You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். அமமுகவில் இன்னும் பலர் திமுகவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை சந்தித்து அவர் திமுகவில் இணைந்தார்.
தமிழகத்தின் உரிமையை ஸ்டாலின் காப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால் திமுகவில் தாம் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் துணிச்சலான முடிவு எடுக்கக்கூடியவர் என்றும் ஆளுமை மிக்கவர் என்றும் திமுகவில் இணைந்தபின் செய்தியாளர்களை சந்தித்தபோது தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
அமமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த செந்தில் பாலாஜி ஏற்கனேவே திமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்டச் செயலாளராகவும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்த தங்கத் தமிழ்ச் செல்வன், தினகரனை கடுமையான வார்த்தைகளால் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தங்க தமிழ்ச்செல்வன் வேறு இடத்திற்குச் செல்ல முடிவுசெய்து இவ்வாறு பேசுவதாக டிடிவி தினகரன் அப்போது குற்றம்சாட்டியிருக்கிறார்.
அந்த ஆடியோவில், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவர் பேசியுள்ளார். மேலும், "நான் விஸ்வரூபம் எடுத்தா அழிஞ்சு போவீங்க. நீ உட்பட அழிஞ்சு போவ. நான் நல்லவன். தேனி மாவட்டத்துல கூட்டம் போடுற.. நாளைக்கு நான் மதுரை மாவட்டத்துல கூட்டம் போடுறேன். பாரு. பாரு.. என்ன நடக்குதுன்னு பாரு. உங்க டிடிவி தினகரன்கிட்ட சொல்லீரு.. இந்த மாதிரி அரசியல் பண்ணவேணாம். நீ தோத்துப் போவ.. ஜெயிக்க மாட்ட" என்று பேசியிருந்தார்.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கைவிட்டது தி.மு.க.
இதனிடையே, தமிழக சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் தி.மு.க. அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதற்குப் பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்குப் பின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்துக் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மு.க. ஸ்டாலின், "அந்தத் தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை. இதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறோம். அன்றைக்கு இருந்த சூழலில் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது. இன்றைக்கு அது தேவையில்லாயெனக் கருதுகிறோம்" என்று தெரிவித்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்ட இந்த மூவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கட்சியின் சட்டமன்றக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலைச் சந்தித்து மனு அளித்தார்.
ஏப்ரல் 30ஆம் தேதியன்று இந்த மூன்று பேரிடமும் விளக்கம்கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சட்டப்பேரவை செயலகத்தில் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில், சபாநாயகர் மீதான தீர்மானம் ஜூலை 1ஆம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கருதப்பட்டது. ஆனால், தற்போது அந்தத் தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லையென தி.மு.க. அறிவித்திருக்கிறது.
தீர்மானம் கொண்டுவந்தது ஏன்?
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள் முடிவடைந்து, முடிவுகள் வெளிவராமல் இருந்த காலகட்டத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தி.மு.க. அறிவித்தது.
22 தொகுதிகளுக்கு நடந்து முடிந்திருந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.கவிற்கு போதுமான இடங்கள் கிடைக்காவிட்டால் சபையின் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் பெரும்பான்மையை பெற அ.தி.மு.க. திட்டமிடுவதாக தி.மு.க. கருதியது.
அதற்காகத்தான், தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் கருதப்பட்டது.
இதற்குப் பிறகு அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டலாம் என்ற கருத்து இருந்தது.
சபாநாயகரின் இந்த நடவடிக்கையைத் தடுக்கும் நோக்கத்தில், தி.மு.க. அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிலுவையில் உள்ளபோது, அவரால் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை மனதில் கொண்டு தி.மு.க. இதனைச் செய்தது.
சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளில், அ.தி.மு.க. 9 இடங்களில் வெற்றிபெற்றதன் மூலம் பெரும்பான்மையைத் தக்கவைத்தது. ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரது ஆதரவு இல்லாவிட்டாலும்கூட அ.தி.மு.க. அரசுக்கு பெரும்பான்மை இருக்கும்.
இந்தப் பின்னணியில்தான் சபாநாயகர் தனபால் மீது தாங்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் திரும்பப் பெறுவதாக தி.மு.க. அறிவித்திருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 234. 2 இடங்கள் காலியாக இருப்பதால் பேரவையின் பலம் 232ஆகக் குறைந்துள்ளது. ஆகவே அறுதிப் பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு ஆளும் அ.தி.மு.கவின் பலம் சபாநாயகரோடு சேர்த்து 123ஆக உள்ளது. தி.மு.கவிடம் 100 உறுப்பினர்களும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசிடம் 7 உறுப்பினர்களும் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்