தமிழ்நாட்டில் எஞ்சிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு

பட மூலாதாரம், AFP
தமிழ்நாட்டில் காலியாக இருந்த சட்டமன்றத் தொகுதிகளில் ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகள் போக மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தவிர, உறுப்பினர் மரணம் போன்ற காரணங்களால் மேலும் சில தொகுதிகளும் காலியாக இருந்தன.
இவற்றில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், திருவாரூர் ஆகிய 18 தொகுதிகளுக்கு தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நாளிலேயே, அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் அதாவது மே 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது. 30ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. மே 2ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியாக உள்ள 4 தொகுதிகளிலும் தேர்தலை நடத்த வேண்டுமெனக் கோரி தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. மனு அளித்திருந்தது. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தது.
கர்நாடகத்தில் குண்ட்கோல் தொகுதிக்கும் கோவாவில் பனாஜி தொகுதிக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












