காஷ்மீரில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் குடும்பத்துக்கு என்னென்ன உதவிகள் கிடைக்கும்? #BBCFactCheck

    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி உண்மை கண்டறியும் குழு

புல்வாமாவில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு இந்திய நாடு முழுவதும் அனுதாப அலை வீசுகிறது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உயிரிழந்த நாற்பதுக்கும் அதிகமான வீரர்கள் மற்றும் அவரது குடும்பம் மீது சமூக வலைத்தளங்களில் அனுதாப அலை இருக்கிறது.

இதனால் உயிரிழந்த வீரர்கள் மற்றும் குடும்பங்களுக்கு கிடைக்கும் உதவிகள், நிதி உதவிகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு நபர்கள் பல கருத்துகளை பகிர்ந்துவருகிறார்கள். ஆனால் அவர்கள் பகிர்ந்து வரும் விஷயங்களில் பல்வேறு தவறுகள் இருக்கின்றன. பல உண்மைக்கு புறம்பாக புரிந்து கொள்ளப்பட்டவையாக உள்ளன.

குறிப்பாக இந்த வீரர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியப் பலன்கள் குறித்து விதவிதமாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் 75 சதவீதத்தினரின் குடும்பங்கள் பழைய 1972 ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இல்லை என்றும், இதனால் அந்நபர்களை பழைய பென்சன் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து உரிய பலன்களை அளிக்க வேண்டுமெனவும் பலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

''சி.ஆர்.பி.எஃப் மற்றும் பிற மத்திய காவல் படைகள் சிசிஎஸ் எனும் 1972-ன் மத்திய குடிமை பணிகள் திட்டத்தின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள். ஆனால் 2004-க்கு பிறகு சி.ஆர்.பி.எஃப் படையில் சேர்ந்த வீரர்கள் இந்த திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள்.

உயிரிழந்த 49 வீரர்களில் 23 பேர் 2004-ம் ஆண்டுக்கு பிறகுதான் சி.ஆர்.பி.எஃப் படையில் சேர்ந்துள்ளனர். இதனால் பென்சன் கிடைக்காது,'' என ட்விட்டரில் எழுதியுள்ளனர். ஆனால் இவர்கள் கூறுவது உண்மைக்கு மாறானதாக உள்ளது.

சி.ஆர்.பி.எஃப்பின் டிஐஜி மோசஸ் தினகரன் பிபிசியிடம் இதனை உறுதிப்படுத்தினார். ''எந்த தேதியில் அவர்கள் சேர்ந்திருந்தாலும், உயிரிழந்த அனைத்து வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் தாராளமய பென்சன் (Liberalized Pension Awards) திட்டத்தின் கீழ் கடைசியாக அவர்கள் பெற்ற சம்பளத்தொகையின் 100% மற்றும் அக விலைப்படி ஆகியவை கணக்கிட்டு வழங்கப்படும்,'' என்றார்.

''2004-க்கு முன்போ, பின்போ எப்போதாயிருந்தாலும் துணை ராணுவப் படையினர் இந்தியாவில் எங்காவது தாக்குதலில் கொல்லப்பட்டார் எனில் இந்த பென்சன் திட்டத்தின் கீழ் அவர்கள் சேர்க்கப்பட்டுவிடுவர்'' என்றார் சி.ஆர்.பி.எஃப்பின் செய்தி தொடர்பாளர்.

எஸ்.பி.ஐ இவர்களுக்கு பணம் தருகிறதா?

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தரப்போகும் பணம் இதுதான் என வெவ்வேறு தொகையை போட்டு பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

துணை ராணுவப் படையினர் திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்தால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உண்மையிலேயே பணம் வழங்குகிறது.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் அனைவரும் இந்த பேக்கேஜின் கீழ் வருவார் என சி.ஆர்.பி.எஃப் கூறுகிறது. இந்த திட்டம் ஓர் உயிர் காப்பீடு திட்டம் போன்றது.

உயிரிழந்த வீரர்களுக்கு கிடைக்கும் நிதி உதவிகள் எவை?

  • மத்திய அரசிடமிருந்து 35 லட்சம் ரூபாய் கிடைக்கும்
  • எஸ்.பி.ஐ 30 லட்சம் ரூபா வழங்குகிறது. கைம்பெண், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் தாராளமய பென்சன் திட்டத்தின் கீழ் மாத வருமானம் பெறுவார்கள். வீரர்கள் பெற்ற கடைசி சம்பளத்தின் அடிப்படையில் இந்த தொகை வேறுபடும்.
  • படைகளின் காப்பீடு திட்டங்கள் மூலமாகவும் பணம் வழங்கப்படும்.
  • மாநில அரசு வழங்கும் உதவி (இது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும்)
  • டெல்லி அரசு - ஒரு கோடி
  • ஹரியானா அரசு - 50 லட்சம்
  • மற்ற மாநில அரசுகள் 10 -30 லட்சம் வரை
  • உயிரிழந்த வீரர்களின் ரத்த உறவுகளுக்கு மாநில அரசுகள் நிலம் வழங்கலாம். குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படலாம்.

தியாகியா இல்லையா?

அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற குடிமகன்கள் உயிரிழந்த வீரர்களை தியாகிகள் என்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக அவர்கள் தியாகிகள் கிடையாது.

புல்வாமா தாக்குதல் நடந்த ஒரு வாரத்துக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஒரு ட்வீட் செய்தார் அது விமர்சனத்துக்குள்ளானது. ராகுல் காந்தி தனது ட்வீட்டில் 'உயிரிழந்த வீரர்கள் தியாகிகள். அவர்களது குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. நாற்பது சி.ஆர்.பி.எஃப் வீரர்களும் உயிரிழந்துள்ளனர் ஆனால் அவர்களுக்கு 'ஷஹீத்' (தியாகி) அந்தஸ்து கொடுக்கப்படவில்லை,'' என குறிப்பிட்டிருந்தார்.

தமது கட்சி வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றால் உயிர் நீத்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

சில வலதுசாரி இயக்கங்கள் ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்தன. சொரணையற்ற விதமாகவும் தியாகிகள் என உயிரிழந்த வீரர்களை ராகுல் காந்தி அங்கீகரிக்கவில்லை என்றும் எழுதின. ஆனால் ராகுல் காந்தியின் கூற்று உண்மையில் தவறானது அல்ல.

இந்தியர்களின் உணர்வை சி.ஆர்.பி.எஃப் படையின் முன்னாள் ஐஜி விபிஎஸ் பன்வார் பாராட்டுகிறார்.

''அந்த வீரர்கள் நாயகர்களாக நினைவு கூரப்படவேண்டும் . ஆனால், பலர் உண்மை நிலவரத்தை அறியாமல் தங்களது தேசப்பற்றை காண்பித்திருக்கிறார்கள்,'' என்றார்.

மேலும், '' பணியில் இருக்கும்போதே ஒருவர் தனது வாழ்வை இழந்தால் அவரை தியாகி என அழைக்க வேண்டுமென்பது பொது கருத்தாக இருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அவர்கள் தியாகிகள் என வகைப்படுத்தப்படுவதில்லை,'' என்கிறார் பன்வார்.

மேலும், ஒரு சண்டையில் இந்திய ராணுவ வீரர் இறந்தாலும் அவருக்கு தியாகிப்பட்டம் வழங்கப்படுவதில்லை'' என்றார்.

ஆக, தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இறப்பவர்களை அரசு 'தியாகி' என வகைப்படுத்தாவிட்டாலும் சமூகம் அவரை தொடர்ந்து தியாகியாக பார்க்கிறது.

காவல் படை அல்லது ராணுவ படையில் தியாகி என்ற சொல்லே கிடையாது என கடந்த 2017-ம் ஆண்டு மத்திய தகவல் ஆணையத்திடம் மோதி அரசு தெரிவித்துள்ளது.

பாராமிலிட்டரியா இல்லையா?

சி.ஆர்.பி.எஃப் மற்றும் பி.எஸ்.எஃப் படையினர் பாராமிலிட்டரி படையைச் சேர்ந்தவர்கள் என ஊடங்கங்கள் கூறுகின்றன, பொதுமக்கள் அவ்வாறே கருதுகிறார்கள். ஆனால் இது தவறான தகவல்.

ஆனால், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள ஏழு காவல் படையினரில் ஒரு பகுதியினர். இவர்கள்

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அதாவது மத்திய ஆயுத காவல் படையினர் என பொதுவாக குறிப்பிடப்படுவார்கள். சி.ஆர்.பி.எஃப், எல்லை பாதுகாப்பு படையினர் (BSF), மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை (CISF), தேசிய பாதுகாப்பு படை (NSG), இந்தோ திபத்தியன் எல்லை காவல் படை (ITBP) மற்றும் எஸ்.எஸ்.பி படை ஆகியவை மத்திய ஆயுத காவல் படை என குறிப்பிடப்படும்.

சி.ஆர்.பி.எஃப் படையினர்தான் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான காவல் படை. 1939-ல் Crown Representative Force ஆக உதயமானது. 1949 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் மூலமாக தற்போதைய பெயர் கிடைத்தது.

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்தான் மற்ற காவல் படைகளை காட்டிலும் நாட்டிலேயே அதிக உயிரிழப்புகளை சந்திக்கிறார்கள். ஏனெனில் காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிராகவும், சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுக்கு எதிராகவும் அவர்கள் சண்டையிடுகிறார்கள்.

கடந்த ஏப்ரல் 2010-ல் அவர்கள் மிகப்பெரிய உயிரிழப்பைச் சந்தித்தார்கள். சத்தீஸ்கரில் தண்டேவடாவில் மாவோயிஸ்டுகளால் 76 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 2014-லிருந்து தாக்குதல்களில் இதுவரை 176 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக சி.ஆர்.பி.எஃப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்பு, தேர்தல் நடக்கும் சமயங்களில் பாதுகாப்பு வழங்குவது, ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை ஒடுக்குவது, பல்வேறு மாநிலங்களில் விஐபிக்கு பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்டவை இதன் பணிகள். இரண்டு ஆஃப்ரிக்க நாடுகளில் ஐநாவின் அமைதிப்படையில் இவர்கள் பணியாற்றுகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சத்தின் கீழ்வரும் இந்திய ஆயுத படைகள் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை மட்டுமே.

நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்

முன்னாள் மத்திய ஆயுத காவல் படை வீரர் தங்களை துணை ராணுவப் படையினர் என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க கோரி போராடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

திரு. பன்வாரை பொருத்தவரையில் அவர்கள் பாராமிலிட்டரி படையினர் என அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நிதி சலுகைகள் கிடைக்கும். மேலும் தியாகி அந்தஸ்து வழங்கினால் சமூகத்தில் நிறைய மரியாதை கிடைக்கும் என்கிறார்.

அனைத்து இந்திய மத்திய துணை ராணுவப் படையின் முன்னாள் வீரர்கள் நல அமைப்பின் பொது செயலாளர் பி.எஸ்.நாயர், தங்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்கிறார்.

''ராணுவத்துக்கும் மத்திய ஆயுத காவல் படை உள்ளிட்ட படையினருக்கும் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் ஒரே முறைதான் கடைபிடிக்கப்படுகிறது, ஒரே மாதிரியான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இரு தரப்புக்கும் ஒரே விதமான உடல்தகுதி தேவை. மேலும் நாங்கள் களத்தில் ராணுவத்தினருக்கு சமமாகவே போராடவேண்டிய கடமை உள்ளது'' என்றார்.

''காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது தாங்கள் ராகுல்காந்தியை சந்தித்து அரசு அவர்களுக்கு துணை ராணுவப் படைகள் என்ற அந்தஸ்தை வழங்கி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் அது நடக்கவே இல்லை,'' என்கிறார் திரு. நாயர்.

சி.ஆர்.பி.எஃப்புக்காக 37 வருடங்களை செலவிட்ட வி.பி.எஸ் பன்வார், ''காவல் படை என அழைக்கப்படக்கூடாது. ஏனெனில் நாங்கள் காவல் நிலையத்தை ஒன்றும் நடத்துவதில்லை'' என்கிறார்.

''நாங்கள் காவல் துறை எனில் எதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும்? காவல்துறை என்பது மாநில விஷயம். பிறகு ஏன் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கிறோம்?'' என கேள்வி எழுப்புகிறார் பன்வார்.

தற்போது பணிபுரியும் அதிகாரிகளும் இந்த வாதத்தை ஏற்கின்றனர். ஆனால் இந்த விவாகரத்தில் தங்களது கூற்று பதிவு செய்யப்படக்கூடாது என்கின்றனர்.

மத்திய காவல் படையின் முன்னாள் மற்றும் தற்போதைய பணியாளர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 246-வது பிரிவை சுட்டிக்காட்டுகின்றனர். அதில் இந்திய ராணுவ, கப்பல் படை மற்றும் விமான படையினரின் வரிசையில் பிற ஆயுத படைகள் என குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பிற ஆயுத படை என்பது துணை ராணுவப் படைகள் என இவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த விவகாரத்தில் பன்வார் சற்று வளைந்து கொடுத்து பேசுகிறார். நாட்டின் முதன்மையான படையாக ராணுவம் இருக்க வேண்டும். மேலும் அவர்களது விருப்பங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார்.

''எங்களைவிட ராணுவத்தில் நல்ல ஊதியம் இருக்க வேண்டும். எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த போட்டியும் இல்லை. எங்களைவிட அவர்களுக்கு உயர் தர பயிற்சிகள் கிடைக்கின்றன. எங்களை விட அவர்கள் உயர் பதவியினர்தான் ஆனால் நாங்கள் எங்களது உரிமையை கேட்கிறோம்,'' எனச் சொல்கிறார் பன்வார்.

மத்திய காவல் படையின் அதிகாரிகள் தங்களுக்கும் ராணுவம் போன்றே பென்ஷன், பதவி உயர்வு, மற்ற சேவைகளில் சமநிலை வேண்டும் என்கின்றனர்.

தற்போதைய மற்றும் முன்னாள் சி.ஆர்.பி.எஃப் மற்றும் பி.எஸ்.எஃப் படையினர் பலரும், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்களது கடைசிகால கட்டத்தில் இந்த படையினருக்கு தலைமை அதிகாரியாக வந்துவிடுகின்றனர். அவர்களுக்கு தங்களது பிரச்னையில் பெரிய ஈடுபாடு இல்லை என நம்புகின்றனர்.

''அவர்களது பணிக்காலத்தில் கடைசி சில வருடங்களில் இங்கே வருகின்றனர். அதனால் எங்களது பிரச்னைகளை புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் போலீஸ் கலாசாரத்தில் இருந்து வருகின்றனர்,'' என்கிறார் நாயர்.

பெரும்பாலும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்தான் பி.எஸ்.எஃப் மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையின் இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநராக செயல்படுகின்றனர். இதில் மாற்றம் தேவை என தாம் நம்புவதாக பன்வார் தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :