திமுக - அதிமுக: கோடீஸ்வர வேட்பாளர்களை அதிகம் களம் இறக்குவது யார்?

சொத்து விவரம்

பட மூலாதாரம், Getty Images

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, உத்தர பிரதேசம், அசாம், பிகார், ஒடிஷா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது.

இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, சொத்து பின்னணியை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை இங்கே வழங்குகிறோம்.

குற்றப்பின்னணி

மக்களவை இரண்டாம் கட்டத் தேர்தலில் 1644 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றும், அதில் 1590 வேட்பாளர்களின் பின்னணி ஆய்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. மீதமுள்ள 54 வேட்பாளர்களின் தகவல்கள் பிரமாண பத்திரத்தில் முழுமையாக இல்லாததால் அவை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்கிறது அந்த அமைப்பு வெளியிட்டுள்ளா அறிக்கை.

இந்த 1590 வேட்பாளர்களில் 423 (27%) வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள், 251 வேட்பாளர்கள் அதாவது 16 சதவீதத்தினர் குற்றப்பின்னணி உடையவர்கள், 167 (11%) தீவிரமான குற்றப்பின்னணி உடையவர்கள் என்கிறது அந்த அமைப்பின் ஆய்வறிக்கை.

இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் பாரதிய ஜனதா சார்பாக போட்டியிடும் 51 வேட்பாளர்களில் 16 பேர் குற்றப்பின்னணி உடையவர்கள். அதுபோல, இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக 53 வேட்பாளர்களில் 23 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள், பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக போட்டியிடும் 80 வேட்பாளர்களில் 16 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள், சிவ சேனா சார்பாக போட்டியிடும் 11 வேட்பாளர்களில் 4 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள்.

அதிமுக சார்பாக 22 வேட்பாளர்களில் 3 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள், திமுக சார்பாக போட்டியிடும் 24 வேட்பாளர்களில் 11 பேர் அதாவது 46% குற்றப்பின்னணி உடையவர்கள்.

கோடீஸ்வரர்கள்

edapaddy palaniswamy M K Stalin

பட மூலாதாரம், Facebook

இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் 53 வேட்பாளர்களில் 46 பேர் கோடீஸ்வரர்கள், பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடும் 51 வேட்பாளர்களில் 45 கோடீஸ்வரர்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக போட்டியிடும் 80 வேட்பாளர்களில் 21 பேர் கோடீஸ்வரர்கள்.

திமுக சின்னத்தில் போட்டியிடும் 24 வேட்பாளர்களில் 23 பேர் கோடீஸ்வரர்கள். அதாவது 96 சதவீதம்

அதிமுக சின்னத்தில் போட்டியிடும் 22 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள். அதாவது 100 சதவீதம்.

பணக்கார வேட்பாளர்

அதிக சொத்துள்ள வேட்பாளரும், அதிக கடன் வைத்திருக்கும் வேட்பாளரும் ஒருவரே. அவர் தமிழகத்தை சேர்ந்தவர், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வசந்தகுமார்.

அவரின் சொத்து மதிப்பு ரூ 417 கோடி.

அவர் வைத்திருக்கும் கடன் 154 கோடி.

காணொளிக் குறிப்பு, ‘மோதியின் நண்பருக்காக கன்னியாகுமரியில் உடைக்கப்படும் மலைகள்’ - எச். வசந்தக்குமார்

ஏழை வேட்பாளர்

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், ECI

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சொத்து மதிப்பை தாக்கல் செய்தவர்களில் மிகவும் குறைவான சொத்துடையவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர் மகா சுவாமிஜி என்கிற கடக்டோண்ட். அவரின் சொத்து மதிப்பு வெறும் 9 ரூபாய்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :