You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளாவின் அகஸ்தியகூடம் மலையில் ஏறிய முதல் பெண் தான்யா சனால்: சமூகத் தடையை உடைத்தார்
இதுவரை ஆண்கள் மட்டுமே ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்ட புனித மலை ஒன்றில் முதல்முறையாக பெண்ணொருவர் ஏறியுள்ளார்.
தென்னிந்திய மாநிலமான கேரளத்திலுள்ள அகஸ்தியகூடம் என்கிற மலையின் உச்சியில் தான்யா சனால் ஏறியிருப்பது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்புக்கு பின்னால் சாத்தியமாகியுள்ளது.
பிரம்மசாரியான இந்து முனிவரின் சிலை இருப்பதால், இந்த மலையில் பெண்கள் ஏறக்கூடாது என்று இங்குள்ள பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
உள்ளூர்வாசிகளோ, போராட்டக்காரர்களோடு இந்த மலையில் ஏறும்போது தன்னை தடுக்கவில்லை என்று 38 வயதான சனால் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த மலையில் ஏறுவதில் இருந்த பாலின பாகுபாடு இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளதாக பரப்புரையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
10 பில்லியன் மக்களை காப்பாற்றும் 'புதிய ஆரோக்கிய உணவு'
பூமிக்கு பேரழிவு ஏற்பாடுத்தாமல், உயிர்களை காத்து, 10 பில்லியன் பேருக்கு உணவளிக்கும் உணவுமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் தசாப்தங்களில் பில்லியன் கணக்கானோருக்கு உணவளிப்பது எப்படி என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர்.
அவர்கள் உருவாக்கியுள்ள "கிரக ஆரோக்கிய உணவு" இறைச்சியையும், பால் பொருட்களையும் முழுமையாக தடை செய்யவில்லை.
ஆனால், இந்த "கிரக ஆரோக்கிய உணவு" முறையில், நாம் உட்கொள்ளும் உணவு முறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.
கென்ய ஹோட்டல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு
நைரோபியிலுள்ள ஹோட்டல் வளாகத்தில் சோமாலிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது 21ஆக அதிகரித்துள்ளதை கென்ய அரசு உறுதி செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று டஸ்ட்டி2 ஹோட்டல் மற்றும் வணிக வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ரத்தக்கறையோடு வெளியேற்றப்பட்டனர்.
காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19 பேரை இன்னும் காணவில்லை என்று கென்ய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது,
இந்த தாக்குதலின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக சோமாலியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற இஸ்லாமிய அரசு குழுவான அல்-ஷபாப் கூறியதால், 19 மணிநேர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
10% இடஒதுக்கீட்டுக்கு 8 லட்சம் வருமான வரம்பு: எங்கிருந்து வந்தது? என்ன ஆபத்து?
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்ற மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றி பெற்று தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா வாக்கெடுப்புக்கு வரும் போது, அதன் அடிப்படை என்ன? அதற்கான ஆய்வுகள் என்ன? - என்றெல்லாம் பார்க்காமல், அதனால் பலன் அடையக் கூடியவர்கள் யார்? - என்று மட்டும் பார்த்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்களோ என்ற கேள்வியை இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவின் வெற்றி எழுப்பி உள்ளது.
இந்த செய்தியை விரிவாக வாசிக்க: 10% இடஒதுக்கீட்டுக்கு 8 லட்சம் வருமான வரம்பு: எங்கிருந்து வந்தது? என்ன ஆபத்து?
பாஜக ஆளாத கேரளாவில் இருந்து தேர்தல் பிரசாரம் தொடங்கிய மோதி: இந்த வியூகம் வெல்லுமா?
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தை தென்னிந்தியாவில் உள்ள கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோதி தொடங்கியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆளாத மாநிலங்களுக்கு நிகழ்ச்சிநிரலை அமைக்கும் வகையில், காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான கூட்டணிகளை கடுமையாக தாக்கி நரேந்திர மோடி பேசியுள்ளார்.
இந்த செய்தியை விரிவாக வாசிக்க: பாஜக ஆளாத கேரளாவில் இருந்து தேர்தல் பிரசாரம் தொடங்கிய மோதி: வியூகம் வெல்லுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்