You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஞ்சன் கோகாய்: நீதித்துறை மீது நம்பிக்கை கொண்ட பெண்கள் வைக்கும் கோரிக்கை என்ன?
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி
நாட்டின் உயரிய நீதிமன்றத்தில் பணிபுரிந்த ஒரு பெண் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்துகிறார். அவர் பணியைவிட்டு செல்ல நேர்கிறது. அவரின் குடும்பமும் துன்புறுத்தலுக்கு ஆளாகுகிறது.
தலைமை நீதிபதி மீது அறிவித்த புகார் குறித்த விசாரணைக்கு பிறகு அந்த புகாரில் முகாந்திரம் இல்லை என கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்ல வேண்டும் என்று அந்த பெண் முடிவு செய்தவுடன், நீதிமன்றத்தின் மீதான அவரின் நம்பிக்கை எவ்வாறாக இருந்திருக்கும்? யாருடைய தலைமை மீது அவர் புகார் தெரிவிக்கவிருந்தார்?
ஆனால் அவர் நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் என நம்பினார். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்களை உருவாக்கியவர்களை அவர் நம்பினார்.
எனவேதான் அவர் பக்கசார்பற்ற விசாரணை கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதினார்.
அந்த குற்றச்சாட்டு பொதுவெளிக்கு வந்த பிறகு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அந்த குற்றச்சாட்டுகள் தவறு எனவும் அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக சொல்லப்படுகின்ற ஒன்று எனவும் தெரிவித்தார். மேலும் அதுகுறித்து தான் பதில் ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்
அதன்பிறகு புகார் தெரிவித்த பெண்ணுக்கு ஆதரவாக பல பெண் வழக்குரைஞர்கள் நின்றனர். உச்சநீதிமன்றம் மீது அழுத்தம் ஏற்பட்டது. அதன்பிறகு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது..
அந்த விசாரணைக்குழு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதன் உறுப்பினர்கள் குறித்து, தலைமை குறித்து மற்றும் விசாரிக்கும் முறை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. புகார் தெரிவித்த பெண் தனது அதிருப்தியை தெரிவித்தார் இருப்பினும் கமிட்டி முன் ஆஜரானார்.
அதன்பின் அந்த பெண் பயந்தவுடன் விசாரணையில் இருந்து விலகிவிட்டார். முறையான விசாரணையை கோரினார்.
எனவே அந்த விசாரணைக்குழு அவர் இல்லாமல் விசாரணை நடத்த முடிவு செய்தது. அதன்பின் அந்த புகாரில் முகாந்திரம் இல்லை என்று தெரிவித்தது.
`இது ஒரு அநீதி` என்றும், `தனது மோசமான கனவு நிஜமாகிவிட்டது` என்றும், நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்கும் விளிம்பில் அவர் இருப்பதாக புகார் தந்த பெண் தெரிவித்தார்
அதன்பின் பெண் ஆர்வலர்கள் பலர் ஒன்றுகூடினர். உச்சநீதிமன்றம் முன்பு அமைதியாக நின்று சார்பற்ற விசாரணையை கோரினர்.
மீண்டும் நம்பிக்கை வந்தது. புகார் தெரிவித்த பெண், பல ஆதாரங்களை வழங்கியபோதும், அதில் ஏன் முகாந்திரம் இல்லை என்று தெரிவித்தனர் என்பதை தெரிந்துகொள்ள விசாரணை அறிக்கையின் நகலை கோரி உச்சநீதிமன்ற கமிட்டிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
மீண்டும் மீண்டும் அவர் உச்சநீதிமன்றத்துக்கு சென்றார். அங்கு அவருடன் பல பெண்கள் சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் இவரைப் போலவே முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரினர்.
இந்த அனைத்து பெண்களும் நீதித்துறையின் விசாரணை முறை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக நின்ற அதே பெண்கள்கூட்டம்தான் இவர்கள்.
