You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போலீசுக்கு பயந்து கிணற்றில் குதித்த திருடன் - 23 மணி நேரம் பரிதவிப்பு : சுவாரஸ்ய தகவல்
தினத்தந்தி: 'போலீசுக்கு பயந்து கிணற்றில் குதித்த திருடன்'
அம்பத்தூரில் திருட்டில் ஈடுபட்டபோது போலீசார் வந்ததால் தப்பி ஓடிய திருடன் கிணற்றுக்குள் குதித்தார். மீட்க ஆளில்லாததால் வெளியேற முடியாமல் சுமார் 23 மணி நேரம் அவர் பரிதவித்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
சென்னை அம்பத்தூர் இந்தியன் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 48). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். கடந்த 30-ந் தேதி இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் 3 பேர் உள்ளே நுழைந்தனர்.
இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி விஜயகுமாருக்கும், அம்பத்தூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் மர்மநபர்கள் தப்பி ஓடினர். அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை இந்தியன் பேங்க் காலனி அருகில் உள்ள சந்திரசேகரபுரம் 3-வது தெருவில் கோபால கிருஷ்ணன் என்பவரது வீட்டின் 60 அடி ஆழ கிணற்றுக்குள் இருந்து "அய்யோ... காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என்று குரல் கேட்டது.
இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் பார்த்தனர். அப்போது அங்கு முழங்கால் அளவு தண்ணீரில் ஒருவர் நின்றுகொண்டு செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். இதுபற்றி அம்பத்தூர் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் 6 பேர் கிணற்றுக்குள் இறங்கி அவரை மீட்டனர்.
அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெய்சிங் (44) என்பதும், இந்தியன் பேங்க் காலனியில் விஜயகுமார் வீட்டில் திருடியது இவர்தான் என்பதும் தெரியவந்தது.
கடந்த 30-ந் தேதி இரவு 11 மணி அளவில் ஜெய்சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான கமல், சுரேஷ் ஆகியோர் விஜயகுமார் வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்து பணத்தை திருடி உள்ளனர்.
அப்போது அங்கு வந்த போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். மற்ற 2 பேரும் வேறு வழியாக தப்பி ஓடிவிட, ஜெய்சிங் மட்டும் போலீசாரின் கண்ணில் இருந்து மறைவதற்காக கிணற்றுக்குள் குதித்து உள்ளார். ஆனால் கிணறு 60 அடி ஆழம் இருந்ததால் அவரால் நினைத்தவாறு கிணற்றுக்குள் இருந்து எளிதில் மேலே ஏறி வர முடியவில்லை.
இதனால் விடிய, விடிய கிணற்றுக்கு உள்ளேயே பரிதவித்த அவர் அதில் இருந்து வெளியேற பல மணி நேரம் போராடியும் முடியாததால் கடைசியில் சோர்ந்து போனார். இதன்பின்புதான் 31-ந் தேதி காலை 11 மணி அளவில் தீயணைப்பு படை வீரர்களால் மீட்கப்பட்டு உள்ளார். ஜெய்சிங் சுமார் 23 மணி நேரத்திற்கும் மேலாக கிணற்றுக்குள்ளேயே தண்ணீரில் தத்தளித்தபடியே இருந்துள்ளார்.
- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.
தினமணி: புத்தாண்டு கொண்டாட்டம்: சாலை விபத்தில் 6 பேர் சாவு; 234 பேர் காயம்
சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 6 பேர் இறந்தனர், 234 பேர் காயமடைந்தனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"சென்னையில் புத்தாண்டையொட்டி சாலை விபத்துகளோ, பெரிய அசம்பாவித சம்பவங்களோ நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை முழுவதும் புதன்கிழமை இரவு சுமார் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூடுதலாக 245 வாகனங்களில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 368 இடங்களில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அண்ணாசாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஆற்காடு சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, உள்ளிட்ட பிரதான சாலைகளில் போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். முக்கியமான 100 இடங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைத் தடுக்கவும், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவர்களைப் பிடிக்கவும் 1,022 இடங்களில் எல்.இ.டி. பொருத்தப்பட்ட சாலைத் தடுப்புகள், 162 இடங்களில் போக்குவரத்து போலீஸாரின் வாகனச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 241 முக்கிய சந்திப்புகளில் அதிவேக வாகன ஓட்டிகளைத் தடுக்கும் வகையில் அதிக திறன் கொண்ட ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் சில இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டன." என்று விவரிக்கிறது அந்நாளிதழ்.
இந்து தமிழ்: சிறையில் தயாராகிறது 'மஞ்சள் பை'
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக திருச்சி மத்திய சிறையில் மஞ்சள் உள்ளிட்ட பல வண்ணங்களில் சிறைவாசிகள் மூலம் துணிப்பைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"பிளாஸ்டிக் தடையை முழுவீச்சில் அமல்படுத்தும் முயற்சி யில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வரு கிறது. எனவே, தற்போது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் வணிகர்கள், நுகர்வோர் உள்ளிட்ட அனைவரும் கட்டாயமாக துணிப்பைக்கு மாற வேண்டிய நிலை உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படுவதுடன், துணிப்பை உற்பத்தி செய்வோருக்கும் நல்ல வருவாய் கிடைக் கும். இதன் பலன் திருச்சி சிறை யிலுள்ள சிறைவாசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத் தில் இந்த முயற்சி மேற்கொள் ளப்பட்டுள்ளது.
இங்கு சிறைவாசிகள் மூலம் முதற் கட்டமாக மஞ்சள், ஊதா, ஆரஞ்சு, வெள்ளை ஆகிய 4 நிறங்களில் சிறிய ரகம், நடுத்தர ரகம், பெரிய ரகம் என்ற 3 வகைகளில் துணிப்பைகள் தயாரிக்கப்படுகின்றன. மஞ்சள் நிற பைகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதால், அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக மேலும் சில வண்ணங்களில் துணிப்பைகள் தயாரிக்கப்பட உள்ளன. கைத்தறி துணிகளை மட்டுமே பயன்படுத்தி இங்கு பைகள் தயாரிக்கப்படுகின்றன." என்று விவரிக்கிறது அந்நாளிதழ்
திடைம்ஸ் ஆஃப் இந்தியா: ‘சிறப்பாக விளையாடுவது எப்படி? பெடரரிடம் 'டிபஸ் பெற விருப்பம்’ - செரீனா புகழாரம்
டென்னிஸ் ரசிகர்களால் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட பிரபல டென்னிஸ் ஜாம்பாவான்கள் ரோஜர் பெடரர் மற்றும் செரீனா வில்லியம்ஸ் இடையேயான கலப்பு இரட்டையர் போட்டி பெர்த்தில் நடைபெற்ற ஹாப்மேன் கோப்பையில் நிறைவேறியது.
முதல்முறையாக இவர்கள் மோதிக்கொண்ட இந்த போட்டியில் பெலிண்டாவுடன் ஜோடி சேர்ந்த பெடரர் இணை, பிரான்ஸிசுடன் ஜோடி சேர்ந்த செரீனா இணையை வென்றது.
''செரீனாவுடன் விளையாடியது மிகவும் மகழ்ச்சி தருவதாக இருந்தது. அவருக்கு எதிராக விளையாடியது எனக்கு மிகப் பெரிய கெளரவம்'' என்று பெடரர் இந்த போட்டிக்கு பிறகு தெரிவித்தார்.
''அவர் அவ்வளவு சிறப்பாக சர்வ் செய்வார் என்று பலரும் பேசுவதை இதுவரை நான் கேட்டுள்ளேன். இப்போது அவரின் அற்புதமான சர்வ்வை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எப்படிப்பட்ட சாம்பியன் அவர்!'' என்று பெடரர் புகழாரம் சூட்டினார்.
1973-இல் 'Battle of the Sexes' என்றழைக்கப்ட்ட பில் ஜீன் கிங் மற்றும் பாபி ரிக்ஸ் இடையேயான எதிர் பாலினத்தவர்களுக்கு இடையே யான போட்டிக்கு பிறகு பெடரர்-செரீனா இடையேயான இந்த போட்டிதான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக அமைந்தது.
''அருமையான அனுபவமாக இந்த போட்டி அமைந்தது. பெடரர் எக்காலகட்டத்திலும் சிறந்த வீரர். பலமுறை அவர் சிறப்பாக விளையாடுவதை தொலைக்காட்சியில் கண்ட நான் இப்போது நேரில் காண்கிறேன். சிறப்பாக விளையாடுவது குறித்து அவரிடம் வேறொரு சமயம் ஆலோசனைகள் பெற எனக்கு விருப்பமுண்டு '' என்று செரீனா தெரிவித்தார்.
- தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்