பிரியா வாரியார் முதல் சின்மயி வரை; சபரிமலை முதல் #MeToo வரை - 2018-இல் வைரலான பெண்கள், பிரச்சனைகள்

2018ஆம் ஆண்டில் #MeToo, மித்தாலி, சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி கோரி போராட்டம் என பெண்களை பாதித்த, பரவலாக பேசப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு இது.

திரைத்துறையை கலங்கவைத்த #Me too

கடந்த ஆண்டில் உலக அளவில் பிரபலமான மீ டூ 2018ஆம் ஆண்டில் இந்தியாவிலும் பரவலாக பேசப்பட்டது.

அதில் குறிப்பிடத்தக்கவையாக, வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே அக்பர் மீதும் மீ டூ புகார்கள் எழுந்தன. மீ டூ புகார்கள் கூறப்படும் பெண்கள் மீது பலதரப்பட்ட கேள்விகளும் எழுந்தன. ஏன் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் கோரவில்லை, தற்போது வந்து கூறுவதற்கு காரணம் என்ன என பலராலும் புகார் கூறிய பெண்கள் முன்பு பல கேள்விகள் கேட்கப்பட்டன.

இது ஒரு தீர்வு என்று கூறாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக பேசுவதற்கான ஒரு தளமாக அமைந்தாலே அதுவே வெற்றி எனவும் கருதப்பட்டது.

தமிழ் திரைப்படத்துறையை சார்ந்தவர்கள் சிலரின் மீது வெளிப்படையாக மீ டூ மூலம் குற்றம் சாட்டப்பட்டன. அதில் பாடகி சின்மயி பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து மீது மீ டூ புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2007ல் அமெரிக்க செயல்பாட்டாளரான தரனா பர்கே 'நானும்' என பொருள்படும் MeToo இயக்கத்தை முன்னெடுத்தார். அதுவே 2017ல் Me Too எனும் ஹேஷ்டேகாக மீண்டு எழுந்தது.

ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீனின் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து இந்த ஹேஷ்டேக் மீண்டெழுந்தது. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் முன்வந்து ஒற்றுமையை காண்பிக்கவேண்டும் என நடிகை அலிஸா மிலானோ ட்விட்டரில் பதிவிட்டதையடுத்து இந்த ஹேஷ்டேக் பலரின் கவனத்தை பெற்று பிரபலமடைய துவங்கியது.

சபரிமலையில் பெண்கள் - கடும் எதிர்ப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் ஆண்கள் மட்டுமே செல்லலாம் என்ற வழக்கம் இருந்து வந்தது.

ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி, சபரிமலை கோயிலுக்குள் பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை அளித்தது.

அதனை தொடர்ந்து பல பெண் பக்தர்களும், செயற்பாட்டாளர்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முற்பட்டனர்.

ஆனால் சபரிமலைக்கு பெண்கள் செல்வதை விரும்பாத சில இந்து அமைப்புகளும், பக்தர்கள் சிலரும் போராட்டங்களில் ஈடுபட்டனர் கோயிலுக்குள் நுழைய முற்பட்ட பெண்களை தடுத்தனர்.

எனவே பெண்கள் கோயிலுக்குள் நுழைய முற்படும் போதேல்லாம், போராட்டங்கள், அதனை தொடர்ந்து போலிஸ் பாதுகாப்பு, 144 தடை உத்தரவுகள் என சபரிமலை கோயில் விவகாரம் தொடர்ந்து செய்தியில் இருந்து கொண்டே வருகிறது.

மன உளைச்சலுக்கு ஆளான மித்தாலி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை இறுதி போட்டி வரை வழிநடத்திச் சென்ற கேப்டன் மித்தாலி ராஜிக்கு இந்த வருடத்தின் கடைசி சில மாதங்கள் சிறப்பானதாக இல்லை என்று கூறலாம்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மித்தாலி நல்ல ஃபார்மில் இருந்தும் சேர்க்கப்படவில்லை.

பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினரும், மகளிர் அணியின் முன்னாள் உறுப்பினருமான டயானா எடுல்ஜி ஆகியோர் தமக்கு எதிராக பாரபட்சகமாக நடந்துகொள்வதாகவும், தமது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க முயல்வதாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மித்தாலி ராஜ் குற்றம் சாட்டியிருந்தார்.

மித்தாலிக்கு 2018-ஆம் ஆண்டின் கடைசி மாதங்கள் சிறப்பான ஒரு ஆண்டாகவே மாற்றியுள்ளது. ஆம், மித்தாலி மீண்டும் இந்திய அணியின் ஒரு நாள் போட்டிக்காக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கெளசல்யா மறுமணம்

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கெளசல்யா டிசம்பர் மாதம் 9ஆம் தேதி கோவையை சேர்ந்த சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

சங்கரின் மறைவுக்கு பிறகு சாதிய கொடுமைகளுக்கு எதிராக கெளசல்யா செயற்பட்டு வருகிறார்.

பலர் கெளசல்யாவின் மறுமணத்துக்கு வாழ்த்துக்களையும், ஆதரவு குரல்களையும் கொடுத்த போதிலும், சமூக வலைதளங்களில் சில எதிர்ப்பு குரல்களும் எழத்தான் செய்தன.

ஆனால் "என் மறுமணம் பற்றி விமர்சிப்பவர்களுக்கு என் சமூகப் பணி பதிலளிக்கும்" என பிபிசி தமிழிடம் பேசிய கெளசல்யா தெரிவித்திருந்தார்.

சாதனை படைத்த சிந்து

2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்ற பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்த ஆண்டு உலகச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

BWF World Tour போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை இந்த ஆண்டு பெற்றார் பி.வி.சிந்து.

அடுத்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வாவதே தனது லட்சியம் என்றும் 2019ஆம் ஆண்டில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தப்போவதாகவும் சிந்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளில் சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைதான சோபியா

செப்டம்பர் மாதத்தில் சென்னையிலிருந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணம் செய்தபோது சோஃபியா என்ற மாணவி பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை பார்த்து 'பாசிச பாஜக அரசு ஒழிக' என கோஷமிட்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளையும், எதிர்ப்பு அலைகளையும் எழுப்பியது.

சமூக வலைதளங்களில் சோஃபியாவுக்கு ஆதரவான குரல்களும் பாஜகவுக்கான எதிர்ப்பு விமர்சனங்களும் உடனடியாக எழுந்தன.

#Sophia, #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹாஷ்டேகுகள் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கிலும் முதல் பத்து இடங்களை பிடித்தது.

மிஸ் இந்தியாவாக தமிழ் பெண் - அனு கீர்த்தி

தமிழகத்தை சேர்ந்த 19 வயது அனு கீர்த்தி வாஸ் 2018ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டத்தை வென்று அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அனு கீர்த்தி. சென்னை கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார்.

உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு அனு கீர்த்தி முதல் 30 இடங்களுக்குள் இடம்பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திடீரென வைரலான பிரியா வாரியர்

இன்றைய சமூக வலைதள காலத்தில் சட்டென்று ஒரு நொடியில் யாரும் புகழின் உச்சிக்கு போய்விடலாம் என்பது அடிக்கடி நிரூபிக்கபட்டு வருகிறது ஆம், அந்த வரிசையில் சமூக வலைதளத்தால் புகழின் உச்சிக்கு சென்றவர் பிரியா வாரியர்.

இவர் நடித்த ஒரு அடார் லவ் என்ற படத்தில் ஒரு சிறிய காட்சி, அதில் பிரியா வாரியர் ஒரு கண்ணை தூக்கி படத்தின் ஹீரோவுடன் பேசுவார் இது சமூக ஊடகங்களின் திடீரெனஅனைவராலும் பகிரப்பட்டு ப்ரியா வாரியரை புகழின் உச்சிக்கு கூட்டிச் சென்றது. அவருக்கு கிடைத்த புகழ் அவரேகூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: