கமல் ஹாசன்: "குடிநீரைவிட 'டாஸ்மாக்' நீருக்கே அரசு முக்கியத்துவம் தருகிறது"

குடிநீரை காட்டிலும் 'டாஸ்மாக்' நீர் வழங்குவதற்கு அரசு முக்கியத்துவம் தருகிறது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் இரண்டாவது நாளாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் மக்களுடனான பயணம் நிகழ்ச்சி ஓமலூரில் இருந்து தொடங்கியது.

அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய கமல் ஹாசன், "சேலம் மாவட்டத்தில் பரவலாக பார்க்கும்போது, 15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது.

அனைத்து ஊர்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் வழக்கமாக திறக்கப்பட்டுள்ளன. எந்த தண்ணீர் மக்களுக்கு முக்கியம் என்று அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது."

"மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. அடிப்படை ஆதார வசதிகளை விட்டுவிட்டு மாடமாளிகை, கூட கோபுரங்கள் கட்டுவதில் ஆர்வமாக உள்ளனர். ஆதார வசதிகள் செய்து தரவேண்டியது அரசின் கடமை. அதை செய்ய வலியுறுத்துவோம், செய்ய இயலவில்லை என்றால் செய்யக்கூடியவர்களை வரவழைப்போம். இது தமிழகத்திற்கே உரித்தான கடமை," என்றார்.

"இளைஞர்களுக்கு எந்த பக்கம் செல்லவேண்டும் என்ற குழப்பம் உள்ளது. அந்த குழப்பம் வேண்டாம். நல்ல வழி இருக்கத்தான் செய்கிறது."

"இதைவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலைக்கு தமிழகம் தள்ளப்படவேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் தங்களின் குறைகளை மக்கள் நீதி மய்யத்தினரிடம் சொல்லுங்கள்."

"அது கண்டிப்பாக எங்களை வந்தடையும். அதனை நிறைவேற்ற மக்கள் நீதி மய்யம் காத்துக்கொண்டிருக்கிறது," என்றார்.

தன்னை முழுநேர அரசியல்வாதியா என்று சிலர் கேட்கின்றனர் என்றும் தேர்தல் நேரத்தில்தான் அவர்கள் மக்களை சந்திக்கின்றனர். ஆனால் நான் சமீப காலத்தில் மக்களை சந்திப்பதுபோல் எப்போதும் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன் என்றும் கமல் ஹாசன் பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: