You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதல்முறையாக அமீரகத்தில் போப் பிரான்சிஸ்: ஏமன் பிரச்சனை குறித்து பேசுவாரா?
அரேபியாவில் போப்
போப் பிரான்சில் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார். அரேபிய தீபகற்பத்திற்கு செல்லும் முதல் போப் இவர்தான். அபுதாபி வந்த அவரை முடியரசர் ஷேக் முகம்மது பின் ஜையத் அல் நஹ்யான் வரவேற்றார்.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் மதநல்லிணக்க கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இதில் ஏறத்தாழ 120,000 பேர் பங்கேற்கிறார்கள்.
அரேபியா செல்லும் முன் அவர் ஏமன் போர் குறித்து கவலை தெரிவித்திருந்தார். ஏமன் போரில் அரேபியா பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏமனில் பல குழந்தைகள் பசியால் வாடுவதாக போப் கூறி இருந்தார்.
செளதி மேற்கொண்டுள்ள ஏமன் போரில் செளதியின் பக்கம் அமீரகம் நிற்கிறது.
போப் ஏமன் பிரச்னை குறித்து அமீரகத்திடம் பேசுவாரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
'போலி அமெரிக்க பல்கலைக்கழகம்`
அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் ஒன்றில் பதிவு செய்த 129 மாணவர்களை கைது செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
போலி குடியேறிகளை கண்டறியும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ரகசிய அதிகாரிகளால் இந்த பல்கலைக்கழகம் நடத்தப்படுகிறது. இந்த ஃபர்மிங்டன் பல்கலைக்கழகம் மிஷிகன் மாநிலத்தில் இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தவர்கள் இது சட்ட விரோதமுறை என்பதை தெரிந்தே பதிவு செய்ததாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நவ்ரூ: 'ஒரு நாடே அகதிகள் முகாமாக'
நவ்ரூ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர் என்கின்றனர் ஆஸ்திரேலிய அதிகாரிகள்.
அமெரிக்காவுடன் போடப்பட்டுள்ள மீள்குடியேற்றம் ஒப்பந்தத்தின் விளைவாக அந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்கின்றனர்.
நவ்ரூ - இது உலகின் மிக சிறிய தீவு நாடு. முன்பொரு சமயத்தில் இந்நாடு பிரிட்டனின் காலனியாக இருந்தது. இந்நாட்டை பார்வையிட்ட முதல் ஐரோப்பிய பயணி இந்நாட்டினை 'இனிமையான நாடு' என்று வர்ணித்தார். அப்படிதான் அந்த நாடு அழைக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்நாடெங்கும் துயர்மிகு கதைகள்தான் நிறைந்திருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சட்டவிரோதமாக நுழைய முயலும் குடியேறிகள், நவ்ரூவில் ஆஸ்திரேலிய அரசினால் நடத்தப்படும் தடுப்பு காவல் முகாம்களில்தான் அடைக்கப்படுகிறார்கள்.
விரிவாக படிக்க:உலகின் மிக சிறிய நாட்டின் துயர்மிகு கதை
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தர்ணா - தலைவர்கள் ஆதரவு
கொல்கத்தாவில் பாஜக அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "நாட்டை காப்பாற்றும் வரை தனது தர்ணா தொடரும்" என தெரிவித்துள்ளார்.
சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா , கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
விரிவாக படிக்க:கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தர்ணா - தலைவர்கள் ஆதரவு
தாய் இறந்த துக்கத்திலும் 'தாய்நாட்டுக்காக' களமிறங்கிய மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில், தனது தாய் இறந்ததையும் மீறி அணிக்காக விளையாடிய மேற்கிந்திய வீரர் அல்ஸாரி ஜோசப்புக்கு அணியின் வெற்றியை கேப்டன் ஜேசன் ஹோல்டர் சமர்பித்துள்ளார்.
ஆண்டிகுவாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்கள் எஞ்சிய நிலையில் மேற்கிந்திய அணி இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :