You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சோனியா காந்தி - ஸ்டாலின் டெல்லியில் சந்திப்பு
திமுகவின் மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை வரும் 16ஆம் தேதி அன்று, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி திறந்து வைக்கும் விழா நடைபெற உள்ளதாக திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, புதுடெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்திற்கு நேரில் சென்று, கருணாநிதியின் திருவுருவச் சிலை திறப்பு விழா அழைப்பிதழை ஸ்டாலின் அளித்தார்.
சோனியா காந்தியின் பிறந்தநாளினை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து அஜயன் பாலா எழுதிய "செம்மொழிச் சிற்பிகள்" நூலினை வழங்கினார்.
"72ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் கலைஞர் அவர்களின் மீது மாறாத பற்றும் பாசமும் கொண்ட அவர், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைந்தவுடன் தலைவர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கிடும் வண்ணம், செந்தமிழ் மொழியைச் செம்மொழியே எனப் பிரகடனப்படுத்துவதற்கு மிக வலிமையான அடித்தளம் அமைத்தவர்."
"மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்ட அவர், நாட்டின் பொதுநலன் கருதியும், அனைவருடைய பொதுவான நோக்கங்களுக்கு வடிவமைப்பு கொடுத்திடும் வகையிலும், அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பிற்குத் தூண்டுகோலாகவும் உற்ற பெருந்துணையாகவும் இருந்து வருகிறார். பிளவுபடுத்தும் பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் கனிவும், துணிவும், தெளிவும் மிக்க செயல்பாடுகளும் கொண்ட சோனியா அவர்கள், நலமோடும் மகிழ்வோடும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உகந்த வழிகாட்டிட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்."
இந்நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி,கனிமொழி, ஆ.இராசா ஆகியோர் உடனிருந்தனர்.
இச்சந்திப்பின் போது, காவிரியின் குறுக்கே, கர்நாடகா அரசு "மேகதாது அணை" கட்டுவது குறித்து, திருமதி சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் பேசியதாக திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்