ஆறு மாதங்களிலேயே நிலத்தடி நீரின் சுவையில் நல்ல மாறுபாடு தென்பட்டது" என்று அவர் கூறுகிறார்.
தனது இந்த அனுபவம் குறித்து பள்ளியில் நடக்கும் காலைநேர கூட்டத்தில் விளக்க விரும்புவதாக பள்ளி முதல்வரிடம் தெரிவிக்குமாறு தனது பிள்ளைகளிடம் இந்திர குமார் கூற, அதை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. இவர் தனது அனுபவத்தை விளக்கிய பின்னர், வழக்கம்போல அலுவலகத்துக்கு சென்று, மாலையில் வீடு திரும்பியபோது, அப்பள்ளியின் இரண்டு ஆசிரியர்கள் நின்று கொண்டிருந்தனர்.
"தங்களது வீட்டிலுள்ள கிணறுகளின் நிலையை பார்க்க வருமாறு அவர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன் பேரில் அவர்களது வீட்டை பார்த்தபோது, குரோம்பேட்டை - பல்லாவரம் - பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சூழ்நிலையும் ஒத்து காணப்படுவது தெரியவந்தது. அதாவது, அருகியுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துக்கொண்ட பிறகு, இந்நிலையில் மாற்றுவதுதான் என்னுடைய பணி என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன்.
1998 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில், மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த முக்கியத்துவத்தை தினமும் இரண்டு பேருக்கு கற்பித்ததன் மூலம் சுமார் ஆயிரம் வீடுகளில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
இவரது மழைநீர் சேகரிப்பு திட்டம் வீட்டிற்குள் பொழியும் மழைநீரை சேமிப்பது மட்டுமல்ல. இவரது வீட்டுக்கு சுமார் 50 மீட்டருக்கு முன்னதாகவே, பள்ளம் போன்ற அமைப்புள்ள சாலையிலிருந்து புரண்டோடி வரும் நீர், வீட்டிற்கு முன்புள்ள கால்வாய்க்குள் விழுகிறது. அது பிறகு, நிலத்தடிக்குள் சென்று சேகரமாகிறது.
வீட்டின் மாடியில் இவர் அமைத்துள்ள சிறிய நீர் தொட்டி மழைக்காலங்களில் நிரம்பி, அங்கிருந்த செல்லும் நீர் நன்னாரி தாவரத்தின் ஊடாக சென்று இயற்கையான முறையில் சுத்திகரிக்கப்பட்டு கிணற்றுக்குள் சென்று விழுகிறது. "கிணற்றில் இருக்கும் நீரை நான் நேரடியாக எடுத்து குடிப்பதற்கு பயன்படுத்துகிறேன்" என்று இந்திர குமார் கூறுகிறார்.
மழைநீர் சேகரிப்பு திட்டம் மட்டுமின்றி, தனது முழுக்க இயற்கைக்கு தகுந்த வகையில் பல விடயங்களை செய்துள்ளார் இவர். அதாவது, அவரது வீட்டு மாடியில், துளசி உள்ளிட்ட பல்வேறு வகையா ன மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
"இங்கு விளையும் செடிகளை நீங்கள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க செல்ல வேண்டிய நிலையே உங்களுக்கு ஏற்படாது. அதுமட்டுமின்றி, இதுபோன்ற மூலிகை செடிகளின் வாயிலாக உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சுத்தமான பிராண வாயு கிடைக்கிறது."
அதே சூழ்நிலையில், கழிவு நீரை நீரின் ஆதாரமாக பார்க்க வேண்டியதன் அவசியத்தையும் இந்திர குமார் வலியுறுத்துகிறார். "எனது வீட்டில் கழிவுநீர் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, சமையலறையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், நேரடியாக தாவரங்களுக்கு சென்றும், கழிவறையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் பாக்டீரியாவினாலும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறையை கடந்த 17 ஆண்டுகளாக நான் கடைபிடித்து வருகிறேன்" என்று அவர் கூறும் இந்திர குமார், இயற்கை மண் உரத்தையும் தானே தயாரிக்கிறார்.
"நான் இந்த செயல்முறைக்காக எவ்வளவு பணத்தை செலவிட்டேன் என்று யோசிப்பதில்லை. இது நமது எதிர்காலத்திற்கான முதலீடு அவ்வளவுதான்."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்