ஆக்ராவில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பிற செய்திகள்

எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி

15 வயது சஞ்சாலியின் மரணச் செய்திகைக் கேட்டு டிசம்பர் மாதத்தின் கடைசி வாரமும், வட இந்தியாவின் குளிர்ந்த காற்றும் கூட அழுவதைப் போல இருக்கிறது.

ஆக்ரா அருகே மல்புரா மார்க் பகுதியில் டிசம்பர் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உயிரோடு எரிக்கப்பட்ட சிறுமி சஞ்சாலி.

இந்தச் சம்பவம் நடந்த பிறகு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்கள் என்று, சஞ்சாலியுடன் பள்ளிக்குச் செல்லும் தோழி டாமினி கூறினார்.

இந்திய அரசுகள் உளவு பார்ப்பதன் பின்னணி

சமீபத்தில் மத்தியில் ஆளும் மோதி அரசு, இந்தியாவின் எந்த மூலைகளில் இருந்தும் செயற்படும் கம்ப்யூட்டர்களில் இருந்து வெளியேறும் மற்றும் அவற்றுக்கு உள்ளே வரும் எந்த தகவல்களையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும், குறிப்பிட்ட கம்ப்யூட்டர்களில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் எந்த தகவல்களையும், தோண்டி எடுத்து, அப்படியே அள்ளிக் கொண்டு போகவும், பத்து அரசு அமைப்புகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது.

மோதி அரசின் இந்த சமீபத்திய உத்தரவை பார்ப்பதற்கு முன்பாக, நாடு விடுதலை அடைந்த கடந்த 70 ஆண்டு காலத்தில் இதற்கு முன்பு இப்படிப்பட்ட முயற்சிகள், அந்தந்த காலகட்டத்தில் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளர்களிடமிருந்து எப்படி வெளிப்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மரணத்துக்குப் பிறகு நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அரசு ஊழியர்

மிகவும் சிக்கனமான மற்றும் எளிமையான வாழ்க்கை வாழ்பவராக அறியப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தனது இறப்புக்குப் பிறகு சுமார் 11 மில்லியன் டாலர் (சுமார் 85 கோடி இந்திய ரூபாய்) மதிப்புள்ள சொத்துகளை ஆறு சமூக சேவை நிறுவனங்களுக்கு விட்டுச் சென்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவை பெரும்பாலும் குழந்தைகளுக்காக செயல்படும் அமைப்புகளாகும்.

2018 ஜனவரியில் சியாட்டில் நகரில் புற்றுநோயால், தம் 63ஆம் வயதில் ஆலன் நய்மன் மரணமடைந்தார்.

தனது விடுமுறை நாட்களைக் கழிக்கக்கூடப் பார்த்துப் பார்த்து செலவு செய்த ஆலனிடம் இவ்வளவு பணம் இருந்தது அவரது நண்பர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவரது பெற்றோர் மூலம் கிடைத்த சொத்துகளை மட்டுமல்லாது, தாம் ஈட்டிய பொருளையும் சிறுகச் சிறுக ஆலன் சேமித்து வைத்திருந்துள்ளார்.

சராசரியாக சில நூறு டாலர்களையே நன்கொடையாகப் பெறும் அந்தத் தொண்டு அமைப்புகளுக்கு, மில்லியன் கணக்கில் ஆலன் விட்டுச் சென்றுள்ள சொத்துகள் பெருத்த உதவியாக இருக்கும்.

இலங்கை வெள்ள பாதிப்பு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 38,209 குடும்பங்களை சேர்ந்த 118,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2827 குடும்பங்களை சேர்ந்த 8936 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 27 முகாம்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ள அனர்த்தத்தினால் 2 பேர் மரணமடைந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர்.170 வீடுகள் முழுமையாகவும் 3506 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. 2 சிறு கைத்தொழில் நிறுவனங்கள் சேதமடைந்துள்ளது.

71 வயது தாத்தாவின் சாதனை முயற்சி

பிரெஞ்சுக்காரர் ஒருவர் அட்லாண்டிக் பெருங்கடலை ஓர் உருளை வடிவ ஆரஞ்சு நிற பேரல் (பீப்பாய்) மூலம் கடக்கத் துவங்கியுள்ளார்.

படகுகளில் பொருத்தப்படும் இன்ஜின் எதுவும் இல்லாமல், பெருங்கடலின் நீரோட்டங்களை பயன்படுத்திதான் இந்த கொள்கலன் மூலம் 4500 கிமீ தூரத்தை கடக்கப்போகிறார்.

பிரான்ஸைச் சேர்ந்த 71 வயது ஜீன்-ஜாக்குவஸ் சவின், ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஒன்றான எல் ஹியர்ரோ தீவில் இருந்து கிளம்பியிருக்கிறார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் கரீபியன் தீவுகளை அடையமுடியும் என நம்புகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: