'பிரேமலதா சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது' - எடப்பாடி பழனிசாமி

தேமுதிக - அதிமுக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி முதல்வரை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, அலுவலகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வரை சந்திக்கலாம், ஜனநாயக நாட்டில் ஒரு முதலமைச்சரை குடிமகன் யார் வேண்டுமானாலும் அவர்களது குறைகளை முறையிடும் பொருட்டு சந்திக்கலாம் அதன் அடிப்படையில் என்னை கே.சி.பழனிசாமி சந்தித்தார் என்று தெரிவித்தார்.

நாற்பது நாடாளுமன்ற தொகுதிக்காகவும் விருப்ப மனு அளிக்கப்பட்டவர்களை திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகள் சந்தித்து நேர்காணல் செய்ய இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவையில் நடைபெற்ற மாநாட்டில், அதிமுக ஆட்சியினை கமிஷன் ஆட்சி என்று விமர்சித்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு இப்படி பேசி பேசித்தான் கம்யூனிஸ்ட்டுகள் அரை பர்சென்ட் ஓட்டு வாங்குகிறார்கள், கூட்டணி இல்லையென்றால் அவர்கள் கட்சியே காணாமல் போயிருக்கும் என்றார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி "மோடி எங்கள் டாடி" என்று கூறியது குறித்து கேட்டபோது, கூட்டணி அமைத்து விட்டால் அவர்களோடு ஒன்றி இணக்கமாக ஆகிவிட வேண்டும் என்றார்.

திமுக, அதிமுகவினர் மீது வைக்கின்ற விமர்சனங்களுக்கு பதிலளித்த முதல்வர், இந்தியாவிலேயே ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது திமுக ஆட்சிதான், அவர்கள் எங்களை ஊழல் கட்சி என்பது வேடிக்கையாக இருக்கின்றது, ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூற வேண்டும் என்றார்.

பாஜகவை மதவாத கட்சி, மக்கள் விரோத கட்சி என்றெல்லாம் விமர்சிக்கும் திமுக, 1999ல் அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு, பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தது. ஐந்து ஆண்டுகள் கூட்டணி மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து பலனை அனுபவித்தவர்கள் இப்பொழுது எங்களை விமர்சிக்கின்றனர். ஈழப்படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் கட்சியினரோடு, திமுக கூட்டணி வைப்பது வெட்கக் கேடானது என்று விமர்சித்தார் பழனிசாமி.

பல்லாயிரக்கணக்கான கோடி திட்டங்களை பாரத பிரதமர் தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை திறந்து வைத்தது முதல், தமிழக மக்களின் நலனுக்காக பல முறை தமிழகத்திற்கு வந்து பல நல்ல திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இதனை பொறுக்க முடியாத ஆத்திரத்தில் எதிர்க் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர் என்றார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா அதிமுகவின் 37 எம்.பிக்களால் தமிழகத்திற்கு எந்தப் பலனும் இல்லை என்று சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கின்றது. மத்தியிலும், மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் , கூட்டணி கட்சியில் பிரதமர் இல்லாததால் 37 எம்.பிக்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றுதான் பிரேமலதா கூறியிருக்கிறார், அவர் கூறியதன் கருவை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :