You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சபரிமலை: 100 மீட்டருக்கு முன் தடுத்து நிறுத்தப்பட்ட ரெஹானா ஃபாத்திமா - என்ன சொல்கிறார்?
- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்ல முயன்ற தெலுங்கு தொலைக்காட்சி பத்திரிகையாளர் கவிதா, செயற்பாட்டாளர் ரெஹானா ஃபாத்திமா ஆகியோர் சன்னிதானத்துக்கு அருகே சென்று, பதற்ற நிலை காரணமாக திரும்பி வந்தனர். உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் கோயிலுக்கு செல்லலாம் என்று கூறியும் இதுவரை யாரையும் போராட்டக்காரர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
"நாங்கள் சன்னிதானத்திற்கு செல்ல 100 மீட்டர்தான் இருந்தது. நாங்கள் உள்ளே செல்லக்கூடாது என்று அங்கிருந்த குழந்தைகள் எங்கள் முன் படுத்துக் கொண்டார்கள். அங்கு பக்தர்கள் என்று கூறி கொண்டவர்கள் உணர்ச்சி நாடகங்களை நடத்தினர். அந்த குழந்தைகளுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை" என்று பிபிசி தமிழிடம் ரெஹானா ஃபாத்திமா.
இவரது புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
"எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. எங்களுக்கு தேவைப்படவில்லை. கோயிலுக்கு சென்று திரும்ப வேண்டும் என்றுதான் நினைத்தோம். ஆனால், காவல்துறை எங்களை முன்னே செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டனர்" என்கிறார் ரெஹானா.
நாங்கள் மிகுந்த காவல்துறை பாதுகாப்போடுதான் சென்றோம். ஆனால், முன்னேறி செல்வது அங்கு பிரச்சனையை உருவாக்கும் என்று அவர்கள் கூறினர். மேலும், அங்கிருந்த தந்த்ரி, நாங்கள் உள்ளே நுழைந்தால் சன்னிதானத்தை மூடிவிடுவோம் என்றார்.
உடனே அங்கிருந்த பலரும் எங்களுக்கு எதிராக போராட ஆரம்பித்தனர். மேலும், அங்கு மத கலவரம் வர வாய்ப்பிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. சன்னிதானத்திற்கு அருகே சென்றதே எனக்கு மகிழ்ச்சி.
எங்களுக்கு கோயிலுக்குள் நுழைய சட்டப்படி எல்லா உரிமைகளும் இருக்கிறது. இதுவே அங்கு செல்ல சரியான நேரம் என்று நினைத்தேன்.
கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த ரெஹானா ஃபாத்திமா, பி எஸ் என் எல் ஊழியராக பணிபுரிகிறார். மாடலிங் தனது ஆர்வம் என்று அவர் தெரிவிக்கிறார்.
அவரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறித்து கேட்டதற்கு, "நான் சமூகத்தில் பெண்களின் உரிமைக்காக நிற்கிறேன். எனது உடலை கருவியாக பயன்படுத்தி, இந்த சமூகத்தில் பெண்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன்" என்றார்.
மக்கள்தான் என்னை செயற்பாட்டாளர்கள் என்று அழைக்கிறார்கள். நான் என்னை அப்படி அழைத்துக் கொள்ளவில்லை.
என்னை இணையத்தில் கிண்டல் செய்பவர்கள் பெண்களை புரிந்து கொள்ளாதவர்கள் என்று கூறுவேன். அவர்கள் அறிவிற்கு எட்டியது அவ்வளவுதான். அதையெல்லாம் நான் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. அவர்கள் ஏன் நேரத்தை இவ்வாறு வீணடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இவர்கள் எனக்கு விளம்பரம் செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வேன் என்று அவர் தெரிவித்தார்.
ரெஹானாவுடன் சென்ற மோஜோ டிவி செய்தியாளர் கவிதாவிடம் பிபிசி தெலுங்கு செய்தியாளர் வேணுகோபால் பொள்ளம்பள்ளி பேசியபோது, அவர் நடந்த சம்பவங்களை விவரித்தார்.
முதல் நாள் செல்ல முயற்சி செய்தபோது நிலக்கலில் ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டோம். இரண்டாவது நாள் போலீஸ் பாதுகாப்புடன் பம்பையை தாண்டி சென்றோம். போகும் வழியில் விநாயகர் கோயில் இருக்கும் இடத்தில் ஒரு கும்பலை எங்களை தாக்கியதில் என் காதில் அடிப்பட்டது.
அங்கிருந்து இன்று காலை மிண்டும் புறப்பட்டு சென்றோம். சன்னிதானத்திற்கு செல்லும் ஒரு 100 மீட்டருக்கு முன் தடுத்து நிறுத்தப்பட்டோம்.
அங்கிருந்த குழந்தைகள் எங்கள் முன் படுத்துக் கொண்டனர். அவர்களை தாண்டி சென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். உடனே காவல்துறையினர், இதற்கு மேல் நாங்கள் சென்றால் பிரச்சனை வரும் என்றும் நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.
எங்களால் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக திரும்பிவிட்டோம் என்றார் செய்தியாளர் கவிதா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :