முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கச் சொன்னதா உச்ச நீதிமன்றம்?
ஆகஸ்ட் 31 வரை முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139.9 அடியாக பராமரிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட மூலாதாரம், FACEBOOK
ஆனால், அணையின் நீர்மட்டம் ஏற்கெனவே 139.87 அடியாக இருப்பதாலும், மழை குறைந்து அணைக்கு நீர் வரத்து குறைந்துவிட்டதாலும், மதகுகளைத் திறந்து கேரள மாநிலத்தின் பக்கம் தண்ணீரைத் திறந்துவிடவேண்டிய அவசியம் இருக்காது என்கிறார்கள் தமிழக அதிகாரிகள்.
முல்லை பெரியாறு அணை கேரள மாநிலத்துக்குள் அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தின் பராமரிப்பில் உள்ளது. அணையில் தேக்கப்படும் நீர் சுரங்கத்தின் வழியாகவும், இறைச்சல் பாலத்தின் வழியாகவும் தமிழகத்தின் வைகை அணைக்கட்டுக்கு திருப்பிவிடப்பட்டு அங்கிருந்தே பாசனத்துக்கு அனுப்பப்படும். இந்த இரண்டு வழியிலும் விநாடிக்கு அதிகபட்சம் 2200 கனஅடி தண்ணீரை மட்டுமே வைகை அணைக்குத் திருப்பிவிட முடியும்.
இந்நிலையில் கேரள வெள்ளத்தின்போது முல்லை பெரியாறு அணையில் இருந்து திடீரென நீரைத் திறந்துவிட வேண்டிய நிலை ஏற்படக்கூடாது எனவே, அணையின் நீர்மட்டத்தை, உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியைவிட குறைவாக 139 அடியில் பராமரிக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினார் கேரள முதல்வர் பினராயி விஜயன். தமிழகம் இதை ஏற்கவில்லை.
பெரிய அளவு வெள்ளச்சூழ்நிலை இருக்கும்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலேயே பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்திருந்தது கேரள அரசு.
தமிழகம் பதில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் பேரிடர் மேலாண்மை துணைக் குழு கூடி ஆய்வு செய்து ஆகஸ்டு 31ம் தேதி வரை அணையின் நீர்மட்டத்தை அனுமதிக்கப்பட்ட அளவான 142 அடியை விட ஓரிரண்டு அடி குறைவாகவே பராமரிக்கவேண்டும் என்று முடிவு செய்தது.
அணையின் நீர்மட்டம் (நீதிமன்றம் விசாரிக்கும்போது) 139.99 அடியாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதே அளவை ஆகஸ்டு 31 வரை பராமரிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவு, தமிழ்நாடு-கேரளா இடையே உள்ள எந்த தகராறையும் இந்த உத்தரவு பாதிக்காது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

பட மூலாதாரம், Atul Loke
ஆனால், ஆகஸ்ட் 15 அன்று கேரள முதல்வர் கடிதம் எழுதியபோது 142 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், படிப்படியாக நீரை வைகை அணைக்குத் திருப்பிவிட்டதன் மூலம் 140 அடிக்கும் கீழே வந்துவிட்டது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் அணையின் நீர்மட்டம் 139.87 அடி இருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால், மதகுகள் வழியாக கேரளாவின் பக்கத்தில் நீரை ஆற்றில் திறந்துவிட்டு அணை மட்டத்தை குறைக்கவேண்டிய அவசியம் ஏற்படாது என்றார் அவர்.
அத்துடன் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை பிற்பகல் அளவில் ஒரு கட்டத்தில் விநாடிக்கு 1,700 கன அடி என்ற அளவுக்கு குறைந்துவிட்டது என்றும் எனவே அணைமட்டம் படிப்படியாக குறைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












