You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரான்ஸின் எரிபொருள் உயர்வுக்கு எதிரான போராட்டம்: தொடரும் வன்முறை
பிரான்ஸில் அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளதால் சுமார் 90,000 பாதுகாப்புப் படையினர் தெருக்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாரீஸ் நகரில் மட்டும் சுமார் 8000 அதிகாரிகள் மற்றும் 12 கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்நகரின் மத்திய பகுதியில் சுமார் 5000 பேர் கூடியுள்ளனர்.
பாரீஸ் நகரில் இதுவரை 127 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் போலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதை பார்க்க முடிகிறது.
`மஞ்சள் ஜாக்கெட்` என்று அழைக்கப்படும் இந்தப் போராட்டம் பிரான்ஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராக தொடங்கப்பட்டது.
ஆனால் இது "அதிதீவிர வன்முறையாளர்களால்" கையில் எடுக்கப்பட்டுள்ளது என்று பிரான்ஸ் அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.
பாரீஸ் நகரில் பல வருடங்களில் நடைபெறாத அளவு மோசமான போராட்டமாக கருதப்படும் இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இந்த வாரம் நடைபெறபோவது என்ன?
பாரீஸ் நகரில் சாம்ப்ஸ் எலிசீஸ் என்னும் இடத்தில் கூடிய சுமார் 5000 பேர், போலிஸ் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த இடம் வரை பேரணியாக சென்றனர்.
போராட்டக்காரர்கள் மீது போலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதால் அங்கு பதற்றநிலை உருவாகியது.
இதுவரை பயன்படுத்தாத வகையில் சக்திவாய்ந்த வாயுவை கண்ணீர் புகைகுண்டுகளில் போலிஸார் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
"அங்கு வெகுசில போராட்டக்காரர்களே இருந்தனர், ஆனாலும் போலிஸார் பைகளை சோதித்தனர். மேலும் ஹெல்மெட் மற்றும் கண்ணாடி போன்ற பொருட்களை கைப்பற்றினர்" என பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் போராட்டக்காரர்களில் பலர் 20-40 வயது மதிக்கத்தக்க ஆண்கள் என்றும் பெண்களும், வயதானவர்களும், வன்முறை அச்சத்தினால் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார் அந்த பத்திரிகையாளர்.
கண்ணீர் புகைகுண்டுகளில் இருந்து தற்காத்து கொள்ள வைத்திருந்த முகமூடிகளையும் போலிஸார் வாங்கிக் கொண்டதாக போராட்டக்கார்ர்கள் கூறியதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ரயில் நிலையங்களில் குறைந்தது 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 350 பேர் பாதுகாப்பு சோதனைகளுக்காக தடுத்து நிறுத்தப்பட்டனர் என்று போலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வார இறுதியில் நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில், பாதுகாப்பு பணியில் சுமார் 65,000 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர் அனால் இந்த வாரம் அந்த எண்ணிக்கை 89,000ஆக அதிகரித்துள்ளது. உள்துறை அமைசர் இந்த வாரம் குறைந்த போராட்டக்காரர்களே வருவார்கள் என்று தெரிவித்திருந்தபோதிலும் பாதுகாப்பு படையினர் அதிகமாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைகள் இவ்வாரம் நடைபெறாமல் இருக்கும் நடவடிக்கைகளில் போலிஸார் ஈடுபட வேண்டும்.
அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?
எரிபொருள் வரி உயர்வை தடுப்பதாக அரசு உறுதியளித்துள்ளது.மேலும் 2019ஆம் ஆண்டுக்கான மின்சாரம் மற்றும் எரிவாயுக்கான விலையை நிர்ணயித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் போராட்டம் மேலும் பல காரணங்களுக்காக விரிவடைந்தது.
விலை குறைப்புகள் அனைத்து போராட்டக்காரர்களையும் திருப்தி படுத்தவில்லை; சிலர் ஊதிய உயர்வு கோருகின்றனர், சிலர் வரிகளை குறைக்க விரும்புகின்றனர், சிலர் அதிக பென்ஷன்களை கோருகின்றனர், சிலர் பல்கலைக்கழக படிப்புகளுக்கான வாய்ப்புகளை எளிதாக்க கோருகின்றனர், சிலர் அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் கோருகின்றனர்.
போராட்டக்காரர்களில் பலர் மக்ரோங் பணக்காரர்களுக்கான அதிபர் என்று தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்