You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விமானத்தை கடத்தியதாக போலிக் கடிதம் எழுதியவருக்கு ஆயுள் சிறை
2017ஆம் ஆண்டு, மும்பையிலிருந்து டெல்லி வந்த ஜெட் விமானத்தின் கழிவறையில் போலியான கடத்தல் கடிதம் எழுதி வைத்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜூ சல்லா, மும்பையிலிருந்து டெல்லிக்கு செல்லும் ஜெட் விமானத்தில் பயணித்தார். அப்போது, அந்த விமானத்தை கடத்த உள்ளதாக கழிவறையில் அவர் ஒரு கடித்தை எழுதி வைத்தார்.
அக்கடிதத்தில், விமானத்தில் 12 கடத்தல்காரர்கள் இருப்பதாகவும், பல்வேறு வெடிபொருட்கள் இருப்பதாகவும் எழுதியிருந்தது. அதனால், விமானத்தை உடனடியாக பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீருக்கு திருப்புமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
அக்கடிதத்தை எழுதியதை அவர் பின்பு ஒப்புக்கொண்ட சூழலில், அவசர நிலையில் அகமதாபாத் நகரில் விமானம் தரையிரக்கப்பட்ட பிறகு, அதிலிருந்த சல்லா கைது செய்யப்பட்டார்.
சம்பவம் நடந்த நேரத்தில், ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த சல்லாவிற்கு, ஜெட் விமான பணிப்பெண் ஒருவருடன் காதல் இருந்தது தெரிய வந்தது. மும்பையில் வாழ்ந்து வந்த அப்பெண்ணை தன்னோடு இணைந்து வாழ அவர் டெல்லிக்கு அழைத்ததாகவும், அதை அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், விமான நிறுவனத்துக்கு அவப்பெயர் வரும் வகையில் இதைச்செய்தால், அவரின் வேலை பறிபோவதுடன், தன்னோடு டெல்லியில் இணைந்து வாழ்வார் என்று சல்லா எதிர்பார்த்ததாகவும் கூறப்பட்டது. விமான நிறுவனத்துக்கு அவப்பெயர் கொண்டுவரவே இவ்வாறு செய்ததாக அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கடத்தல் தடுப்பு பிரிவின்கீழ் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில், அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விமான கடத்தலுக்கு எதிரான சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள முதல் நபர் இவரே. இச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டால், சம்மந்தப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை முதல் தீவிரமான வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சல்லா நேரடியாக விமான கடத்தலில் ஈடுபடவில்லை என்றாலும், அவர் மிரட்டல் கடிதம் விடுத்ததே அவ்வாறு முயன்றதற்கு சமம் என்று இந்திய சட்டம் குறிப்பிடுவதாக விசாரணை அதிகாரி கூறினார் என ஏ.ஃப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 5 கோடி ரூபாய் அபராதத்தில், அந்த குறிப்பிட்ட விமானத்தை ஓட்டிய விமானிகளுக்கு தலா ஒரு லட்சமும், அப்போது விமானத்தில் பணியில் இருந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டுமென நீதிபதி தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட வருத்தங்களுக்காக இது வழங்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விமான சேவை நிறுவனமாக இருந்த ஜெட் நிறுவனம், பொருளாதார நெருக்கடி காரணமாக தனது அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் சேவைகளையும் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்