9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய போலீஸ் அதிகாரி புற்றுநோயால் உயிரிழப்பு மற்றும் பிற செய்திகள்

நியூயார்க்கில் நடைபெற்ற 9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்கள், உடல்நிலை சரியில்லாமல் போனவர்கள், அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை நீட்டிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்துவந்த நியூயார்க் காவல் துறையை சேர்ந்த துப்பறிவாளர் உயிரிழந்தார்.

தாக்குதலின் போது காற்றில் கலந்த விஷத்தின் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 58 வயதான லூயிஸ் அல்வரெஸ் 68 முறை கீமோதெரப்பி சிகிச்சைக்கு உள்ளானார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி 2020ஆம் ஆண்டிலிருந்து 2090 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்பதை சட்டப்பூர்வமானதாக்குவதற்கு ஆதரவாக லூயிஸ் ஜூன் 11ஆம் தேதியன்று பேசியிருந்தார்.

ஜூன் 19ஆம் தேதியன்று தனக்கு இருக்கும் நுரையீரல் புற்றுநோயை எதிர்த்து தான் தொடர்ந்து போராட போவதாக முகநூல் பதிவில் தெரிவித்த லூயிஸ், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிக்க அதுகுறித்து பல நேர்காணல்களை வழங்கவுள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

9/11 தாக்குதலின் தாக்கம்

செப்டம்பர் 2018ஆம் ஆண்டு வரை 9/11 தாக்குதல் பாதிப்பில் 2000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 2018ஆம் ஆண்டின் முடிவுக்குள் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் தாக்குதலின்போது காற்றில் கலந்த விஷத்தின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கூறப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், அவசரகால பணியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் என சுமார் 80,000 ஊழியர்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கினர்.

இடிபாடுகளின்நடுவே வேலை செய்தபோது காற்றில் கலந்த விஷத்தன்மையினால், அவர்களுக்கு ஆபாத்தான நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகமானது.

தலாய் லாமா: "எனது இடத்தை நிரப்பும் பெண் ஈர்ப்பு மிக்கவராக இருக்க வேண்டும்"

பூமி பந்தில் இவர் மிகவும் அறியப்படுபவர் என்பதில் சந்தேகமில்லை.

பிரபலமானவர்கள் வணங்கப்பட்ட காலத்தில், இறைநம்பிக்கையின் தலைவராக இருந்த தலாய் லாமா, ஆன்மிக நட்சத்திரமாக விளங்குகிறார்.

84ஆவது பிறந்த நாளை நெருங்கி வரும் தலாய் லாமா, ஊக்கமூட்டும் மேற்கோள்களை வழங்கியுள்ளார். சில வேளைகளில் அதிர்ச்சி அளிக்கும் கருத்துகளையும் வெளியிட்டுள்ளார்.

பிபிசியுடனான சமீபத்திய நேர்காணலில் சீனா, அமெரிக்க அதிபர்கள், அகதிகள், பெண் பற்றி தலாய் லாமா தெரிவித்த கருத்துகளை இந்த கட்டுரையில் தொகுத்து வழங்குகின்றோம்.

"ஒரு முறை என்னை சாத்தான் என்று சீன அதிகாரி ஒருவர் அழைத்தார்" என்று சிரித்து கொண்டே கூறிய தலாய் லாமா, தனது தலை மீது விரல்களை கொம்புபோல் வைத்து கொண்டு, "அதனை கேட்டபோது, 'ஆம், நானொரு கொம்புகளுள்ள சாத்தன்' என்று பதிலளித்தேன்" என்றார்.

"அவர்களின் அறியாமையை நினைத்து கவலைப்படுகிறேன். அவர்களின் அரசியல் சிந்தனை மிகவும் குறுகியது" என்று தலாய் லாமா மேலும் கூறினார்.

குவைத் கிரிக்கெட் அணிக்கு தேர்வான தமிழக இளைஞரின் வெற்றிக்கதை

கிரிக்கெட் விளையாட்டின் மீதான தீராத காதலும், கடின உழைப்பும் ஒரு தமிழக இளைஞரை குவைத் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பாச்சல் கிராமத்து இளைஞர்களுக்கான விளையாட்டு கிளப்பான பாச்சல் கிரிக்கெட் கிளப்பிலிருந்து தொடங்கியதுதான் கிரிக்கெட் வீரர் சங்கர் வரத்தப்பனின் சாதனைப் பயணம்.

2019ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கான டி20 தகுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியில் குவைத் நாட்டின் தேசிய அணியில் ஓபனிங் பேட்ஸ்மானாக விளையாடவுள்ளார் தமிழகத்தை சேர்ந்த சங்கர்.

கைத்தறி நெசவாளர்கள் அதிகமுள்ள பாச்சல் கிராமத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைவிட விசைத்தறி ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட நேரத்தில், சங்கரின் அண்ணன் பெரியசாமியின் ஆதரவால் பள்ளிப்படிப்பை தொடர்ந்திருக்கிறார் சங்கர்.

சிலோன் காலனியில் இருந்து நியூசிலாந்துக்கு - நடுக்கடலில் மாயமான 243 பேர்

அந்த இடத்தின் பெயர் சிலோன் காலனி. ஆனால் இலங்கைக்கும் அந்த இடத்துக்கும் தொடர்பில்லை. இந்த சிலோன் காலனி தெற்கு டெல்லியில் உள்ள மதன்கீரில் உள்ளது.

அங்கிருப்பவர்களின் முன்னோர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிலோனில் இருந்து வந்தவர்கள் என்பது மட்டுமே அந்த இடத்துக்கு அந்த பெயர் வர காரணம்.

ஆனால் தற்போது இந்த பகுதி முழுவதும் ஓர் இருள் சூழ்ந்துள்ளது. ஐந்து மாதங்களாக காணாமல் போன படகில் பயணம் செய்த 243 பேரில் 164 பேர் இந்த பகுதியை சேர்ந்தவர்கள்தாம்.

கேரளாவின் கடற்கரை பகுதியில் இருந்து ஐந்து மாதங்களுக்கு முன்பு புறப்பட்ட அந்த படகின் நிலை குறித்தும் அதில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்தும் ஒரு தகவலும் இல்லை.

அசாம் குடியுரிமை பிரச்சனை: தற்கொலை செய்துகொள்ளும் அசாம்வாசிகள்

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதாக கூறி இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் நாற்பது லட்சம் மக்கள் வழி தெரியாது திணறி வருகின்றனர்.

நாடு கடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதை அறிந்த சிலர் அச்சத்தின் காரணமாக தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மே மாதம், ரமலானை ஒட்டி விரதம் இருந்த 88 வயதான அஷரப் அலி, அந்நாளின் இறுதியில் நோன்பை முடிப்பதற்காக செல்வதாக கூறினார்; ஆனால், அவர் மீண்டும் திரும்பவே இல்லை. தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: