You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேஜர் நினைவிருக்கிறதா? - முடிவுக்கு வருகிறது அதன் சேவை
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
'பேஜர் சேவை'
ஜப்பானில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பேஜர் சேவை அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் தனது சேவையை நிறுத்திக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. டோக்கியோ டெலி மெசேஜ் எனும் அந்த சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இப்போது 1500 பேர் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக அந்த நிறுவனம் பேஜர் உற்பத்தியையும் நிறுத்திவிட்டது.1950-60வாக்கில் உருவாக்கப்பட்ட பேஜர், 1980களில் பிரபலமாக இருந்தது. 1996ஆம் ஆண்டில் டோக்கியோ டெலி மெசேஜ் சந்தாதாரர்களாக 12 லட்சம் பேர் இருந்தனர். ஆனால், செல்போனின் வருகை பேஜர் சேவையை வழக்கொழிய செய்தது.
'துப்பாக்கிச் சூட்டில் 24 தொழிலாளர் பலி'
இந்தோனீசியா கிழக்கு பப்புவா மாகாணத்தில் துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 24 கட்டட தொழிலாளர்கள் பலி ஆகினர். இந்த படுகொலை சம்பவம் குறித்து விசாரணை செய்ய அனுப்பப்பட்ட படைவீரர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். மலைகள் நிரம்பிய பகுதி ஒன்றில் பணியாளர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகள்தான் இதற்கு காரணம் என்கிறது போலீஸ். சுதந்திர பப்புவாவிற்காக பல தசாப்தங்களாக அந்த பகுதியில் மக்கள் போராடி வருகின்றனர்.
எல்லை சுவரை ஏறி குதித்த குடியேறிகள்
அமெரிக்காவில் புகலிடம் தேடும் இருபதிற்கும் மேற்பட்ட குடியேறுஇகள் வெற்றிகரமாக மெக்சிகோவின் டீச்வானா பகுதியில் உள்ள எல்லைசுவரை ஏறி குதித்துள்ளனர். சிலர் கைதிலிருந்து தப்பிக்க முயற்சிக்க, சிலர் தாங்களாக காவலர்களிடம் சரண் அடைந்துள்ளனர். மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து ஆயிரக்ணக்கான மக்கள் அக்டோபர் மாதம் புகலிடம் கேட்டு அமெரிக்காவை நோக்கி நடைபயணமாக சென்றனர். அவர்கள் மெக்சிகோவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பணிந்தது பிரான்ஸ்
பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து நடந்துவரும் தீவிரமான போராட்டத்தை அடுத்து பிரான்ஸ் எரிபொருள் மீதான வரி உயர்வை ஆறு மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. இந்த வரி உயர்வினால்தான், அந்நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்தது. இது வன்முறைகள் நிறைந்த போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது. போராட்டங்கள் மேலும் மேலும் தீவிரமடைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனை அந்நாட்டின் பிரதமர் ஃபிலீப் அறிவித்துள்ளார்.
ஜமால் கஷோக்ஜி கொலையில் தொடர்பு
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையில் செளதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறி உள்ளார். குடியரசு கட்சியை சேர்ந்த இந்த தெற்கு கரோலினா செனட்டர் சல்மானை அபாயகரமானவர், கிறுக்குத்தனமானவர் என்றும் விவரித்துள்ளார். யேமனுக்கு எதிரான செளதியின் போரையும், பட்டத்து இளவரசர் அதிகாரத்தில் இருக்கும் வரை செளதிக்கு ஆயுதம் விற்பனை செய்வதையும் ஆதரிக்க முடியாதென கிரஹாம் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- புலந்த்ஷகரில் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டது எப்படி?
- 'அழிவின் விளிம்பில்' உலகின் விந்தையான சுறாக்கள் - காரணம் என்ன?
- “இலங்கை அமைச்சு செயலாளர்களின் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கியது சட்டவிரோதம்” - பதியுதீன்
- பருவநிலை மாற்றம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 7 உண்மைகள்
- ஐந்து மாநில தேர்தல்: வினோதமான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :