“அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானது” - சுதீஷ்

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் இறுதியாகும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.
புதன்கிழமை மதியம் 2.50 மணிக்கு தேமுதிக துணை செயலாளர் சுதீஷுடன், பியூஷ் கோயல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், மத்திய அமைச்சர்பியூஷ் கோயல் நேற்று இரவு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன் பேரில் இன்று அவரை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறினார்.
"கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசினோம். பிரதமர் மோதியின் பொதுக்கூட்டம் நடக்கிறது என்பதால், அவர்களுக்கு இன்று பேச போதிய நேரமில்லை. மீண்டும் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குவோம்" என்றும் சுதீஷ் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Twitter
திமுக சார்பில் அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து துரைமுருகனுடன் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது தனிப்பட்ட விஷயம் என்றும் தங்கள் கட்சியின் பலம் என்னவோ அதற்கான தொகுதிகளை நாங்கள் கேட்கிறோம் என்றும் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ் கூறினார்.
அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது என்றும் ஓரிரு நாட்களில் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
கடந்த பல வாரங்களாக தேமுதிகவுடன் பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற கேள்வி நிலவிவந்த நிலையில், திமுக தொகுதி பங்கீடு நிறைவடைந்ததாக நேற்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதன் மூலம் திமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்பது உறுதியானது.

பட மூலாதாரம், Twitter
இன்று காலையிலிருந்தே தேமுதிகவுக்கும், அதிமுகவுக்கும் பேச்சுவார்த்தை நடந்து வந்தன.
இன்று பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மதியம் 4 மணி அளவில் நடக்கிறது.
இது தொடர்பாக வெளியான நாளிதழ் விளம்பரங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் பெயரும் புகைப்படமும் இடம்பெற்றன.
அதில் தேமுதிக தொடர்பாக எந்த தகவல்களும் இல்லை.

பட மூலாதாரம், ADMK Alliance
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












