You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எரிந்த ரஷ்ய விமானம்: மின்னல் தாக்கியதால் நிகழ்ந்த விபத்தா?
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாகத் தரையிறங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அந்த விமானத்தில் இருந்த 78 பேரில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் மின்னல் தாக்கியதை அடுத்தே அவசரமாகத் தரையிறங்க முயன்று விபத்தில் சிக்கியதாக உயிர் தப்பிய விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் தற்போது தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் தாங்கள் தப்பியது எப்படி என்பதைப் பற்றி கூறும்போது மின்னல் தாக்கியதால் விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், விபத்துக்கான காரணத்தை ஆராயும் அதிகாரிகள் இன்னமும் மின்னல் தாக்கி விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுவது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
நவீன விமானங்கள் மின்னல் தாக்குதல்களைத் தாங்கும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன. மாஸ்கோவின் ஷெரமெட்யேவோ விமான நிலையத்தில் இருந்து வடக்கு ரஷ்ய நகரமான முர்மான்ஸ்க் நோக்கிப் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் காரணங்களால் உடனடியாக விமான நிலையத்துக்குத் திரும்பி தரையிறங்கியதாக அந்த விமானத்தை இயக்கிய அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏரோஃபிளாட் அறிவித்தது.
விபத்துக்குள்ளான விமானம் சுகோய் சூப்பர்ஜெட்-100 வகையை சேர்ந்தது.
விமானத் தரவுகளையும், விமானி அறையான காக்பிட்டில் நடக்கும் உரையாடல்களையும் பதிவு செய்யும் கறுப்புப் பெட்டி மீட்டெடுக்கப்பட்டு விசாரணையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விமானம் பறக்கத் தொடங்கிய உடனே மின்னல் தாக்கியதாக உயிர் தப்பிய பயணியான பையோடர் யெகோரோவ் என்பவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மின்னல் தாக்குவதால் விமானம் வீழுமா?
பல லட்சக்கணக்கான வணிக விமானங்கள் ஒவ்வோர் ஆண்டும் வானத்தில் பறக்கின்றன. இப்படி நடக்கும் விமானப் பயணங்களின்போது மின்னல் வருவது சகஜமானதாகும்.
பாரம்பரியமான விமானங்கள் அலுமினியம் கொண்டு கட்டப்படுகின்றன. இவை வழக்கமாக மின்னல் தாக்குதல்களை தாங்கி நிற்பவை. விமானத்தின் வெளிக்கூடு மின்னல் தாக்கும்போது பாயும் மின்சாரத்தை எல்லா இடத்துக்கும் பரப்பி, அதன் மூலம் விமானத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாக்கக்கூடியவை. இதனால், பயணத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
ஆனால், சில புதிய விமானங்கள் கார்பன் இழை போன்ற லேசான பொருள்களைக் கொண்டு கட்டப்படுகின்றன. இந்தப் பொருள்கள் அவ்வளவாக மின்சாரத்தை கடத்தாதவை. ஒயர் வலை அல்லது இழை கொண்டு இத்தகைய விமானங்களின் மேற்கூட்டைப் பாதுகாக்கவேண்டும்.
இது தவிர, விமானத்தின் எரிபொருள் டேங்க்கின் மின்னணு அமைப்புகள் மற்றும், இணைப்புகள் வெளியில் இருந்து மின் தாக்குதலுக்கு உள்ளாகாத வகையில் உறுதியான முறையில் வலுவாக பாதுகாக்கப்பட்டிருக்கும்.
சில நேரங்களில் மின்னல் தாக்குவதால் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை திசை திருப்ப அல்லது அவசரமாகத் தரையிறக்க வேண்டிய தேவை ஏற்படலாம். ஆனால், இதனால், விமானம் கீழே மோதி விபத்துக்குள்ளாவது மிக அரிது.
எப்படியானாலும், விமானத்தை மின்னல் தாக்கும்போது விமானத்துக்குள் இருப்பவர்களால் இதைப் பார்க்க முடியும். பெருத்த இடியோசையை அவர்கள் கேட்கமுடியும். அல்லது விமானத்தின் உட்புறம் திடீரென கண்ணைக் கூசவைக்கும் ஒளியால் நிரம்பும்.
இதற்கு முன்பு சுகோய் சூப்பர்ஜெட்-100 ரக விமானம் விபத்தில் சிக்கியது 2012ல் இந்தோனீசியாவில்தான். அப்போது விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். மனிதத் தவறினால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்