இந்தியாவிலேயே முதல் முறை அமைக்கப்பட்ட சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அங்கீகாரம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: "சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அங்கீகாரம்"
நூற்றாண்டைக் கடந்து தரமான வானிலை தரவுகளை வழங்கி சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அளவிலான அங்கீகாரத்தை உலக வானிலை ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்தியாவில் முதல்முறையாக 1792-ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. அன்று முதல் புயல், கனமழை, குளிர் மற்றும் வெப்பநிலை பல்வேறு முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது.

பட மூலாதாரம், Balaji Jagadesh
இந்த மையம் சுமார் 140 ஆண்டுகளுக்கும் மேலாக, வானிலை விவரங்களை ஒரு நாள்கூட தவறாது பதிவு செய்து வருகிறது. இதன் நூற்றாண்டை கடந்த வானிலை சேவையை உலக வானிலை ஆய்வு நிறுவனம் அங்கீகரித்து, சான்றளித்து, கௌரவித்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த 18-ஆவது உலக வானிலை காங்கிரஸ் மாநாட்டில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்," என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்"

பட மூலாதாரம், Getty Images
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம் விதிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசின் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தாததால், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.
இந்நிலையில், பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மேலும் துரிதப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
சிறிய கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் முதல் முறை ரூ.100, 2-வது முறை ரூ.200, 3-வது முறை ரூ.500 என அபராதம் வசூலிக்கப்படும். அதன் பிறகும் தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வீடுகளில் பயன்படுத்தினாலும் அபராதம் வசூலிக்கப்படும். பிடிபடுவது முதல் முறையாக இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும்," என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'ஒரே நாடு; ஒரே தேர்தல்'
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க, இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி ஜூன் 19 அன்று கூட்டியுள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
17வது மக்களவை தேர்வான பின் நடக்கும் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடர்பாக அரசியல் கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர்களுடன் ஞாயிறன்று நடந்த விவாதத்தின்போது, நரேந்திர மோதி இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் என்று நாடாளுமன்ற விவாகரத் துறை அமைச்சர் ப்ரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார் என்று விவரிக்கிறது அந்த செய்தி.

இந்து தமிழ் - "நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்"

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா டாக்டர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் இன்றுவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு மட்டும் செயல்படாது என்று தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பணியில் இருந்த டாக்டர்கள் மீதுதாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த 2 டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலைக் கண்டித்து, அம்மாநிலம் முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 24 மணி நேரம் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு நாடுமுழுவதும் டாக்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












