நெல் ஜெயராமன்: நூறு ரக விதை நெல், ஆண்டுக்கொரு திருவிழா - சாமானியனின் பெருங்கனவு

பட மூலாதாரம், Facebook
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
நாம் மறந்த, அல்லது அரசியலால் இழந்த அனைத்து பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்க வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர் எப்போதும் எழாத உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.
நம்மாழ்வார் நட்பு
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருமழை நாளில்தான் நானும், நண்பன் காசி வேம்பையனும் நெல் ஜெயராமனை சந்திக்க சென்றோம். அப்போது அவர் 'நெல்' ஜெயராமன் எல்லாம் இல்லை; கட்டிமேடு ஜெயராமன்தான். நுகர்வோர் உரிமைக்காக தனது கிராம அளவில் அப்போது தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது கவனம் மரபு நெல் ரகங்களின் மேல் குவிந்திருந்தது. அதற்கு நம்மாழ்வாருடன் ஏற்பட்ட நட்பும் ஒரு காரணம்.

பட மூலாதாரம், M Niyas Ahmed
பயண நேர முழுவதும், வேம்பையன் நெல் ஜெயராமன் மீட்ட நெல் ரகங்கள் குறித்து விவரித்து கொண்டே வந்தான். காட்டு யானம், பூங்கார், குடவாலை என அவர் மீட்ட நெல் ரகங்கள் குறித்து விவரித்துக் கொண்டே வந்தான். இந்த பெயர்கள் எல்லாம் எனக்கு புதிதாக இருந்தது. புதியவை எப்போதும் சுவாரஸ்யமானவைதானே. அதனால் அந்த சந்திப்பும் மிக சுவாரஸ்யமாக இருந்தது.
நெல் ரகம்
மரபு நெல்லை மீட்க அவர் மேற்கொண்ட நெடும் பயணம் அந்த நெடும் பயணத்தில் முடிவில் அவர் மீட்ட ஏழு வகை நெல் ரகங்கள் என அப்போது பல விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். அது அவர் வாழ்க்கையின் திசை வழியையே மாற்றியதாக கூறினார். அதுவரை நுகர்வோர் உரிமைக்காக போராடியவர், அதன் பின் மரபு ரக நெல் வகைகளை மீட்கும், பரப்பும் பணிக்கு தம்மை அர்பணித்து கொண்டதை நினைவு கூர்ந்தார்.

பட மூலாதாரம், M Niyas Ahmed
அந்த சமயத்தில் மகசூல் என்ற வார்த்தை எனக்கு புதிது. அதுமட்டுமல்ல, அனைத்து நெல் ரகங்களின் அறுவடை காலமும் ஒன்று என்றே நினைத்திருந்தேன். ஆனால், நெல் அறுவடை காலம் என்பது ரகத்திற்கு ஏற்றார் போல மாறுபடும். குறைந்தபட்சமாக பூங்கார் 70 நாளிலும், ஒட்டையான் 200 நாளிலும் அறுவடைக்கு வரும் என்றெல்லாம் கண்களில் ஒளியுடன் விவரித்தார்.
'ஒரு வரி பயணம் அல்ல'
ஒரு சொல்லோ, பொருளோ தொடர்ந்து நடைமுறை வழக்கத்தில் இருந்தால்தான், அவை உயிர்ப்புடன் இருக்கும். இது நெல்லிற்கும் பொருந்தும். ஒரு நெல்லை மீட்பது, காப்பது என்பது, அதனை தொடர்ந்து விதைப்பது. நெல் ஜெயராமன் விதைத்தால் மட்டும் போதாது. பல நெல் ஜெயராமன்கள் உருவாக வேண்டும். இதற்காகதான் அவர் நெல் திருவிழாவை ஒருங்கிணைத்தார்.

பட மூலாதாரம், neljayaraman.com
திருத்துறைப்பூண்டி ஆதிரங்கத்தில் அவர் ஒருங்கிணைத்திருத்த நெல் திருவிழாவிற்கு சென்றேன். அப்போது அவர், "நெல்லை மீட்பதைவிட, அதை பாதுகாப்பது தான் சிரமமாக இருக்கிறது" என்றார்.
அதற்கு காரணம் அப்போது விவசாயிகள் மனதில் படிந்திருந்த எண்ணம். மரபு ரக நெல் வகைகள் விளைச்சல் தராது, நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் ஆழமாக நம்பினார்கள். இந்த அவநம்பிக்கை கலைப்பதுதான் கடினமாக இருந்தது என்றார்.
அவநம்பிக்கையிலுருந்து நம்பிக்கைக்கு
நம்பிக்கை தளராமல் பயணித்த நெல் ஜெயராமன், மரபு ரக நெல்லின் வணிகத்தையும் உறுதிபடுத்தினார்.
குறிப்பாக நாகபட்டினத்தில் நான் சந்தித்த விவசாயி சோமு கூறியவை நன்றாக நினைவிருக்கிறது. "நான் விவசாயத்திலிருந்து வெளியேற எண்ணினேன். சுனாமிக்கு பிறகு கடல் நீர் உட்புகுந்து நிலமெங்கும் உப்பு பூத்துவிட்டது. அந்த சமயத்தில் நெல் ஜெயராமன் கொடுத்த பூங்கார் நெல் ரகம்தான் நான் என் நிலத்தில் இன்னும் ஊன்றி நிற்க காரணம்" என்றார்.

பட மூலாதாரம், M Niyas Ahmed
இப்படிதான் பலரை நம்பிக்கை திசையில் பயணிக்க வைத்திருக்கிறார் ஜெயராமன். புற்று நோய் வந்த பின்பு, அவர் கலந்து கொண்ட ஓர் கூட்டத்தில், எனக்கு புற்றுநோய். என் மரணத்தை தள்ளி போட்டுக் கொண்டிருப்பது மரபு நெல் ரகங்கள்தான் என்று இறப்பை நோக்கிய பயணத்தையும் மரபு நெல்லை பரப்பும் பிரசாரமாக மாற்றினார்.
பூவுலகு நண்பர்கள் தனது அஞ்சலி பகிர்வில் கூறி இருந்ததை கோடிட்டு இந்த கட்டுரையை முடிக்கிறேன், 'விதைநெல், நடுகல்லாக மாறிவிட்டது'.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












