புல்வாமா தாக்குதல்: 'துல்லியத் தாக்குதலாலும் ஒரு பயனும் இல்லை' - நரேந்திர மோதி அரசை விமர்சிக்கும் மெகபூபா முஃப்தி

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "சர்ஜிக்கல் தாக்குதலால் எந்த பயனும் கிடைக்கவில்லை"
சர்ஜிக்கல் தாக்குதலால் எந்த பயனும் கிடைக்கவில்லை என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி விமர்சித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் குறைந்தது 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-மொஹமத் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தி கூறும் போது, "இந்த கொடூர தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்க வார்த்தைகள் போதாது. எல்லையில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவங்களும், துல்லியத் தாக்குதலாலும் ஒரு பயனும் இல்லை என்பதை தாக்குதல் காட்டுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கமும், இதர அரசியல் கட்சிகளும், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட கண்டிப்பாக ஒருங்கிணைந்து தீர்வை கண்டறிய வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - "பிரதமரின் பிரசாரத்தைத் தடுத்த வானிலை"

பட மூலாதாரம், Getty Images
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபூரில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி நேரில் செல்ல முடியாததால் செல்பேசி வாயிலாகத் தொண்டர்களிடம் உரையாற்றினார்.
டேராடூன் விமான நிலையத்துக்கு வியாழன் காலை ஏழு மணிக்கே சென்ற மோதி, ஹெலிகாப்டர் பறக்க வானிலை சரியில்லாததால் அங்கு நான்கு மணிநேரம் காத்திருந்தார்.
பின்பு கார்பெட் தேசிய பூங்கா பகுதிக்கு காலை 11.15 மணிக்கு சென்றடைந்தார். மேற்கொண்டு செல்ல வானிலை ஒத்துழைக்காததால், செல்பேசி வாயிலாக அவர் உரையாற்றினார்.
மேடையில் பாஜக தலைவர்கள் அமர்ந்திருக்க, அவரது உரையை ஒலிபெருக்கி மூலம் தொண்டர்கள் கேட்டனர்.

தினமணி - "அவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை"
பொதுமக்களின் அவசரகால உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி எண் சேவை, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விரைவில் அமலாகவுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"மத்திய அரசால் இந்தத் திட்டத்துக்கு ரூ.321.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டம் முதல்கட்டமாக ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது.
இதையடுத்து தமிழகம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் 19ஆம் தேதி முதல் அமலாகவுள்ளது.
போலீஸாருக்கு 100 என்ற எண்ணையும், தீயணைப்பு படைக்கு 101, சுகாதாரத் துறையினருக்கு 108, பெண்கள் தொடர்பான உதவிகளுக்கு 1090 என்ற எண்ணையும் பொதுமக்கள் தற்போது தொடர்பு கொண்டு வருகின்றனர். ஆனால் வரும் 19ஆம் தேதி முதல், 112 என்ற ஒரே எண்ணிலேயே அனைத்து வகையான உதவிகளையும் பொதுமக்கள் கோர முடியும்" என்று அந்த செய்தியில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்து தமிழ் - "வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி அதிகமாக இருக்கும்"

பட மூலாதாரம், Getty Images
தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் நாட்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: "கடந்த 45 நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்த நாட்களில் குறிப்பிடும் படியாக மழை இல்லை. தற்போது பனி மூட்டம், உறைபனி ஆகியவையும் குறைந்துவிட்டது. வானத்தில் மேகங்களும் குறைந்துவிட்டன. அதன் காரணமாக வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையானது வழக்கத்தை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது."
"மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் முதல் கிழக்கு மத்திய அரபிக் கடலில் வடக்கு மகாராஷ்டிர கடற்கரை வரை நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது," என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












