அமிர்தசரஸ்: ராம்லீலா கொண்டாட்டத்தில் விபத்து - 62 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ராம்லீலா கொண்டாட்டத்தின் போது ராவண தகன நிகழ்ச்சியில், ஏற்பட்ட விபத்தில் 62 பேர் பலியாகி உள்ளதாக காவல்துறை ஆணையர் சுத்ஷூ சேகர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று சுமார் ஆறரை மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அமிர்தசரஸின் இணை ஆணையர் கமல்ஜீத் சிங் இதனை உறுதிபடுத்தியுள்ளார். ஆனால், இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை.

தோபி காட் அருகில் ராவண உருவ பொம்மையை எரித்த போது, எதிர்பாராத விதமாக அது கீழே விழந்தது. அந்த இடத்திற்கு அருகில் ரயில்வே கேட் இருந்தது. நெருப்பில் இருந்து தப்பிக்க ரயில்வே கேட் பக்கமாக மக்கள் ஓடியபோது, அங்கு ரயில் வந்ததில் அதில் அடிபட்டு பலரும் உயிரிழந்ததாக பிபிசி செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின் தெரிவிக்கிறார். ரயில் தடத்தில் பலரின் உடல்கள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமிர்தசரஸில் விபத்து நடந்த இடத்தை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க செல்வதாக பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படும். நிவாரண நடவடிக்கைகளில் போர்கால அடிப்படையில் மாவட்ட அதிகாரிகள் ஈடுபடுவார்கள் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு அரசு மருத்துவமனைகளில் இதுவரை 40 உடல்கள் பெறப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ப்ரம் மொஹிந்த்ரா உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அமிர்தசரஸ் காவல்துறை ஆணையர் எஸ் எஸ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், 60 - 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தெரிவித்தார்.

இந்த விபத்திற்கு தனது இரங்கல்களை பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: