ரகசிய கேமரா வைத்த மகளிர் விடுதி உரிமையாளர் - மாணவிகள் கண்டுபிடித்தது எப்படி?

இன்று முக்கிய இந்திய நாளேடுகள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: 'ரகசிய கேமரா வைத்த மகளிர் விடுதி உரிமையாளர்'

சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமராக்களை மறைத்துவைத்த விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மகளிர் விடுதி நடத்துபவர் சம்பத்குமார் என்ற சஞ்சய் (45). மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவோர், பல் மருத்துவர் உட்பட 7 பெண்கள் மாத வாடகை அடிப்படையில், அந்த விடுதியில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் காலையில் ஒரு பெண் தனது கூந்தலை உலர வைப்பதற்கான கருவியை மின்சார பிளக்கில் சொருக முயன்றுள்ளார். எதிர் பாராமல் பிளக் உடைந்து விடவே, சுவருக்குள் பேட்டரியுடன் ஏதோ ஒரு கருவி இணைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அது ரகசிய வீடியோ கேமரா என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே ரகசிய கேமராக்களைக் கண்டறியும், 'Hidden Camera Detector' என்ற செயலியை செல் போனில் பதிவிறக்கம் செய்து, அனைத்து அறைகளிலும் சோதனை செய்துள்ளனர்.

அப்போது, படுக்கை அறை, குளியல் அறைகளில் இருந்த சுவிட்ச் போர்டு, எல்இடி விளக்குகள், அழைப்பு மணி, துணி மாட்டும் ஹேங்கர் என 10 இடங்களில் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக ஆதம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். காவல் துணை ஆணையர் முத்துசாமி உத்தரவின்பேரில் உதவி ஆணையர் கெங்கைராஜ், ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் முரளி ஆகியோர் விசாரணை நடத்தினர். பல இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 ரகசிய கேமராக்களையும் அகற்றினர்.

அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் நேரடியாக சஞ்சயின் கணினிக்கு வந்து விடும் விதமாக, கேமராக்கள் அனைத்தும் வயர்லெஸ் மூலம் இணைக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதை யடுத்து, சஞ்சயின் லேப்-டாப், அவரிடம் இருந்த 16 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். சஞ்சய்யை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

கைதான சஞ்சய், கேரளாவை சேர்ந்தவர். அவரிடம் இருந்து போலியான ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன.

ஏற்கெனவே வேறு விடுதிகளில் இதுபோல ரகசிய கேமராக்களை மறைத்துவைத்தாரா? பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை என்ன செய்தார்? என்று பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அனைவரும் நேற்று முன்தினம் மாலையே அறைகளை காலி செய்தனர். அவர்கள் கொடுத்திருந்த முன்பணத்தையும் சஞ்சயிடம் இருந்து போலீஸார் வசூலித்து கொடுத்துள்ளனர்.

செல்போனில் 'Hidden Camera Detector' என்னும் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அந்த செயலியை ஆன் செய்தால், செல்போனில் உள்ள கேமரா வீடியோ தானாக செயல்பட ஆரம்பிக்கும். பின்னர், அறை முழுவதும் வீடியோ எடுக்க வேண்டும். ரகசிய கேமரா உள்ள இடத்தை வீடியோ எடுக்கும்போது செல்போனில் உள்ள சென்சார் மூலம் 'பீப்' ஒலி கேட்கும். அதன்மூலம், அங்கு கேமரா மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கலாம். 'ஸ்பை ஃபைண்டர்' என்ற சிறிய சென்சார் கருவி மூலமாகவும் ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்கலாம்" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ஜெயலலிதாவுக்கு உலகத் தரமான சிகிச்சை - அப்போலோ'

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனை உலகத் தரமான சிகிச்சை அளித்தாக அதன் செயல் தலைவர் மருத்துவர் பிரதாப் சி ரெட்டி கூறி உள்ளார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

ஐம்பதாயிரம் இருதய அறுவை சிகிச்சைகளை அப்போலோ நிர்வாகம் மேற்கொண்டதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் இவ்வாறாக கூறினார் என்கிறது அந்நாளிதழ்.

மேலும் அவர், நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை நடந்துக் கொண்டிருப்பதால், தம்மால் அது குறித்து அதிகம் பேச முடியாது என்றும் அவர் தெரிவித்ததாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: 'விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கை போலீஸ்'

அதிகாரிகளால் மனஉளைச்சலுக்கு ஆளானதாக புகார் கூறியுள்ள திருநங்கை போலீஸ் நஸ்ரியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த வீடியோ 'வாட்ஸ்-அப்'பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்தவர் நஸ்ரியா(வயது 22). திருநங்கையான இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியில் சேர்ந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசாக பணியாற்றும் முதல் திருநங்கை என்ற சிறப்புடன் அவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் திருநங்கை நஸ்ரியா நேற்று முன்தினம் இரவு எலி மருந்தை (விஷம்) தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த வீடியோ 'வாட்ஸ்-அப்'பில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவில் நஸ்ரியா பேசும் போது, 'அதிகாரிகளால் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும், தனது இந்த நிலைக்கு ஆயுதப்படை பிரிவு தலைமை காவலர் ஒருவரும், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரும் தான் காரணம். அவர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கூறியுள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பினார். இதை பார்த்தவர்கள் உடனடியாக அவரை சென்று பார்த்தனர். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த நஸ்ரியாவை மீட்டு உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'ஹெலிகாப்டர் பேர வழக்கு - இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார் இடைத்தரகர்'

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படும் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மிஷெல், துபையிலிருந்து இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு நாடு கடத்தப்பட்டு கொண்டுவரப்பட்டார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,100 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2010-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்துக்காக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் சார்பில் இந்திய தரப்புக்கு ரூ.423 கோடி வரை லஞ்சம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2014-இல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் 3 இடைத்தரகர்களில் முக்கிய நபராக குற்றம்சாட்டப்படுபவர் பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மிஷெல் (57). விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்டோருடன் சேர்ந்து குற்றச் சதியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது" என்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :