பாஜக ஆபத்தான கட்சியா?- ரஜினிகாந்த் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: 'பாஜக ஆபத்தான கட்சியா?- ரஜினிகாந்த் விளக்கம்'
பாஜகவை ஆபத்தான கட்சியாக பலர் நினைக்கிறார்கள் என்றால், கண்டிப்பாக அப்படிப்பட்ட கட்சியாகத்தான் இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"தமிழகத்தில் சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சரியாகச் செயல்படுத்தவில்லை. அதை அமல்படுத்திய விதம் தவறு. விரிவான ஆய்வுக்குப் பின்னரே அமல்படுத்தியிருக்க வேண்டும்.அதைப் பற்றி விரிவாக பேச வேண்டியுள்ளது.
பாஜகவை ஆபத்தான கட்சி என நிறைய பேர் நினைக்கின்றனர். பலர் அவ்வாறு நினைக்கிறார்கள் என்றால், கண்டிப்பாக பாஜக அப்படிப்பட்ட கட்சியாகத்தான் இருக்கும்" என்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதில் உங்களது நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "எந்த ஏழு பேர்? அது குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் அதைக் கேள்விப்படுகிறேன்" என ரஜினி பதிலளித்தாக விவரிக்கிறது தினமணி.


பட மூலாதாரம், இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ரஃபால் விலை விவரம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு'

பட மூலாதாரம், Getty Images
ரஃபால் விலை விவரம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட செய்தி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பிரதானமாக இடம்பிடித்துள்ளது. அந்த 16 பக்க அறிக்கையில் விமானம் வாங்குவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட விமான படை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது என்றும், அவர்கள் 74 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


தினத்தந்தி: 'திசை மாறிய புயல்: 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை'

பட மூலாதாரம், Getty Images
"கஜா புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கிறது. விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு பாதிப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது." என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"நேற்றுமுன்தினம் சென்னைக்கு வட கிழக்கே 860 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்ட, இந்த புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இப்போது திசை மாறியுள்ள இந்த புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது.
இந்த புயலானது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும் அது தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் 15-ந்தேதி கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தற்போது நிலவரப்படி 14-ந்தேதி (நாளை) இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும். புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும்." என்று விவரிக்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: 'தவறுக்கு வருத்தம் தெரிவித்தது டிஎன்பிஎஸ்சி'
குரூப்-2 முதல்நிலைத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் பொது அறிவு பகுதியில், திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டு அதற்கு, இ.வெ.ராமசாமி நாயக்கர், ராஜாஜி, காந்திஜி, சி.என்.அண்ணாதுரை என 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் தந்தை பெரியாரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதுடன் சாதி ரீதியாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து.
ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதன் சுருக்கம்தான் ஈவெரா. இதுகூட தெரியாமல் ஈ என்பதற்குப் பதில் இ என போட்டுள்ளனர். கேள்வியை தயாரித் தவருக்கு ஈரோடுகூட தெரிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட நபர்களிடம் கேள்வி தயாரிக்கச் சொன்னால் தந்தை பெரியாருக்கு சாதிப்பட்டம் போடத் தானே செய்வர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
இதற்கிடையே, பெரியாரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதற்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது என்கிறது அந்நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












