You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனகதுர்காவுக்கு சாதகமாக சட்டம் உள்ளது - ஆனால் நீதி கிடைப்பதில் தாமதம் ஏன்?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி
ஜனவரி மாத முதல் வாரத்தில் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்த இரு பெண்களில் ஒருவரான கனகதுர்காவை வீட்டுக்குள் நுழையவிடாமல் அவரது கணவர் தடுத்துள்ள நிலையில், இது போன்ற அம்சங்களில் பெண்களின் உரிமை தொடர்பாக நாட்டில் சட்டம் தெளிவாக உள்ளதாக பெண்களின் உரிமை தொடர்பான வழக்குகளில் நிபுணர்களாக உள்ள வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமையன்று கனகதுர்காவின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது , அடுத்த மூன்று நாட்களுக்கு மாஜிஸ்திரேட் விடுமுறையில் இருந்ததால் , இது உடனடியாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
தற்போது இது தொடர்பாக காத்திருப்பதை தவிர கனகதுர்காவுக்கு வேறு வழியில்லை.
கனகதுர்காவின் கணவர் தனது மனைவியுடன் ஒரே வீட்டில் இருக்க தனக்கு விருப்பமில்லை என்று போலீசாரிடம் தெரிவித்துள்ள நிலையில், இதனை குடும்ப வன்முறை தொடர்பான வழக்காகவே கேரளா மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.
பெரும்பாலான இந்து கோயில்களில் மாதவிடாய் அல்லாத பிற நாட்களில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், சபரிமலையில் அப்படி கிடையாது.
பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது மாதவிடாய் என்ற காரணத்தால் மட்டுமல்ல, அது ஐயப்பனின் விருப்பம் தொடர்புடையதும்கூட என்று சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சபரிமலை கோயிலில் வயது வேறுபாடு இல்லாமல் பெண்கள் நுழைவது தொடர்பான வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில், நான்கு நீதிபதிகள் வயது வேறுபாடு இல்லாமல் பெண்கள் சபரிமலை கோயிலில் நுழையலாம் என்று தீர்ப்பளித்தனர்.
மாதவிடாய் ஏற்படும் வயதில் உள்ள பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது எனும் மரபு வழக்கத்தை நம்பும் அமைப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
39 வயது கனகதுர்காவும், 40 வயது பிந்து அம்மிணியும் கடந்த ஜனவரி 2-ம் தேதி சபரிமலை கோயிலுக்கு மலையில் ஏறிச் சென்று தரிசனம் செய்தனர். சுவாமி ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், தீர்ப்பை நடைமுறைக்கு கொண்டுவரும் வகையில் அமைந்திருந்தது அவர்களின் பயணம்.
சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தபிறகு சிறிது காலம் மறைவாக இருந்த கனகதுர்கா கடந்த வாரம் தனது வீட்டிற்கு திரும்பி வந்தபோது கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதாக கூறப்படுகிறது.
தலையில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனகதுர்கா திங்கள்கிழமை தனது வீட்டிற்கு திரும்பிய போது, தனது கணவர் வீட்டை காலி செய்துவிட்டார் என்று கண்டறிந்துள்ளார்.
அவரை தனது புதிய வீட்டிற்கு அழைத்து செல்ல கணவர் கிருஷ்ணன் உன்னி மறுத்துவிட்டார். இந்த தம்பதியருக்கு 12 வயதில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.
"சட்டத்தின் கீழ், அவள் தன் சொந்த வீட்டில் தங்கலாம். இதனை செயல்படுத்த நீதிபதி உத்தரவிடவேண்டும் '' என்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள சந்தியா ராஜா தெரிவித்தார்.
"சட்டம் மிக தெளிவாக உள்ளது. கணவரின் வீட்டில் வசிக்க கனகதுர்காவுக்கு உரிமை உண்டு. அவர் வீடற்றவராக இருக்க முடியாது. இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956, பெண்களுக்கு இந்த உரிமையை அளிக்கிறது குடும்ப வன்முறைத் தடுப்பு சட்டம் விரைவான தீர்வையையும், நிவாரணத்தையும் வழங்குகிறது'' என்று கீதா தேவி குறிப்பிட்டார்.
"குடும்ப வன்முறைச் சட்டத்தின் பிரிவு 19 மிகவும் தெளிவாக உள்ளது. மீண்டும் அதே வீட்டில் தங்குவதற்கு அந்த பெண்ணுக்கு உரிமை உள்ளது. கணவரை அந்த அந்த வீட்டில் இருந்து வெளியேறவும், கனகதுர்காவை வீட்டில் தங்க அனுமதிக்கவும் நீதிபதி உத்தரவிடலாம் ''
ஆனால், சட்டம் அதன் கடமையை நிறைவேற்ற எடுத்துக் கொள்ளும் காலம்வரை அரசாங்கப் புகலிடத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனகதுர்கா தங்கியாகவேண்டும்.
பிற செய்திகள் :
- புதிய மன்னரை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் மலேசியா
- இஸ்லாம் மதத்தை `சீனமயமாக்க' சீனாவின் ஐந்தாண்டு திட்டம்
- "இசையை நான் தேர்ந்தெடுக்கவில்லை, இசைதான் என்னைத் தேர்ந்தெடுத்தது"
- ஆப்பிரிக்காவில் 'பல நூற்றாண்டுகளாக' இருந்த பிரச்சனையை தீர்க்கும் புதிய பாலம்
- சாவேஸ் நாட்டில் அரசுக்கு எதிராகப் போராட்டம், ஆதரவு தெரிவித்த அமெரிக்கா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்