You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டொனால்டு டிரம்ப் - 'அமெரிக்க மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி மீதான வரியை நீக்குங்கள்'
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உற்பத்திப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த உற்பத்திப் பொருட்களில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவையும் அடக்கம்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் நடப்பதன் காரணமாக மார்ச் ஒன்றாம் தேதி முதல் சீனப் பொருட்கள் மீது மேற்கொண்டு விதிக்கப்பட இருந்த இறக்குமதி வரியை அமலாக்குவதை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது.
சீன பொருட்கள் மீதான வரியை 10 சதவிகிதத்தில் இருந்து, 25 சதவிகிதமாக உயர்த்த அமெரிக்கா முடிவு செய்து, அதை மார்ச் மாதம் முதல் அமலாக்க இருந்தது.
அமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 250 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வரியை விதித்திருத்தது.
'உலக வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தகப் போரை' அமெரிக்கா தொடங்கியுள்ளது என குற்றம்சாட்டிய சீனா, அமெரிக்காவின் வரிவிதிப்புக்குப் பதிலடியாக 110 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வரியை அமெரிக்க இறக்குமதி சரக்குகள் மீது விதித்தது.
வாஷிங்டனில் நடந்த வர்த்தக உச்சி மாநாட்டுக்கு பிறகு, புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என கடந்த மாதம் டிரம்ப் கூறியிருந்தார்.
டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் ஃபுளோரிடாவில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் சர்வதேச சந்தைகளின் மீதும் தாக்கம் செலுத்தியது.
இந்த வர்த்தகப் போரால் உலகம் ஏழைகளுக்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறி வருகிறது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்