மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு

अनंत कुमार सिंह

பட மூலாதாரம், PIB

மத்திய உரம், ரசாயனம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.ஆனந்தகுமார் (59) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை அதிகாலை பெங்களூருவில் காலமானார்.

மனைவி தேஜஸ்வினி, இரண்டு மகள்களுடன் அவர் வசித்துவந்தார்.

நுரையீரல் புற்றுநோய் பாதித்து லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சில வாரங்கள் முன்பு பெங்களூரு திரும்பினார்.

கடந்த மே மாதம் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ஆனந்தகுமாருக்கு ஏற்பட்ட கடும் இருமலை சரி செய்ய முடியாததால் சில மாதங்கள் முன்பு அவர் நியூயார்க்குக்கும், லண்டனுக்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

"கடந்த சில நாள்களாக, தீவிர சிகிச்சைப் பிரிவில், வென்டிலேட்டர் உதவியோடு இருந்துவந்த ஆனந்தகுமார், புற்றுநோய், நோய்த்தொற்று ஆகியவற்றால் அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார்" என்று அவரது அலுவலகத்தில் இருந்து வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996-ம் ஆண்டு முதல் பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுவந்த ஆனந்தகுமார் மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானியின் சீடர். 2014 ல் மோதி அமைச்சரவையில் பங்கேற்ற ஆனந்தகுமார் அதன் பிறகு பிரதமர் மோதியுடன் நெருக்கமானார்.

மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட செயலாக்கத்துறைகளின் அமைச்சர் சதானந்த கௌடா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமது நண்பர், சகோதரர் ஆனந்தகுமாரின் மறைவு நம்ப முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

1985ல் பாஜக சார்புடைய மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக தமது அரசியல் வாழ்வைத் தொடங்கினார் ஆனந்தகுமார். எடியூரப்பா, ஈஸ்வரப்பா, ஆனந்தகுமார் ஆகிய மூவரும் கர்நாடக பாஜகவின் முக்கிய மூன்று தலைவர்களாக விளங்கினர். மற்ற இருவரைப் போல அல்லாமல் ஆனந்தகுமாருக்கு நன்கு இந்தி தெரியும் என்பதால் அவர் அரசியலில் பல பதவிகளைப் பெற அது காரணமாக அமைந்தது. வட இந்திய மாநிலங்கள் பலவற்றில் நடந்த தேர்தல்களில் பாஜகவின் மத்தியப் பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

அடல் பிகாரி வாஜ்பேயி அரசில் அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆனந்தகுமார் பிரமோத் மஹாஜனுக்கு நெருக்கமானவராக மாறினார்.

மோதி இரங்கல்

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

தமது மதிப்பு மிக்க சகாவும், நண்பருமான ஆனந்தகுமாரின் மறைவினால் மிகுந்த துயரம் அடைந்திருப்பதாகவும், இளமையிலேயே அரசியலுக்கு வந்த அவர் அற்புதமான தலைவர் என்றும் தமது நல்ல பணிகளால் அவர் நினைவுகூரப்படுவார் என்றும் மோதி கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :