துணைவேந்தர் நியமனம்: “குற்றச்சாட்டை சொல்லி பொறுப்பிலிருந்து ஆளுநர் தப்பிவிட முடியாது”

தமிழக ஆளுநர்

பட மூலாதாரம், HTTP://WWW.TNRAJBHAVAN.GOV.IN/

தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் விளையாடியுள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சென்னையில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு ஒன்றில் பேசியபோது தமிழக ஆளுநர் இந்த முறைகேடு பற்றி கூறியுள்ளார்.

இந்த நிலைமையை பார்த்து வருத்தமடைந்ததாகவும், தகுதி அடிப்படையில் இந்த நியமனம் அமைய வேண்டும் என்று எண்ணியதால் 9 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையிலேதான் தான் நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக ஆளுநர் இத்தகைய குற்றச்சாட்டை முதல் முறையாக வெளிப்படையாக முன்வைத்துள்ளார்.

ஆளுநரின் இந்த குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மறுப்புத் தெரிவித்துள்ளார். அவர் எதை மனதில் வைத்து இத்தகைய குற்றச்சாட்டை வெளியிட்டிருக்கிறார் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருந்தால் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கல்வி

பட மூலாதாரம், Getty Images

துணைவேந்தர்களின் நியமனம் பற்றி ஆளுநரின் குற்றச்சாட்டு குறித்து பிபிசி தமிழிடம் பொதுக்கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

ஆளுநர் பொறுப்பில் இருக்கின்ற ஒருவர் திடீரென இந்த குற்றச்சாட்டை வைத்திருப்பது அதிசயமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

"பல துணைவேந்தர்களை இவரே நியமித்துள்ளார். ஆதாரம் இருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த ஆதாரங்களை ஏன் பகிரங்கமாக சொல்லாமல் இருக்கிறார் என்கிற கேள்விகள் எழுகிறது," என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்.

"இந்தியக் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இருக்கக்கூடிய ஒரு மாநில மக்களின், அந்த மாநிலத்தின் தேவைக்கான பண்பாட்டின் ஒரு கூறாக கல்வி கருதப்படுகிறது. பல்கலைக்கழகம் என்பது சமூகத்தின் ஓர் அமைப்பு. எனவே, இந்த சமூகத்தில் இருந்து, இந்த பண்பாட்டில் இருந்து, இந்த மாநிலத்தில் இருந்து ஒருவர்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வர முடியும். ஆனால் இவர் நியமித்த இரண்டு மூன்று பேர் தமிழகத்தை சாராதவர்கள்."

இது மாநில கூட்டாட்சி தத்துவத்திற்கு, மாநிலத்தின் உரிமைகளுக்கு எதிரானது என்கிற குற்றச்சாட்டு எல்லாம் எழுந்துள்ளபோது, அதற்கு விடை சொல்லாமல், இன்னொரு குற்றச்சாட்டை வைத்துள்ளதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

துணைவேந்தர் நியமனம் தகுதி அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் முன்வைக்கப்படுகிறதே என்று கேள்வி எழுப்பியபோது, "தகுதி என்றால் என்ன? தகுதிக்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறீர்கள்?" என்று வினவுகிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

கட்டணமில்லா கல்வியை கொடுக்க அப்பேத்கர் 1920களில் பிரிட்டிஷ் அரசுக்கு கடிதம் எழுதினார். பம்பாய் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் கட்டணமில்லாமல் கல்வி கொடுக்காவிட்டால் மாணவர்கள் எவ்வாறு முன்னேற முடியும் என்று பேசியுள்ளார்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு பேட்டி
படக்குறிப்பு, பிரின்ஸ் கஜேந்திர பாபு

"இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 41, கல்வி உரிமையை வழங்க வேண்டும் என்று சொல்கிறது. பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்போது, கட்டணமில்லா உயர் கல்வியை கொடுப்பது எப்படி என்று துணைவேந்தர் ஒருவர் கூறினால் அவரை தரமான துணைவேந்தர் என்று ஏற்றுக்கொள்ளலாம். அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டவர், சமத்துவ சமுதாயம் படைப்பதற்கு வந்த துணைவேந்தர் என்று ஏற்றுக்கொள்ளலாம்."

இதற்கு பெயர்தான் தகுதி, திறமை. இதைத்தான் காமராஜர் செய்தார். காசு இல்லாத காலத்தில் பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் திறந்தார். அதற்கு பெயர் தகுதி திறமையா? அல்லது பல்கலைக்கழகத்தில் இருக்கிற பாடங்களை கூட, சுயநிதி பாடங்களாக மாற்றிவிடுவது தகுதி, திறமையா? என்றார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

வழக்கமாக துணைவேந்தருக்கான் தேடல் குழு பரிந்துரைக்கும் நபர்களில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பது வழக்கம். இதில் எங்கு, யாரிடம் பணம் விளையாடுகிறது என்பதை ஆளுநர்தான் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

உயர் கல்வியில் இவ்வாறு ஊழல் நடக்கிறது என்று சொல்லி உயர் கல்வியை ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லக்கூடிய உள்நோக்கத்தோடு சூழ்ச்சிகள் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் வழக்கமாக எழத்தானே செய்யும் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

கல்வி

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பிரச்சனையானது சமூகம், மக்கள் மற்றும் அவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட சிக்கல். சிக்கல்கள் நிலவினால் அதனை எதிர்கொள்ள வேண்டும். தவறை வெளிப்படுத்த வேண்டும். தவறு செய்தோரை தண்டிக்க வேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இவ்வாறு கருத்து பிரசாரம் செய்து கொண்டிருப்பது நியாயமான செயல் அல்ல என்கிறார் அவர்.

பல கோடி தமிழர்கள், லட்சக்கணக்கான அறிஞர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கல்வியாளர்கள் வாழும் தமிழகத்தில் வெளிமாநிலத்தில் இருந்து துணைவேந்தர் ஒருவரை நியமிப்பதை எப்படி பொருள் கொள்வது?

இலங்கை
இலங்கை

தமிழகத்திலுள்ளவர்கள் தகுதியற்றவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா? தமிழகத்திலுள்ள அனைத்து கல்வியாளர்களும் ஊழல்வாதிகள் என்று சொல்கிறீர்களா? என்ன கருத்தை உருவாக்க இத்தகைய நடவடிக்கை நடைபெறுகிறது? என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்.

இந்த பிரச்சனை தேர்தல், தேர்தல் அரசியல் என்பதை தாண்டி, மாநிலத்தின் உரிமை, இந்திய கூட்டாட்சி தத்துவம், கூட்டாட்சி கொடுத்துள்ள மாநில உரிமை, அந்த மாநில உரிமையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கக்கூடிய கல்வி முன்னேற்றம், சுகாதார முன்னேற்றம் பற்றியது. இந்த கல்வி முன்னேற்றம், சுகாதார முன்னேற்றம் பற்றியதை மறைப்பதற்காக இப்படி ஊழல் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறதா?

கல்வி

பட மூலாதாரம், Getty Images

மாநில உரிமையை இழக்க செய்வதற்காக, மாநிலத்திடம் கல்வி இருந்தால் ஊழல் நடைபெறுகிறது. மத்திய அரசுதான் கண்காணிக்க வேண்டும் என்ற கருத்து பிரசாரம் செய்ய இது நடக்கிறதா? என்பது எல்லாம் ஐயப்பாடுதானே! ஆதாரத்தோடு சொல்லப்பட்டிருந்தால் இந்த ஐயத்திற்கு இடமில்லாமல் போயிருக்கும் என்று பிரன்ஸ் கஜேந்திர பாபு கூறினார்.

இந்திய அரசியல் அமைப்பு எழுதியபோது இருந்த உணர்வு காக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் நோக்கங்கள் சிதைந்துபோகக் கூடாது. மாநிலத்தின் உரிமைகள் எந்த காலத்திலும் பறிக்கப்படக்கூடாது.

கல்வி சமூகத்தின் பண்பாட்டுக்கூறு என்பதை புரிந்துகொண்டு அந்த சமூகம், அந்த பண்பாடு, அந்த மொழி, அந்த மொழி சார்ந்த மக்கள் தீர்மானிக்கக்கூடிய கல்விக்கு உண்டான அனைத்து அதிகாரங்களும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று பிரன்ஸ் கஜேந்திர பாபு கூறினார்.

`ஆளுநருக்குப் பொறுப்பு உண்டு'

இது பற்றி பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்த முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, "தமிழ் நாட்டில் துணைவேந்தர்கள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை என்பது ஏறக்குறைய நிரூபிக்கப்பட்ட ஒன்று. இது பற்றி யாருக்கும் சந்தேகம் இருப்பது மாதிரி தெரியவில்லை என்று தெரிவித்தார்.

ஆனல், இதற்கு சாட்சியங்கள் அடிப்படையிலான அறிக்கைகள் வேண்டும் என்றால் அவற்றை வெளிக்கொணர்வது எளிதல்ல.

முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி

பட மூலாதாரம், RAVI

சுமார் 15 ஆண்டுகளாக இது மாதிரி நேரிடையாக தகுதியின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்குள் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன என்று வசந்திதேவி குற்றம் சாட்டுகிறார்.

இந்த ஊழல்கள் பல்கலைக்கழகங்களுக்குள் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. பல்கலைக்கழகங்களுக்குள் எல்லா நியமனமும் பணத்தால் முடிவு செய்யப்படும்போது அந்த பல்கலைக்கழகத்தின் கலாசாரமும், சூழ்நிலையும், அடிப்படை சித்தாந்தமும் உடைக்கப்பட்டுவிடுகிறது என்கிறார் அவர்.

பல பல்கலைக்கழங்கள் இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு போயுள்ளன. துணை வேந்தர்கள் பற்றியே குற்றச்சாட்டுக்கள் வந்து பதவி நீக்கப்படும் அளவுக்கு போயுள்ளது. தமிழ் நாட்டின் மிகப்பெரிய தலைகுனிவாக இது நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது என்று வசந்தி தேவி கூறினார்.

இறுதியில் முடிவு செய்கிற அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதால், இந்த விடயத்தில் தனக்கு பொறுப்பில்லை என்று அவர் கூறிவிட முடியாது என்கிறார் வசந்தி தேவி.

ஆளுநர் மாளிகை மீதே பல குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கும் இதில் பங்கு இருப்பதாக சொல்லப்பட்டது.

தூய்மையான நிர்வாகத்தை கொண்டுவர நினைத்தால், ஆளுநரால் முடியும். கீழ்மட்டத்தில் எவ்வளவு ஊழல்கள் இருந்தாலும் இறுதியாக நியமனத்தை முடிவு செய்யக்கூடிய அதிகாரமாக அவர் இருப்பதால் இதனை பெருமளவு தடுத்து நிறுத்த முடியும் என்று நினைப்பதாக வசந்தி தேவி கருத்துத் தெரிவித்துள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: