You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மண் குவளைகளுக்கு உயிர்கொடுக்கும் இந்திய ரயில்வே துறை
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.
இந்து தமிழ்: மண் குவளைகளுக்கு உயிர்கொடுக்கும் இந்திய ரயில்வே துறை
இந்திய ரயில்வே துறையில் மீண்டும் மண் குவளைகள் கொண்டுவரப்படுவதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் வாரணாசி, மற்றும் ரேபரேலி ரயில் நிலைய அதிகாரிகளுக்குப் பிறப்பித்த உத்தரவில் பயணிகளுக்கு வழங்கும் உணவுப் பொருட்கள், பால், தேநீர், காபி உள்ளிட்டவற்றை மண் குவளையிலும், பீங்கான் தட்டுகளிலும் வழங்க கோரியுள்ளார். ரயில்வே அமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து வடக்கு ரயில்வே, மற்றும் வடகிழக்கு ரயில்வே மேலாளர்களும் மண் குவளை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
ரயில் நிலையங்களில் மண் குவளையில் தேநீர், பால், காபி ஆகியவற்றை அருந்துவது பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை தருவதாகவும் , இதை தயாரிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பையும் வழங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தினகரன்: நிறைவுபெற்ற புத்தக காட்சி - 17 நாளில் 18 கோடிக்கு புத்தகம் விற்பனை
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வந்த 42வது புத்தக காட்சி நேற்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்ததாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4ஆம் தேதி புத்தக காட்சியை திறந்து வைத்தார். மொத்தம் 820 புத்தக அரங்குகளில் சுமார் 12 லட்சம் தலைப்புகளில் ஒன்றரை கோடி புத்தகங்கள் இடம்பெற்று இருந்தன.
17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக காட்சிக்கு 14 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். 72 லட்சம் புத்தகங்களை வாசகர்கள் வாங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு 15 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 3 கோடி ரூபாய் கூடுதலாக 18 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.
தினத்தந்தி: தமிழக மீனவர்களை படகில் கட்டிவைத்து அடித்த இலங்கை கடற்படையினர்
ராமேஸ்வரத்தை சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடி படகிலேயே கட்டி வைத்து இரும்பு கம்பியால் தாக்கியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், சில படகுகளில் இறங்கி மீனவர்களை தாக்கியதுடன், அதில் இருந்த மீன்கள், வலைகள் மற்றும் மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்தி கடலில் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ரீகன் உள்பட 5 மீனவர்களை அந்த படகிலேயே கட்டி வைத்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் 2 மணி நேரம் கழித்து விடுவித்து இனிமேல் இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.
தினமலர்: தமிழகம் - புதுச்சேரியில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகம், புதுச்சேரியில் வரும் நாட்களில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் நாட்களில் தமிழகத்தில் பகல் வெப்பநிலை அதிகரித்து, குளிரின் அளவு குறையும் என வானிலை மையம் கணித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேர வெயிலின் அளவு உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, திருத்தணி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், வேலுார், தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில், 30 டிகிரி செல்ஷியசுக்கு மேல், வெயில் பதிவானது.
அதே போல், வரும் நாட்களில், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்