மகாராஷ்டிராவில் பள்ளிகள், கல்லூரிகள் அருகே நடன பார்கள் நடத்த இருந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிராவில் நடன பார்கள் நடத்த உரிமம் பெற அம்மாநில அரசு விதித்த கடுமையான விதிகளை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் பார் அரைகளில் ஆபாச நடன தடை மற்றும் (அங்கு) பணிபுரியும் பெண்கள் மரியாதை பாதுகாப்பு சட்டம், 2016-இன் சில சரத்துகளில் மாற்றம் செய்து, பார்கள் மாலை 6 மணியில் இருந்து இரவு 11:30 மணி வரை செயல்படலாம் என நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மாநில அரசின் எந்தெந்த விதிகள் நீக்கப்பட்டுள்ளன?

வழிபாட்டு தளங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருக்கும் இடங்களில் ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் நடன பார்கள் நடத்த மாநில அரசு தடை விதித்திருந்தது. உச்சநீதிமன்றம் இந்த விதியை ரத்து செய்துள்ளது.

மாநில அரசின் விதிகளின்படி, நடன பார்களில் பணிபுரியும் பெண்களுக்கு அங்கு வரும் வாடிக்கையாளர்கள் டிப்ஸ் வழங்க இருந்த தடையையும் நீதிமன்றம் விலக்கியுள்ளது.

அதே போல நடன பார்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது.

நடன பார்களில் சிசிடிவி கேமராக்கள் வைப்பது கட்டாயம் என்ற மாநில அரசின் விதியை, நீக்கியுள்ள நீதிமன்றம், தனியுரிமை பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது.

எந்தெந்த விதிகள் தொடரும்?

  • ஆபாச நடனங்கள் கூடாது.
  • நடன பார்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையே ஊதிய ஒப்பந்தம் இருக்க வேண்டும்.
  • பார்கள் மாலை 6 மணியில் இருந்து இரவு 11:30 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.
  • நடன பார்களில் நடனமாடும் பெண்கள் மீது ரூபாய் தாள்களை தூவுவது அனுமதிக்கப்படாது.

வழக்கின் பின்னணி என்ன?

2015ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு, அம்மாநிலத்தில் நடன பார்கள் நடத்த தடை விதித்து சட்டம் இயற்றியது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ஆர். ஆர். பாட்டில், நடன பார்களால் இணைய தலைமுறையினர் ஆபத்தான நிலைக்கு செல்வதாகவும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

எனவே இந்த நடன பார்களால் மகாராஷ்டிராவில் இருக்கும் பெண்கள் அவதிப்படுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த முடிவு அம்மாநிலத்தில் பலராலும் வரவேற்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த முடிவினை எதிர்த்து நடன பார்களின் உரிமையாளர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதையடுத்து மாநில அரசு விதித்த தடை தவறானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இருப்பினும், புதிய சட்டத்தை இயற்றிய மாநில அரசு, நடன பார்கள் மீது விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து செயல்படுத்தி வந்தது. அதனை எதிர்த்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் அந்த தடை சட்டத்துக்கு எதிரானது என்று நீதிமன்றம் கூறி, உரிமையாளர்களிடம் உரிமத்தை திருப்பி தருமாறு உத்தரவிட்டது.

ஆனால், அரசின் கடுமையான விதிகளால் நடன பார்களின் உரிமையாளர்கள் உரிமம் பெறுவது கடினமாக இருந்தது.

மகாராஷ்டிரா அரசின் வழக்கறிஞர் கூறுவது என்ன?

மாநில அரசால் இயற்றப்பட்ட நடன பார்கள் நடத்த தடை விதிக்கும் 'மகாராஷ்டிரா நடனமாடும் இடங்கள் மற்றும் பார்கள் சட்டம், 2014' நீக்கப்படவில்லை. அதில் இருக்கும் சில விதிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. அதனால், இந்த தீர்ப்பை மகாராஷ்டிரா அரசு வரவேற்கிறது என்று வழக்கறிஞர் நிஷாந்த் கடனேஷ்வர்கர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் மாநில அரசின் விதிகளை முறையாக பின்பற்றி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கப்படும்.

பார் உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

மும்பையை சேர்ந்த பார் உரிமையாளரான விகாஸ் சாவந்த் கூறுகையில், "ஐந்தரை மணி நேரம் மட்டுமே பார்கள் திறக்கப்பட வேண்டும் என்று கூறுவது வருத்தமளிப்பதாக உள்ளது. முன்பெல்லாம் அதிகாலை ஒன்றரை மணி வரை பார்களை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், மீண்டும் எங்கள் தொழிலை தொடங்கலாம் என்பதில் மகிழ்ச்சி. இதன் பிறகு தொழில் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். சட்டப்படி உரிமம் இருக்கிறது. மற்ற தொழில்களை முன்னேற விடுவது போல, எங்கள் தொழிலிலும் அரசு முன்னேற விட வேண்டும்" என்று கூறினார்.

சமூக ஆர்வலர்கள் கூறுவது என்ன?

நடன பார்களில் பணிபுரியும் பெண்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக ஆர்வலரான வர்ஷா கலே உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறார். "பாரில் பணிபுரிபவர்கள் சொல்ல முடியாத அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள். பல மைனர் பெண்களும் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். பல பெண்கள் இதனால் தெருக்களில் அலைந்து சிலர் பிச்சை எடுக்கவும் செய்தனர். சிலர் இறந்துவிட்டனர்." என்று தெரிவித்தார்.

"முன்பு படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழலில் இருந்த பெண்கள், இந்த தொழில் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் சம்பாதித்து மற்றவர்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். நடன பார்கள் சுமார் 30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு பணிபுரிந்த பல பெண்கள் அத்தொழிலை விடுத்து மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் ஆகியுள்ளனர்" என்று கலே தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: