இது வாஜ்பேயின் இறுதி ஊர்வலமா? மோதியின் வேட்புமனுத் தாக்கலா? #BBCFactCheck

    • எழுதியவர், உண்மை சரிபார்க்கும் குழு,
    • பதவி, பிபிசி

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மிகப் பெரிய கூட்டத்தினருடன் சென்று வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்குதல் செய்வதாக கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அவ்வாறு பகிரப்பட்டு வரும் காணொளிகளில், " பிரதமர் நரேந்திர மோதி தனது ஆதரவாளர்களுடன் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த காணொளியில், பிரதமர் நரேந்திர மோதியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், மலரால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஒன்றிற்கு பின்பாக வருவதை காண முடியும். அவர்களை பாதுகாப்பு படையினரும், பெருந்திரளான ஆதரவாளர்களும் பின்தொடர்ந்து வருவதையும் அதில் காண முடியும்.

நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோதி வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு இந்த காணொளி வைரலானது.

சுமார் இரண்டு நிமிடங்கள் நீடிக்கும் இந்த காணொளி, சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

இதே காணொளி, இரண்டு வாரங்களுக்கு முன்பாக வேறுபட்ட விளக்கங்களுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. ஆனால், அப்போது மோதி வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.

"இதற்குதான் வேட்மனுத் தாக்கல் என்று பெயர். உங்களது கண்களை திறந்து, ஒரு சிங்கம் எப்படி நடக்குமென்று பாருங்கள்" என்று அந்த காணொளி விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள வேறுபட்ட விளக்கங்களுடன் தொடர்ந்து பகிரப்பட்டு வரும் காணொளிக்கும், நடந்து வரும் மக்களவைத் தேர்தலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது.

காணொளியின் உண்மைத்தன்மை

இந்த காணொளி இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயியின் இறுதி ஊர்வலத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

அந்த காணொளியில் காணப்படும் மலரால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் உடல் அடக்கம் செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டது.

வாஜ்பேயி இறுதி ஊர்வலம் குறித்த தகவல்களை இணையத்தில் தேடியபோது, தற்போது வைரலாகி வரும் காணொளியில் உண்மைத்தன்மை தெரியவந்தது.

2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் தேதி வாஜ்பேயி உயிரிழந்தார். அவரது உடல் அடுத்த தினமே அடக்கம் செய்யப்பட்டது.

வாஜ்பேயி உயிரிழப்பதற்கு ஒன்பது வாரங்களுக்கு முன்னர் உடல்நல குறைபாட்டின் காரணமாக டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

"அடலின் மறைவுக்கு இந்தியாவே வருந்துகிறது. அவரது இறப்பு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவர் தேசத்துக்காகவே வாழ்ந்தார்" என்று பிரதமர் மோதி வாஜ்பேயின் மறைக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

1996ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அழைப்பு விடுத்ததன் பேரில் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான அரசு பதவியேற்றது. எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 13 நாட்களில் வாஜ்பேயி பதவி விலகினார்.

1998இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் பிரதமானார் வாஜ்பேயி. எனினும் 13 மாதங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரவை விலக்கிக்கொண்டதால், வாஜ்பேயி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

செப்டம்பர் 1999இல் நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று, வாஜ்பேயி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தது. 2004 செப்டம்பர் மாதம் வரை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருந்த நிலையில், தொடர்ச்சியாக சில மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வென்றதால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, நான்கு மாதங்கள் முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் அதில் பாஜக தோல்வி அடைந்தது.

அவர் கடைசியாக போட்டியிட்ட 2004 தேர்தலில், லக்னோ மக்களவைத் தேர்தலில் வாஜ்பேயி வெற்றி பெற்றிருந்தாலும், கூட்டணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :