சினிமா விமர்சனம்: சீமராஜா

கார்திகேயன் மற்றும் சமந்தா

பட மூலாதாரம், seema raja

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் - சூரி - பொன்ராம் கூட்டணி இணைந்திருக்கும் மூன்றாவது படம்.

தென் தமிழ்நாட்டில் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீனின் இளைய வாரிசு சீமராஜா (சிவகார்த்திகேயன்). இந்த ஜமீன் குடும்பத்திற்கு எதிராக அந்த ஊரில் செயல்பட்டுவருகிறான் காத்தாடி கண்ணன் (லால்).

இருவருக்கும் இடையில் அவ்வப்போது மோதல் நடந்துவருகிறது. இதற்கிடையில் ஜமீன் பிரித்துக்கொடுத்த நிலங்களை, கண்ணனின் தூண்டுதலால் அங்கிருக்கும் விவசாயிகள் மொத்தமாக ஒரு வட இந்திய நிறுவனத்திற்கு விற்க முயல்கிறார்கள்.

சீமராஜா

பட மூலாதாரம், seema raja

இதை எதிர்க்கும் சீமராஜாவின் தந்தை (நெப்போலியன்) அவமானத்தில் இறக்கிறார். இதற்கு நடுவில் சீமராஜா காதலிக்கும் சுதந்திரச்செல்வி (சமந்தா) காத்தாடி கண்ணனின் பெண் என்றும் தெரியவருகிறது.

சீமராஜா தந்தையின் மரணத்திற்கு காரணமான அவமானத்தை நீக்கினாரா, காதலியை திருமணம் செய்தாரா என்பது மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் பல முறை பார்த்துப் பழகிப்போன ஒரு வழக்கமான பாணியில், வழக்கமான கதையைக் கொடுத்திருக்கிறது சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி.

சீமராஜா

பட மூலாதாரம், seema raja

கதாநாயகன் குடும்பம் ஊரிலேயே பெரிய குடும்பமாக இருக்க, வில்லன் அந்தக் குடும்பத்தை அவமானப் படுத்தும் கதை எத்தனை படங்களில் வந்துவிட்டது?

கடைசியில் பார்த்தால் நாயகன் காதலிக்கும் பெண் வில்லன் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பது இன்னும் பழைய பாணி.

கதாநாயகியை சீண்டிச் சீண்டி காதலிக்க வைப்பது, கதாநாயகனுக்குத் துணையாக ஒரு காமெடியன் இருப்பது என எல்லாவற்றிலும் ஒரு பழைய வாடை. ஏன், பாடல்கள்கூட ஏற்கனவே பல படங்களில் கேட்டதுபோலவே இருக்கிறது.

சீமராஜா

பட மூலாதாரம், seema raja

இதையெல்லாம் மீறி, ஒரு ஜாலியான படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் பொன்ராம். அதற்கு சிவகார்த்திகேயன் - சூரி ஜோடி கைகொடுக்கிறது.

கதாநாயகன் என்ன வேண்டுமானாலும் செய்வார், எத்தனை பேரை வேண்டுமானலும் அடிப்பார், எந்தப் போட்டியிலும் ஜெயிப்பார் என்று மனதைத் தேற்றிக்கொண்டால், அவ்வப்போது சூரியின் நகைச்சுவையோடு படம் ஜாலியாகவே நகர்கிறது.

சீமராஜா

பட மூலாதாரம், seema raja

இப்படியாக படம் போய்க்கொண்டிருக்கையில் திடீரென சென்டிமென்டாக, 14ஆம் நூற்றாண்டிற்குப் போய், மாலிக்காஃபூர், அலாவுதீன் கில்ஜி, வில்முனை வியூகம் என திகைப்பூட்டுகிறார்கள்.

தனியாக பார்க்கும்போது இந்தப் பகுதி நன்றாக இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஜாலி திரைப்படத்திற்குள் இந்தப் பகுதி ஒட்டவில்லை.

இலங்கை
இலங்கை

அதேபோல விவசாயம், நிலம் பற்றிய உபதேசங்கள், பஞ்ச் வசனங்கள் படத்திற்குப் பொருந்தவில்லை.

சிவகார்த்திகேயன், சூரி, சமந்தா, சில காட்சிகளில் வரும் கீர்த்தி சுரேஷ், லால் (இதே மாதிரியான வில்லன் பாத்திரத்தில் லால் இன்னும் எத்தனை படம் நடிப்பாரோ?) என எல்லோருக்குமே ஊதித்தள்ளக்கூடிய வேடம்தான்.

சீமராஜா

பட மூலாதாரம், seema raja

படத்தில் வில்லியாக மீள்வரவு அளித்திருக்கும் சிம்ரன், நன்றாகத்தான் நடிக்கிறார். ஆனால், அவருக்கு டப்பிங்கில் கொடுக்கப்பட்டிருக்கும் குரலும் பேச்சு வழக்கும் சுத்தமாகப் பொருந்தவில்லை.

இலங்கை
இலங்கை

எல்லாப் பாடல்களுமே கேட்கும்படியாக இருக்கின்றன. "வாரேன்.. வாரேன்.. சீமராஜா", "மச்சக்கன்னி" பாடல்கள் அட்டகாசம். ஆனால், முன்பே சொன்னதைப் போல பாடல்கள் எல்லாமே முன்பே கேட்டதுபோலவே இருக்கின்றன.

சீமராஜா

பட மூலாதாரம், seema raja

இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம், படமாக்கம்தான். வழக்கமான கூட்டணி, வழக்கமான கதை என்பதால் வழக்கம்போல எடுக்காமல், மேக்கிங்கில் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார் பொன்ராம்.

சிவகார்த்திகேயன் படத்திற்குப் போனால், கவலையின்றி சிரித்துவிட்டு வரலாம் என்று நினைக்கும் ரசிகர்களை ஏமாற்றாத படம்.

சினிமா விமர்சனம்: 'இமைக்கா நொடிகள்'

காணொளிக் குறிப்பு, சினிமா விமர்சனம்: ‘இமைக்கா நொடிகள்’ (காணொளி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :