You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் முஸ்லிம்கள் சிறப்பாக வாழும் மாநிலம் குஜராத்தா? தமிழ்நாடா?
- எழுதியவர், ஷதாப் நஸ்மி , மஹிமா சிங்
- பதவி, பிபிசி
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி நாட்டிலேயே மற்றெந்த பகுதியையும்விட குஜராத்தில்தான் முஸ்லிம்களின் நிலை சிறப்பாக இருக்கிறது எனக்கூறியிருந்தார். இதற்கு உதாரணமாக சச்சார் கமிட்டி அறிக்கையை சுட்டிக்காட்டினார்.
சமூக பொருளாதார நிலை மற்றும் கல்வி நிலை ஆகியவற்றை ஆராய்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
உண்மையில் 2006 சச்சார் கமிட்டியின் அறிக்கையின்படி மற்ற மாநிலங்களிலும் குஜராத்திலும் முஸ்லிம்களின் நிலை குறித்து குறிப்பிடப்பட்டுளள்து என்ன என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்.
கல்வி
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி (2006 சச்சார் கமிட்டி இதன் அடிப்படையில் தயாரிக்கப்ட்டது) இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வியறிவு 59.1 சதவீதம். ஆனால் இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரி கல்வியறிவு 65.1 சதவீதம்.
குஜராத்தில் மொத்தமாக கல்வியறிவு விகிதம் 69% ஆனால் இஸ்லாமியர்களின் கல்வியறிவு 73.5%. இந்துக்களின் கல்வியறிவைவிட முஸ்லிம்களின் கல்வியறிவு குஜராத்தில் 4% கூடுதல்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் கல்வியறிவு இன்னும் உயர்ந்தது. இந்துக்களின் கல்வியறிவு 77 சதவீதமாக இருக்கும் நிலையில் முஸ்லிம்களின் கல்வியறிவு 81% ஆனது.
மாநில வாரியாக கல்வியறிவு சதவீதம்
ஆனால் மேலே சொன்ன ஒரு புள்ளிவிவரம் மட்டும் வைத்து நாட்டிலேயே குஜராத்தில் தான் முஸ்லிம்களின் கல்வியறிவு சதவீதம் அதிகம் எனக்குறிப்பிட முடியாது.
ஏனெனில் கேரளாவில் இஸ்லாமியர்கள் கல்வியறிவு 89.4 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் 82.9 சதவீதமாகவும், சத்தீஸ்கரில் 83 சதவீதமாகவும் உள்ளது.
7-16 வயதில் உள்ள முஸ்லிம்கள் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதை கணக்கில்கொண்டால் கேரளாவும், தமிழகமும் குஜராத்தை வீழ்த்திவிடுகின்றன.
இவ்விரு மாநிலங்களில் மேற்கூறிய வயதிலுள்ள முஸ்லிம்கள் சராசரியாக 5.50 ஆண்டுகள் பள்ளியில் செலவிடுகின்றனர். குஜராத்தில் முஸ்லிம் குழந்தைகள் ஆண்டுக்கு 4.29 ஆண்டுகளே செலவிடுகின்றனர்.
நாட்டின் சராசரி 3.96 ஆண்டுகள் என்பதை ஒப்பிடும்போது குஜராத் மேம்பட்ட நிலையில் உள்ளது.
குஜராத்தில் மதரஸாக்களில் குறைவான முஸ்லிம்களே கல்வி பயில்கின்றனர். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம்கள் 25%.
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரையிலாவது படித்த முஸ்லிம்களின் அளவை கணக்கில் கொண்டால் குஜராத் இந்தியாவில் முதலிடத்தைப் பிடிக்கவில்லை. சச்சார் கமிட்டி அறிக்கையின்படி தேசிய சராசரியை(23.9%) முந்தியிருக்கிறது குஜராத் (26.1%).
ஆனால் ஆந்திராவில்தான் பத்தாம் வகுப்பு வரை படித்த முஸ்லிம்களின் அளவு அதிகம் (40%). மேற்கு வங்காளம்தான் (11.9%) இப்பட்டியலில் கடைசியில் உள்ளது.
வேலை வாய்ப்பு
இந்தியாவில் 64.4% மக்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக 2006 சச்சார் கமிட்டி அறிக்கை கூறுகிறது. இந்துக்களில் 65.8 சதவீதத்தினர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் முஸ்லிம்களின் 54.9 சதவீதத்தினர் மட்டுமே வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
குஜராத்தில் வேலை வாய்ப்பு பெற்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்துக்களில் 71 சதவீதத்தினரும் இஸ்லாமியர்களில் 61 சதவீதத்தினரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இருப்பினும், இங்கும் குஜராத்துக்கு முதலிடமில்லை. ஆந்திராவில் 72% முஸ்லிம்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ராஜஸ்தானில் 71 சதவீதம். குஜராத் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
அரசுத் துறைகளில் முஸ்லிம்களின் பங்கு
குறிப்பிட்ட மாநில அரசுத் துறைகளில் முஸ்லிம்களின் பங்கு எவ்வளவு எனப் பார்த்தால், குஜராத்தில் 5.4 சதவீத இஸ்லாமியர்கள் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்தியாவில் அசாமில்தான் அரசு துறைகளில் 11.2 சதவீத முஸ்லீம்கள் உள்ளனர். மேற்கு வங்கம் (2.1%) கடைசி இடத்தில் உள்ளது.
குஜராத் மாநில அரசுத்துறைகளில் உயர்பதவிகளில் முஸ்லிம்களின் நிலையானது, இந்திய அளவில் கடைசி நிலையில் இருக்கிறது. அங்கு 3.4 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே குறிப்பிட்ட துறைகளில் உயர்பதவிகளில் உள்ளனர். சுகாதார துறையில் 1.7% முஸ்லிம்களும் கல்வித்துறையில் 2.2% முஸ்லிம்களும் உயர்பதவிகளில் உள்ளனர்.
பீகாரில் தான் அரசுத்துறைகளில் உயர் பதவிகளில் முஸ்லிம்கள் அதிகளவு உள்ளனர். அங்கே கல்வித்துறையில் 14.8% முஸ்லிம்கள் உயர்பதவியில் உள்ளனர். சுகாதாரத் துறையில் முஸ்லிம்கள் அதிகம் இருப்பது கேரளாவில்தான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்