ஆதார் தீர்ப்பு: இதுவரை சேகரித்த தகவல்களை அழித்து விடுவார்களா?

ஆதார் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கோருவது சட்டத்துக்கு புறம்பானது என்னும் இந்த தீர்ப்பு சில கேள்விகளை எழுப்புவதாக கூறுகிறார் வழக்கறிஞர் வே. பாலு.

தொழில்நுட்பம் தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் பாலு, இந்த தீர்ப்பு ஆதார் தொடர்பான முந்தைய தீர்ப்புகளுக்கு முரணாக இருக்கிறது என்கிறார்.

அவர், "அரசமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையில்தான் அந்தரங்க உரிமை வரும் என்கிறது ஆதார் குறித்து 9 நீதிபதிகள் அமர்வு வழங்கிய பழைய தீர்ப்பு. இந்தத் தீர்ப்பானது அந்த முந்தைய தீர்ப்புக்கு முரணாக உள்ளது." என்கிறார் அவர்.

தகவல்களை அழித்து விடுவார்களா?

ஆதார் சட்டம் செல்லும். ஆனால் எந்த தனியார் நிறுவனமும் தனிநபர்களிடமிருந்து அவர்களின் ஆதார் விவரங்களை கோர முடியாது என்கிறது தீர்ப்பு. இதுதான் முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக , பெரும்பாலான கைபேசி நிறுவனங்கள், வங்கிகள், பல தனியார் நிறுவனங்கள் சேவை வழங்குவதற்காக தனிநபர்களிடமிருந்து தகவல்களை சேகரித்துவிட்டன. ஒரு தனியார் தொலைபேசி நிறுவனம் ஆதார் எண் அளித்தால்தான் சிம்கார்ட் என்று கூறி 3 மாதங்களில் 10 கோடி ஆதார் எண்களை பெற்றுவிட்டன.

இப்போது அவர்களிடமிருக்கும் தகவல்களை எப்படி அழிப்பது அல்லது திரும்ப பெறுவது என்பது குறித்த எந்த தெளிவான வழிக்காட்டுதல்களும் இந்த தீர்ப்பில் இல்லை.

தனியார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள தனிநபர் ஆதார் தகவல்களை அழிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டாலும், அவற்றை அவர்கள் ரகசியமாக சேர்த்து வைக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் வே பாலு.

''பான் அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள் ஆனால் வங்கி எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தேவையில்லை. இது முரணாக இருக்கிறது''

தரவு திருட்டு

''எங்களிடமிருந்து டேட்டா திருடப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறிய ஒரு மொபைல் சேவை நிறுவனம், பின்னர் தகலவல் திருடப்பட்டதாக கூறி நவி மும்பையில் வழக்கு பதிந்தது. ஆனால் இதனை 'Data Theft` இல்லை 'Unauthorised access' என்று வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த இரண்டு வாத்தைகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக நான் கருதவில்லை'' என்கிறார் பாலு.

"அதாவது, தொழில் நுட்பம் அனைவருக்கும் சென்றுவிட்ட காலக்கட்டத்தில் தரவுகளை திருடுவது என்பது மிகவும் சுலபம். உலகத்தை அச்சுறுத்தியப் ஒரு டிஜிட்டல் வைரஸை பரப்பியது பிலிப்பைன்ஸை சேர்ந்த 17 வயது இளைஞன்தான். நாசா விஞ்ஞானிதான் இணையத்தை ஊடுருவி தகவல்களை எடுக்க முடியும் என்பதில்லை, நன்கு தொழில்நுட்பம் தெரிந்த சாமானியனே அதனை செய்துவிட முடியும் எனும் போது ஆதார் தேவையா எனும் கேள்வி இயல்பாக எழுகிறது. ஏற்கெனவே மேகக் கணிமையில் (cloud computing) சேமிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் பெற்ற தகவல்கள் திருடப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :