You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடல் அன்னைக்கு பொங்கல் வைத்து நன்றி கூறிய சிறுமிகள்
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைப் பொங்கல் வைக்கச்செய்து, தங்களுக்கு மீன் வளம் தரும் கடல் தாயை வழிபடுகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராம மக்கள்.
ராமநாதபுரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் தொண்டி செல்லும் வழியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உப்பூர் அருகே அமைந்துள்ளது மோர்ப்பண்ணை கிராமம். இங்குள்ள ஸ்ரீரணபத்திரகாளி கோயில் கருவறையில் ஸ்ரீரணபத்திரகாளி, வாழவந்த அம்மன், கட்டாரி காளி ஆகிய தெய்வங்கள் உள்ளன.
இந்தக் கோயிலை வழிபடும் கடையர் எனும் மீனவச் சமுதாயத்தினர் ஒவ்வோர் ஆண்டும் ஊர்க்கூட்டம் போட்டு 11 முதல் 13 வயதுக்குட்பட்ட ஏழு சிறுமிகளைத் தேர்வுசெய்கிறார்கள்.பொங்கலன்று ஊரில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்தபின்பு, குறிக்கப்பட்ட நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஏழு சிறுமிகளுடன் கோயிலுக்கு வந்து வணங்குகிறார்கள். பின்பு அந்தச் சிறுமிகள் கடலிலும் குளத்திலும் நீராடுகின்றனர்.
கோயில் முன்பு அமைக்கப்பட்ட வேப்பிலைத் தோரணம் எதிரில், பெரியவர்களின் உதவியோடு பொங்கல் வைக்கிறார்கள். பொங்கல் பொங்கியதும் குலவையிடுகிறார்கள். பொங்கல் தயாரானதும் அந்தப் பானைகளைக் கோயில் முன் வைத்துவிட்டு, அந்த ஊரில் உள்ள முனியய்யா கோயிலுக்கு ஆண்கள் மட்டும் சென்று வழிபடுகிறார்கள். அதன்பின் மஞ்சள் கலந்த பால் நிரப்பப்பட்ட ஏழு கரகச் செம்புகளோடு, ஏழு வாழையிலைகளில் பொங்கலை வைத்து அம்மனுக்குப் படைக்கிறார்கள்.
தென்னம்பாளையில் அழகிய வண்ணம் பூசப்பட்டுத் தயாரிக்கப்பட்ட சிறிய பாய்மரப் படகின் உள்ளே பூஜைப் பொருட்களோடு இலையில் பொங்கல் வைத்து அதன் நடுவில் நெய் ஊற்றித் திரியிட்டு விளக்கு ஏற்றுகிறார்கள். கிராமத் தலைவரிடம் அந்தப் பாய்மரப் படகைக் கோயில் பூசாரி எடுத்துத் தருகிறார். அவர் அதைக் கைகளில் ஏந்திக்கொண்டு முன் செல்ல, சப்த கன்னியர்களான சிறுமிகள் கரகச் செம்பைத் தலையில் ஏந்திப் பின் செல்கிறார்கள்.
மேளதாளத்துடன் கடலை நோக்கிச் செல்லும் அவர்கள் கழுத்தளவு தண்ணீர் உள்ள இடத்துக்குச் சென்று பாய்மரப் படகை கடலில் விட்டுவிட்டு, கரகச் செம்பில் உள்ள மஞ்சள் கலந்த பாலைக் கடலில் கொட்டி வழிபடுகிறார்கள். பாய்மரக் கப்பல் கடலில் காற்று அடிக்கும் திசையில் அடித்து ஆழ்கடல் பகுதிக்குச் சென்று படகில் உள்ள பூசைப்பொருட்களைக் கடல் தாயிடம் கொண்டு சேர்ப்பதாக மீனவ மக்கள் நம்புகிறார்கள்.
தலைமுறை தலைமுறையாக நடைபெறும் இவ்விழாவில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை பூஜைப்பொருட்களோடு ஒரு கிராம் தங்கமும் வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
விவசாயப் பெருமக்களால் உழவுத் தொழிலுக்கு உதவியாய் இருக்கும் சூரியனுக்கும் காளைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள், மோர்ப்பண்ணை மீனவர்களால் தங்கள் வாழ்வை வளமாக்கும் கடல் தாய்க்கு நன்றி செலுத்தி வணங்கும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மீனவ பெண் சமையசெல்வி, "உழவர்கள் எப்படி சூரியனுக்கு நன்றி வெலுத்துவது போல் நாங்கள் கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக கடல் தாய்க்கு பொங்கல் வைக்கிறோம். எங்கள் கிராமத்தில் இன்று நேற்று அல்ல நூறு ஆண்டுகளுக்கு மேலாக கடல் அன்னைக்கு பொங்கல் வைப்பது வழக்கம்," என தெரிவித்தார்.
"எங்க கிராமத்துல ஜாதி, மத வேறுபாடின்றி ஒன்று சேர்ந்து எங்க ஊரில் மூன்று தெய்வங்களான கலைமகள், அலைமகள், மலைமகள், இவர்களை ஏழு சப்தக்கன்னிகள் வழிபட்டதாக ஐதீகம் ஆகவே ஏழு கன்னிப்பெண்களை அழைத்து ஏழு பானைகளில் பொங்கள் வைத்து கங்காதேவிக்கு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறோம்," என மீனவர் காளிதாஸ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மேலும் பிபிசி தமிழிடம் பேசிய கண்ணகி, "எங்களது ஊரான மோர் பண்ணையில் ஆண்டுதோறும் கிராமத்தின் சார்பில் பாரம்பரியமாக ஏழு சப்த கன்னிகளை வைத்து பொங்கல் வைத்து கங்காதேவிக்கு படையலாக நன்றிக்கடன் செலுத்துவோம். அதன் படி இன்று ஏழு சப்த கன்னிகளை வைத்து கிராம பொதுமக்கள் சார்பாக பொங்கலிட்டு பிறகு அந்த பொங்களை எங்கள் கிராமத்தின் பாதுகாவலரான முனியப்ப சுவாமி அதேபோல குலதெய்வமும், வாழும் தெய்வமான கட்டாறிக்காளி,ரனபத்திரகாளி, வாழவந்தான் காளி இவர்களை வணங்கி எங்களுக்கு நல்ல கல்வி தரத்தையும்,உடல் வலிமையையையும் கொடுத்து எங்களின் வாழ்வை மேம்படுத்தவும் கங்கா தேவிக்கு நன்றி செலுத்து விதமாக, ஏழு பெண்கள் வைத்த பொங்களையும் பூஜை பொருட்களையும் கிராம மக்களால் செய்த சிறிய படகில் அதனைவைத்து நன்றிக்கடன் செலுத்தினோம்," என கூறினார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்