You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராகுல் காந்தியின், ஊதிய உத்தரவாதத் திட்டம் உலகில் இதுவரை இல்லாத திட்டமா? உண்மை என்ன? #BBCFactCheck
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
அவர், "காங்கிரஸ் அரசு ஒவ்வொரு ஏழைக் குடிமகனுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை 2019-ல் உத்தரவாதம் செய்யும். யாரும் இந்த நாட்டில் பசியோடு இருக்கக் கூடாது. நாங்கள் இருவித இந்தியா இருப்பதை விரும்பவில்லை. ஒவ்வொரு ஏழைக் குடிமகனுக்கும் குறைந்தபட்ச ஊதியம் உத்தரவாதம் செய்யப்பட்ட ஒரே இந்தியாதான் இருக்கும் " என்று அவர் கூறியுள்ளார்.
அவர் உரையின் முடிவில், உலகில் வேறெந்த நாடும் இது போன்ற நடவடிக்கையை எடுத்ததில்லை என்று கூறியுள்ளார்.
"2019-ம் ஆண்டு அமையப் போகும் காங்கிரஸ் அரசு, உலகளவில் இதை செயல்படுத்தும் முதல் அரசாக இருக்கும்" என்று அவர் கூறி உள்ளார்.
அவர் சொல்வது உண்மையா?
அவர் சொல்வது முழு உண்மையாக தெரியவில்லை.
ராகுல் காந்தி அந்த திட்டத்தை எப்படி செயல்படுத்தப் போகிறார் என எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் கூறும் இந்த திட்டம் போல உலகில் பல்வேறு நாடுகளில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தென்னமெரிக்க நாடான பிரேசிலில் இது போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பெயர் போல்ஸா ஃபெமிலியா (குடும்ப உதவித் தொகை). 2003ஆம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இது வெற்றிகரமான திட்டமாக கூறப்படுகிறது. இதனால், அந்த நாட்டில் வறுமையை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக வறுமையை குறைப்பதில் தாக்கம் செலுத்தியது மட்டுமல்லாமல், இந்த போல்ஸா ஃபெமிலியா திட்டமானது, வறுமை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதையும் கட்டுப்படுத்தி இருக்கிறது. அதாவது, ஒரு ஏழைக் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு கல்வி, உடல் நல வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் இதனை சாத்தியமாக்கி இருக்கிறது என்கிறது உலக வங்கியின் இணையதளம்.
2003 முதல் 2010 வரை பிரேசில் அதிபராக இருந்த லுலா டா சில்வாவுக்கு இந்த திட்டம் பெரும் புகழை கொண்டு வந்து சேர்த்தது.
பிபிசி பிரேசில் சேவையின் செய்தியாளர் ரிகார்டோ, "கடும் வறுமையில் வாழும் குடும்பத்தில் நபர் ஒருவருக்கு 1,700 ரூபாய் அளவுக்கு இந்த சமூக நீதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது"
குடும்ப வருமானம் 3,365 ரூபாய் அளவுக்கு இருப்போர் இந்த திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதி உடையவர்கள் ஆவர் என்கிறார் அவர்.
சிலர் இந்த திட்டத்தின் நீடித்த தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பினாலும், அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ராகுலின் விருப்பம்
ஆதார் குறித்து சங்கர் எழுதிய புத்தகத்தில் போல்ஸா ஃபெமிலியா போன்ற திட்டங்களினால் ராகுல் காந்தி கவரப்பட்டு இருப்பதாக கூறி உள்ளார்.
அவர், "பிரேசிலின் போல்ஸா ஃபெமிலியா, மெக்சிகோவின் ஒபார்டுனிடாடெஸ், கொலம்பியாவின் ஃபெமிலியாஸ் என் அக்கியான் போன்ற திட்டங்களால் கவரப்பட்ட ராகுல், இது போன்ற திட்டத்தை இந்தியாவிலும் செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறார்" என தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு பின்லாந்தும் இது போன்ற திட்டத்தை முயற்சித்துள்ளது. வேலையில்லாமல் இருக்கும் 2,000 பேருக்கு குறைந்தபட்ச ஊதியமாக 45,000 ரூபாய் வழங்கியது.
பரிசோதனை முயற்சியில் செயல்படுத்தப்படும் இந்த திட்டமானது 2019ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இது எந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இந்த ஆண்டு முடிவில் தெரிய வரும்.
பணவீக்கத்தின் விளைவுகளை ஈடு செய்ய இரானும் இப்படியான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், பண வீக்கத்தின் உயர்வால், இந்தொகையும் தமது மதிப்பை இழந்து எந்த நன்மையையும் செய்யத் தவறிவிட்டது.
பிரதமர் மோதி தேர்தலை முன்னிட்டு பல ஜனரஞ்சகமான முடிவுகளை அறிவித்து வருகிறார். அதனை கணக்கில் கொண்டு ராகுல் காந்தியும் இப்படியான திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஆனால், இதனை அறிவிக்கும் போது தரவுகளில் தவறு செய்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் அறிவிக்கப்படலாம். ஆனால், அது சர்வதேச அளவில் முதல் திட்டமல்ல.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :