You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருமணத்துக்கு முன் பிறந்த பெண் குழந்தை கொலை - தாய் உள்பட மூவர் கைது
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - பெண் குழந்தை கொலை
சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில், பெற்றோர் திருமணத்துக்கு முன்பே பிறந்த பெண் குழந்தையை கொன்றதாக குழந்தையின் தாய் வசந்தி, தந்தை ஜெயராஜ் மற்றும் வசந்தியின் தாய் விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று ஆண்டுகளாக ஜெயராஜுடன் வசந்தி உறவில் இருந்து வந்துள்ளார். அவர் கருவுற்று இருப்பது ஆறு மாதங்களுக்கு முன்புதான் தெரியவந்துள்ளது.
வசந்தியின் கருவைக் கலைக்க முயன்றது முடியாமல் போனதால் விஜயா வீட்டிலேயே பிரசவம் பார்த்து, பெண் சிசுவை நீரில் மூழ்கவைத்து இருவரும் கொலை செய்துள்ளனர்.
பின்னர் இரவில் சென்று துணியை சுற்றி சிசுவின் சடலத்தை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார் விஜயா.
சடலத்தைக் கண்ட துப்புரவுத் தொழிலாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினத்தந்தி - அதிமுக ஒரு சர்க்கஸ் கூடாரம் என ஸ்டாலின் விமர்சனம்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒரு சர்க்கஸ் கூடாரம் என்றும், அதற்கான 'ரிங் மாஸ்டர்' டெல்லியில் இருக்கிறார் என்றும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் தி.மு.க.வை ஒரு கம்பெனி என்று விமர்சிக்க தொடங்கியுள்ளதாகவும. கம்பெனி என்பதுகூட ஒரு கவுரவம் தான், அதற்கென்று பங்குதாரர்கள், உரிமையாளர்கள் பணியாற்றக் கூடிய தொழிலாளர்கள், ஊழியர்கள் உண்டு.
கம்பெனியை நம்பி ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. கம்பெனி என்று சொல்லக்கூடியவருடைய நிலை என்னவென்றுகேட்டால், சர்க்கஸ் கூடாரம்.
சர்க்கஸ் கூடாரத்தினுடைய 'ரிங் மாஸ்டர்' யார் என்று கேட்டீர்கள் என்றால், டெல்லியில் இருக்கக்கூடிய மோடி மஸ்தான்.
நான் மோதியை சொல்லவில்லை, 'ரிங் மாஸ்டரை' மோடி மஸ்தான் என்று தான் சொல்லுவார்கள் எப்போதும், அந்த 'ரிங் மாஸ்டர்' இன்றைக்கு டெல்லியில் இருக்கிறார் என்று ஸ்டாலின் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கஸ் கூடாரத்திலே எடுபிடியாக இருக்கக்கூடிய பழனிசாமி என்ன வேடம் போட்டிருக்கிறார் என்று சொன்னால் கோமாளி வேடம் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளதாக தினத்தந்தி செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
தினமணி - திருமணம் செய்துவைக்கப்பட்ட சிறுமி மீட்பு
வெள்ளிக்கிழமை அதிகாலை அவசர அவசரமாக திருமணம் செய்து வைக்கப்பட்ட 16 வயது சிறுமியை மாவட்ட சைல்டுலைன் சிறார் திருமண தடுப்புக்குழுவினர் மீட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
தர்மபுரி புலிக்கரையின் அருகே அமைந்துள்ள பத்தால அள்ளி-மயிலாபாறை முருகன் கோயிலில் சிறார் திருமணங்கள் நடைபெறுவதாக 1098 என்ற எண்ணுக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
சிறார் திருமண தடுப்புக்குழுவினர் வருவதை அறிந்து தாலி, மெட்டி உள்ளிட்டவற்றை அகற்றிவிட்டு திருமணமே நடக்கவில்லை என்று பெற்றோர் தெரிவித்துவிட்டனர்.
ஆனால், திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திருமண பத்திரிகையை ஆதாரமாக வைத்து இந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட இந்த சிறுமி மாவட்ட சிறார் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டுள்தாக தினமணி செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்