மாசிடோனியா பெயர் மாற்றத்தால் கிரீஸில் வெடித்த மோதல் மற்றும் பிற செய்திகள்

மாசிடோனியாவின் பெயரை மாற்றும் கிரீஸ் அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஏதன்ஸில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் போலீஸாருடன் போராட்டக்காரர்களுக்கு மோதல் ஏற்பட்டது.

பேரணியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோரில் சிலர் மீது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர்.

இன்னும் ஒப்புதல் பெறப்படாத இந்த உடன்படிக்கையின்படி, கிரீஸின் வட அண்டை நாடான மாசிடோனியா இனி வடக்கு மாசிடோனியா என அழைக்கப்படும்.

கிரீஸ் நாட்டை சேர்ந்த பலருக்கு மாசிடோனியா என்ற பெயர் மிகவும் உணர்வுபூர்வமானது.

விராலிமலை ஜல்லிக்கட்டில் புதிய உலக சாதனை; இருவர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, இதற்கு முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளதாக லண்டனில் இருந்து வந்துள்ள உலக சாதனை மதிப்பீட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஐந்து மணி நேரத்தில் 647 மாடுகள் வாடிவாசலை கடந்ததே உலக சாதனையாக இருந்ததாகவும், விராலிமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இறுதிவரை 1353 மாடுகள் வாடிவாசலை கடந்து உலக சாதனையை படைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாஞ்சா கயிற்றில் இருந்து பறவைகளை மீட்க சென்ற பெண் உயிரிழப்பு

குஜராத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் காற்றாடி திருவிழாவால் பறவைகளும், மனிதர்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

திருவிழாவின் ஒரு நாளில், அகமதாபாத்தை சேர்ந்த ரஹிலா உஸ்மான், காந்திநகரில் வனத்துறையினரால் நடத்தப்பட்ட பறவைகள் மீட்பு பிரசாரத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.

வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, சர்கெஜ்-அஹமதாபாத் நெடுஞ்சாலையில் இருக்கும் கே.டி.மருத்துவமனைக்கு அருகே, காற்றாடியின் நூல் ரஹிலாவில் கழுத்தில் சுற்றிக் கொண்டதில் இறந்துவிட்டார்.

ரஹிலா உஸ்மானின் குடும்பம் இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. யாரிடம் பேசும் நிலைமையிலும் அவர்கள் இருக்கவில்லை.

பாலியல் தொழிலில் இருந்து துணிச்சலாக தப்பித்த வட கொரிய பெண்கள்

வடகொரியாவில் இருந்து ஓடிவந்த பிறகு பாலியல் தொழிலில் சிக்கிய இரண்டு இளம் பெண்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தப்பிச் சென்றுள்ளனர்.

மிரா மற்றும் ஜியுன் ஆகிய இருவரும் வட கொரியாவில் இருந்து ஓடி வந்தவர்கள். பல ஆண்டுகளாக பாலியல் தொழிலில் அவர்களை சிலர் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

சீன எல்லைக்கு வந்ததும், வடகொரியாவில் இருந்து அவர்களை தப்புவிக்க உதவி செய்தவர்கள், ``புரோக்கர்கள்'' என கடத்தல் தொழிலில் கூறப்படும் அந்த நபர்கள், அவர்களை செக்ஸ்கேம் செயல்பாடுகளில் உள்ளவர்களிடம் ஒப்படைத்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மிராவும், கடந்த எட்டு ஆண்டுகளாக ஜியுனும் ஒரு அடுக்குமாடி வீட்டில் அடைக்கப்பட்டிருந்தனர். ``செக்ஸ்கேம் பெண்களாக'' அவர்கள் ஆக்கப்பட்டிருந்தனர். வெப்காமிரா மூலம், அதன் எதிரே ஆபாச செயல்களை செய்யும்படி கட்டாயப்படுத்தப் பட்டனர்.

செவ்விந்திய பூர்வகுடி முதியவரை கேலி செய்த அமெரிக்க இளைஞர்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்திய 'அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசம் ஆக்குவோம்,' எனும் பொருள்படும் 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' (Make America Great Again ) என்ற வாசகம் பொறித்த தொப்பிகளை அணிந்த பதின்வயது இளைஞர்களின் குழு ஒன்று, வாஷிங்டன் டி.சி-யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்கப் பூர்வக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை பகடி செய்த நிகழ்வு பெரும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.

கெண்டகியின் கோவிங்க்டன் கேத்தலிக் ஹை ஸ்கூல் எனும் பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவர்கள், ஒமாஹா இனத்தைச் சேர்ந்த நாதன் பிலிப்ஸ் எனும் முதியவர் டிரம்ஸ் இசைத்துக்கொண்டே பாடுவதை கேலி செய்யும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :