ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி; பொருளாதாரத்தில் வளர்ச்சி - வியப்பில் நிபுணர்கள்

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் என்ற அளவில் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சி, எதிர்பார்ப்பை விட அதிகமாயிருப்பது பொருளாதார நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன் 2018) 8.2% வளர்ச்சியடைந்துள்ளது.

பொருளாதார ஆய்வாளர்களின் கணிப்புகளை தோற்கடிக்கும் வகையில், இதற்கு முந்தைய காலாண்டில் 7.7% என்ற அளவில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2% என்ற அளவிற்கு அதிகரித்திருக்கிறது.

உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, 2.6 டிரில்லியன் டாலர் அளவிலான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5.6 சதவிகித வளர்ச்சி கண்டிருந்தது.

கடந்த நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஏப்ரல் மாதம் தொடங்கிய நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, புதன்கிழமையன்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உலக வர்த்தகத்தில் பதற்றங்கள் நிலவும் அபாயங்களுக்கு இடையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது.

வளர்ச்சி நிலையானதா?

"உற்பத்தி, கட்டுமானம் மற்றும் விவசாயம் போன்ற துறைகள் எதிர்பார்ப்பைவிட அதிகமான வளர்ச்சியை அளித்துள்ளன." என்கிறார் கேர் ரேட்டிங்க்ஸ் (CARE RATINGS) மதிப்பீட்டு நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் மதன் சப்னவிஸ்.

ஆனால், இந்தியாவின் வளர்ச்சி நிலையானதா என்பதைப் பற்றி சந்தேகம் எழுப்பும் அவர், "வருவாய் வளர்ச்சி அதிகரிக்கவில்லை என்றால், அது நிதி பற்றாக்குறையின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கலாம்" என்று கணிக்கிறார்.

"இதைத்தவிர, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிதிச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க அளவு முதலீடு செய்யப்படவில்லை. அதுமட்டுமல்ல, அதிக வட்டி விகிதங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு என பல்வேறு சவால்களையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது அடுத்த சில காலாண்டுகளில் மிதமான வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்" என்று கருதுகிறார் மதன் சப்னவிஸ்.

பணவீக்கத்தைக் குறைப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி அதன் கடந்த இரண்டு கூட்டங்களிலும் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி 6.5 சதவீதம் என்ற அளவிற்கு கொண்டு வந்தது. பணவீக்கத்தை 4 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் இலக்கை மீறி கடந்த ஒன்பது மாதங்களாக பணவீக்கம் அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.17 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் இது 4.8 சதவீதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு 10 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்து, இதுவரை இல்லாத அளவில் ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று 70.8250 டாலர் என அதல பாதளத்தில் வீழ்ந்தது. ஆசிய அளவில் மிகவும் மோசமான வீழ்ச்சியை இந்திய நாணயம் கண்டுள்ளது.

அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை, அரசின் கடன் மீதான வட்டி விகிதங்கள் போன்றவை, இந்தியாவின் தற்போதைய நடப்பு நிலைமையின் மீது சுமையை ஏற்படுத்தும் என கடன் மதிப்பீடு நிறுவனமான மூடிஸ் இந்த வாரத் தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :