You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முஸ்லிம்களின் வீடுகளின் கீழ் இந்து கோயில்கள் கண்டெடுக்கப்பட்டதா? #BBCFactCheck
- எழுதியவர், உண்மை பரிசோதனை குழு,
- பதவி, பிபிசி
பிரதமர் நரேந்திர மோதியின் காசி-விஸ்வநாதர் சாலைத் திட்டத்திற்கு 80 முஸ்லிம் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாக கூறி, பல இடிந்துபோன பண்டைய கட்டிடங்களை கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அவ்வாறு பகிரப்பட்டு வரும் காணொளியின் விளக்க பகுதியில், "காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து கங்கை நதிக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, அவ்வழியே உள்ள 80 முஸ்லிம்களின் வீடுகளை கையகப்படுவதற்கு பிரதமர் மோதி உத்தரவிட்டார். அதன்படி, அங்கிருந்த முஸ்லிம்களின் வீடுகளை பிடித்தபோது, அதற்கு கீழ் 45 பழமையான கோயில்கள் கண்டெடுக்கப்பட்டன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோதியின் கனவு திட்டமான காசி - விஸ்வநாதர் சாலைத் திட்டம், 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்மிக்க காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் எளிதாக கங்கை நதிக்கு செல்வதை சாத்தியமாக்குகிறது.
பிரதமர் மோதியின் வாரணாசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது.
இந்த காணொளி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.
இந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து பரிசோதித்தபோது, அது தவறானது என்று தெரியவந்துள்ளது.
செய்தியின் உண்மைத்தன்மை
இந்த சாலை விரிவாக்க திட்டத்திற்கான பணிகளை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சிறப்பு மேம்பாட்டு ஆணையம் நிர்வகித்து வருகிறது.
இந்த காணொளியில் உண்மை தன்மை குறித்து தெரிந்து கொள்வதற்காக அந்த ஆணையத்தின் தலைமை செயலதிகாரி விஷால் சிங்கிடம் பேசினோம்.
"இந்த சாலை விரிவாக்க திட்டத்திற்காக நாங்கள் கையப்படுத்திய 249 வீடுகளும் இந்து சமயத்தை சார்ந்தவர்களுக்கு சொந்தமானது. அவற்றில் இதுவரை 183 வீடுகளை இடித்துள்ளதில், சிறியது முதல் பெரியது வரை மொத்தம் 23 கோயில்களை கண்டறிந்துள்ளோம்" என்று விஷால் பிபிசியிடம் கூறினார்.
இந்த பகுதிக்கு அருகில் மசூதி ஒன்று உள்ளது. ஆனால், இந்த சாலைத் திட்டத்திற்காக முஸ்லிம்களின் வீடுகள் ஏதும் இடிக்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
'குடியிருப்புவாசிகள் விரும்பவில்லை'
காசி விஸ்வநாதர் கோயிலை கங்கையுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், பண்டைய நகரத்தை மறுசீரமைப்பதற்கு பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
ஆலயத்தை சுற்றியுள்ள பாதையை விரிவுபடுத்துவதற்காக வீடுகள் மற்றும் கடைகளை இடிப்பது தவிர்த்து, கங்கையை ஒட்டிய பகுதிகளை சீரமைப்பது, பக்தர்களுக்கான ஓய்வறைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் அரங்குகள் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கு இதன் மூலம் திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, உணவுகளுக்காகவே ஒரு தெரு, பூசாரிகள், பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் போன்றவற்றை கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் காரணமாக தங்களது வீடுகள் இடிக்கப்படுவது வருத்தத்தை ஏற்படுத்துவதாக பிபிசியிடம் பேசிய பொது மக்கள் தெரிவித்துள்ளனர். "இந்த குறுகிய பாதைகளை பார்ப்பதற்காக தான் மக்கள் வாரணாசிக்கு வருகின்றனர். அவை அழிக்கப்படும் பட்சத்தில் வாரணாசியின் கதையும் அவ்வளவுதான்" என்று காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு வாரணாசியை ஆன்மீக தலத்திலிருந்து சுற்றுலாத்தலமாக மாற்றுவதை எதிர்ப்பதாக தெரிவித்து பல இந்து அமைப்புகள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்