தனது வழக்கில் சாட்சியங்கள் அழிக்கப்படாலம் என்று பயந்த பில்கிஸ் பானு விசாரணையை மும்பைக்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
நீதித்துறை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை வென்றது. அந்த விசாரணை மாற்றப்பட்டது. 2008ஆம் ஆண்டு 11 பேர் மீது பில்கிஸை கூட்டு பாலியல் வல்லுறவு செய்தது மற்றும் அவரின் குடும்பத்தினரை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அதன்பின் 2017ஆம் ஆண்டு ஐந்து போலீஸார் மற்றும் இரண்டு மருத்துவர்கள் சாட்சியங்களை அழித்தாக குற்றம் சுமத்தப்பட்டனர். அதுகுறித்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது அது தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனை அடுத்து மூன்றாவது முறை பில்கிஸின் நம்பிக்கை வென்றது இந்த வருடம். குஜராத் அரசு அவருக்கு 50 லட்சம் இழப்பீடு, அரசாங்க வேலை மற்றும் ஒரு வீடு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிக்கான இந்த நீண்டநாள் போராட்டத்தில் தனது கணவர் மற்றும் பல பெண்கள் தனக்கு ஆதரவாக இருந்ததாக பில்கிஸ் தெரிவித்தார். பில்கிஸின் வழக்குரைஞர் மற்றும் டெல்லி, குஜராத்தில் உள்ள ஆர்வலர்கள்.
அவர்கள் தந்த ஆதரவுதான் இந்த 17 வருட போராட்டத்தில் பில்கிஸ் நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை வலுவாக்கியது.
நீதித்துறை மனித உரிமைகளே முக்கியம் என்று கருதுகிறது. எனவேதான் ஒவ்வொரு சட்டத்தை செயல்படுத்தும்போதும், ஒவ்வொரு முடிகளிலும் குடிமக்களின் அரசமைப்பு உரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
அதனால்தான் 350 பெண்கள் மற்றும் பெண் அமைப்பினர் சிலர், நீதிமன்றம் பல கேள்விகளுக்கு உள்ளாகியுள்ள சமயத்தில், விசாரணை முறை எவ்வாறு மாறுபடலாம் என கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
"உச்சநீதிமன்றத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், நீதியின் பக்கம் பேசுங்கள். நீதித்துறையை சேர்ந்த பலரால் கவனமாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்" என அந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பெண்கள் அனைவரும் தங்களின் நம்பிக்கை நிலைக்க நீதித்துறையின் உதவியை கோருகின்றனர்.
இந்த பெண்கள் மட்டுமல்ல பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டின் ப்ளாஸி ஃபோர்டும் இந்த மாதிரியான ஒரு நம்பிக்கை வைத்திருந்ததற்கான ஒரு எடுத்துக்காட்டு.
அவர் நீதிபடி பிரெட் கவநாவ் 1980ஆம் ஆண்டு தனக்கு, 17 வயது இருக்கும்போது தன்னை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாக குற்றம் சுமத்தினார்.
பல வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றதாக சொல்லப்படும் ஒரு சம்பவத்தை அவர் ஏன் இப்போது வெளியில் சொல்ல வேண்டும்? இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பினர்
ஆனால் ஃபோடின் நம்பிக்கை மாறவில்லை. 36 வருடங்களுக்கு முன் நடைபெற்ற அந்த சம்பவம் தனது வாழ்க்கையை பெரிதும் பாதித்துவிட்டதாகவும், ப்ரெட் கவநாவின் நியமனம் குறித்து அமெரிக்க செனட் வாக்களிக்கவுள்ளதால் இந்த விஷயத்தை தற்போது பொதுவெளிக்கு கொண்டு வரவேண்டிய கட்டாயத்துக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை கனநாவ் மறுத்திருந்த நிலையில், செனட்டின் நீதி கமிட்டி இருதரப்பையும் விசாரிக்க முடிவு செய்தது
ஒன்பது மணி நேரம் நடைபெற்ற அந்த விசாரணையில், ஃபோர்ட் அனைத்து தரப்பான கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவருக்கு நினைவில் இருந்த அனைத்தையும் அவர் விசாரணையில் பேசினார். அதில் சில தகவல்களை மறந்துவிட்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டார்.
இறுதியில், எஃப்பிஐ விசாரணையில்கூட ப்ரெட் கவநோவை குற்றம் செய்தவர் என்று கூறமுடியவில்லை. அவருக்கு ஆதரவாகதான் செனட்டும் வாக்களித்தது
ஆனால் விசாரணை முறையில் பேராசிரியர் ஃபோர்டின் நம்பிக்கை நிலைத்தது, தீர்ப்பு வந்த சில மாதங்களுக்கு பிறகு அவர் கடிதம் ஒன்றை எழுதினார்.
"இது எனக்கு மிக கடினமாக இருந்தது. ஆனால் எனது கடமையை நான் நிறைவேற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது குறித்து நன்றியுடன் உணர்கிறேன். தைரியமான பல பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது" என்று அதில் குறிப்பிட்டார்.
இந்திய பெண்களைப்போலவே, அவர் தனது நம்பிக்கைக்கு உறுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்