பாலிவுட் திரைத்துறையினர் பிரதமர் மோதியை சந்தித்தது ஏன்? #BBCFactCheck

பாலிவுட் நடிகர், நடிகைகளின் பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த புகைப்படம் ஒன்று வியாழக்கிழமை காலை சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது.

திரையுலக கலைஞர்கள் மட்டுமின்றி இந்த புகைப்படத்தை பிரதமர் மோதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதை சுமார் 22 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

ஆனால், இந்த புகைப்படத்தின் போலியான பிரதி ஒன்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த போலியான புகைப்படத்தில் சில திரையுலக நட்சத்திரங்கள் தங்களின் நெற்றியில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று எழுதியுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டுமென பிரதமர் மோதியின் முன்னிலையில், பாலிவுட் நடிகர்கள் கோரிக்கை வைத்ததாக ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் உள்ள பல குழுக்களில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில், பாலிவுட் நடிகர்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் 'கான்' என்ற பெயருடைய நடிகர்கள் யாரும் இடம்பெறாமல் இருப்பதை பார்த்து சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ராமர் கோயில் பற்றி விவாதிக்க இந்து கலைஞர்கள் மட்டும் பிரதமர் அலுவலகத்தால் அழைக்கப்பட்டதாக சிலர் எழுதியுள்ளனர்.

இவை உண்மையா? இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் யார்? இது பற்றி அறிந்துகொள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில கலைஞர்களோடு தொடர்பு கொண்டு பிபிசி பேசியது.

கூட்டம் நடைபெற காரணம்

இந்த சந்திப்பு நடைபெற்றதற்கான காரணத்தை திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் அணியினர் மும்பையிலுள்ள பிபிசி செய்தியாளர் மது பாலிடம் தெரிவித்தது.

"இந்திய கலாசாரத்திலும், சமூகத்திலும் சினிமாவின் தாக்கம் பற்றி கலந்துரையாட இந்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. பொழுதுபோக்கின் உதவியோடு நாட்டில் மேம்பாடுகளை உருவாக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோதி பேசினார்" என்று அவர்கள் கூறினர்.

"இந்த கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி பற்றி திரைத்துறையினர் பிரதமர் மோதியிடம் பேசினர். திரைத்துறையின் எதிர்காலத் திசை பற்றிய சில புதிய கருத்துக்களும் விவாதிக்கப்பட்டன" என்று ஜோஹரின் அணியினர் தெரிவித்தது.

இந்த கூட்டம் சிறப்பாக அமைந்தது என்றும், புதிய கலைஞர்களோடு பிரதமர் மோதி கொண்டுள்ள அணுகுமுறையை விரும்புவதாகவும் எக்தா கபூர், நடிகர் ராஜ்குமார் ராவ், அயுஷ்மான் குரானா மற்றும் சித்தார்த் மல்கோத்ரா ஆகியோர் கூறியுள்ளனர்.

ராமர் கோயில் அல்லது வேறுவித அரசியல் பிரச்சனை பற்றி விவாதித்ததாக கூறப்படுவதை கரண் ஜோஹரின் அணியினர் உறுதியாக மறுத்ததோடு, இது வெறும் வதந்தி என்றும் தெரிவித்தனர்.

பிரதமர் மோதியோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங், 'பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி' என்று எழுதியுள்ளார்.

வியாழக்கிழமை காலை பாலிவுட்டின் பிரதிநிதிகள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.

இந்த பயணம் பற்றிய சில புகைப்படங்களை எக்தா கபூர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

'கூட்டத்தை ஏற்பாடு செய்தோர்'

வைரலாக பகிரப்பட்ட புகைப்படத்தின் கீழ்ப் பகுதியில் இருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் மஹாவீர் ஜெயின் மற்றும் மௌலிக் பகத் ஆகியோர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களாக தெரிவிக்கப்படுகிறது.

கரண் ஜோஹரின் உதவியோடு இவர்கள் இந்த கூட்டத்திற்கு எல்லா கலைஞர்களையும் அழைத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோதியோடு பாலிவுட் திரைத்துறையினர் மேற்கொண்ட இரண்டு அதிகாரபூர்வ சந்திப்புகளிலும் மஹாவீர் ஜெயினும், மௌலிக் பகத்தும் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள மென்பொருள் மற்றும் ஊடக நிறுவனத்தின் உரிமையாளரான மஹாவீர் ஜெயின், பிரதமர் நரேந்திர மோதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நரேந்திர மோதி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அரசியல், ஆன்லைன் மற்றும் சமூக ஊடக பரப்புரைகளின் பொறுப்பாளராக மௌலிக் பகத் இருந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: