You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போதை மருந்தால் அதிகரிக்கும் மரணங்கள்; என்ன நடக்கிறது பஞ்சாப்பில்?
- எழுதியவர், அரவிந்த் சஹாப்ரா
- பதவி, சண்டிகர்
"அவனது புகைப்படத்தை பார்த்து இரவு முழுவதும் அழுதுக்கொண்டிருக்கிறேன்" என்கிறார் மூன்று வாரங்களுக்கு முன்னர் தனது 24 வயது மகனான ரிக்கி லோஹாரியாவை இழந்து தவிக்கும் லட்சுமி தேவி.
தனது மகன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது போதை பழக்கத்துக்கு அடிமையாகி பள்ளியிலிருந்து இடைநின்றதாக கூறுகிறார் பஞ்சாப்பின் ஜலந்தர் நகரில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கும் 55 வயதாகும் லட்சுமி.
சமையல் பணிசெய்யும் லட்சுமியின் கணவர் தினக்கூலியாக உள்ளார். "எங்களது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. ஆனாலும், எங்களது மகன் கண்ணில் பட்டதையெல்லாம் விற்று போதை மருந்துகளை வாங்கினான். அவனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. தனது திருமணத்திற்கு கிடைத்த பரிசுகளனைத்தையும் விற்று அதற்கும் போதை மருந்தை வாங்கினான்."
அவன் தனது நண்பர்களுடன் சென்று, திரவ மற்றும் ஊசி மூலம் செலுத்தப்படும் போதை மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தான். "அவன் ஹெராயின் மற்றும் அதுபோன்ற போதை மருந்துகளை பயன்படுத்த தொடங்கினான். ஒருகட்டத்தில் போதை மருந்துகளை உட்கொள்வதே அவன் முழு வேலையானது. ஆனால், அவன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு போதை மருந்து பழக்கத்திலிருந்து விடுபட விரும்பியதால்தான் நான் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். ஆனால், அவன் உயிர் பிழைக்கவில்லை" என்று கண்களில் நீர்வழிய கூறுகிறார் லட்சுமி.
"சர்வ சாதாரணமாக கிடைத்த போதை மருந்துகள் அவனை ஈர்த்ததோடு, உயிரையும் வாங்கிவிட்டது. அருகிலுள்ள தெருக்களிலேயே அவனால் போதை மருந்தை பெற முடிந்தது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்தாண்டின், ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் போதை மருந்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பஞ்சாபில் இருமடங்கு உயர்ந்து 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
"ஜூன் வரையிலான இந்த வருடத்தில், பஞ்சாப் மாநிலத்தில் கிட்டத்தட்ட 60 பேர் போதை மருந்து பழக்கத்தால் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இரண்டு வருடமாக ஒவ்வொரு வருடமும் 30-40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்" என்கிறார் மூத்த பஞ்சாப் காவல்துறை அதிகாரி ஒருவர்.
பஞ்சாப் காவல்துறையின் சிறப்பு பணிக்குழு போதை மருந்து குறித்து வெளியிட்டுள்ள தரவின்படி, கடந்த 2017ஆம் ஆண்டு அதிகளவு போதை மருந்து உட்கொண்டதால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அமிர்தசரஸ், குர்தாஸ்புர், டர்ன் தரன் ஆகிய நாட்டின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் 14 பேரும், ஜலந்தர், பத்திண்டா பகுதிகளில் முறையே 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 16 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த மரணங்கள் குறித்து தனித்தனியாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு வருவதாவும், அதே சூழ்நிலையில் கள்ளத்தனமாக ஹெராயின் போதை மருந்தை கடத்துவதை காவல்துறையினர் கடுமையாக்கியுள்ளதாகவும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் கூறுகிறார். ஹெராயின் போதை மருந்து கிடைப்பது குறைந்துள்ளதால், அதனுடன் தரம் குறைந்த மூலப்பொருட்களை கலப்பதால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பஞ்சாபில் நிலவும் போதை மருந்து சார்ந்த பிரச்சனைகளை மையமாக வைத்து பல பாலிவுட் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், கடந்த சில வருடங்களான இந்த விவகாரம் பஞ்சாப் மாநில அரசியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
போதை மருந்தும், பஞ்சாப்பும்
பஞ்சாபிகள் மது விரும்பிகள் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. அதேபோன்று அம்மாநிலத்திலுள்ள விவசாயிகள் வயல்வெளியில் பணிசெய்துகொண்டு இருக்கும்போது கையளவு 'புக்கி' என்னும் அபினியை உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களாக பஞ்சாபிகள் அடுத்தகட்டத்துக்கு சென்றுள்ளனர். பஞ்சாபிகளின் போதை மருந்து நுகர்வு ஆபத்துக்குரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு எய்ம்ஸ் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, பஞ்சாப் மாநிலத்தில் 2.32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அபினியை உண்பது தெரியவந்துள்ளது.
பஞ்சாபில் போதை மருந்தின் பரவலை கண்டறிய மேற்கொள்ளபட்ட முதல் ஆய்வான இதன் மூலம், பஞ்சாபின் வருடாந்திர போதைப்பொருள் வணிகத்தின் சந்தை 7,500 கோடி என்பது தெரியவந்தது.
பஞ்சாபின் போதைப்பொருள் நுகர்வு குறித்து மேலதிக தகவலை பெறுவதற்காக அம்மாநில காவல்துறை அதிகாரிகள், எல்லை பாதுகாப்பு படை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் பிபிசி பேசியது.
பஞ்சாபிகள் பாப்பி ஹஸ்க், ஓபியம், ஹெராயின் மற்றும் மருத்துவத்திற்காக பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளையும் போதை மருந்தாக பயன்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வெள்ளை நிறத்தில் இருக்கும் ஹெராயின் போதை மருந்துதான் கடந்த சில வருடங்களாக மாநிலம் முழுவதும் பரவலாக பயன்படுத்துகிறது.
எப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வகை போதை மருந்தின் மீது கெடுபிடி அதிகமாகிறதோ, அப்போது போதை மருந்துக்கு அடிமையானவர்கள் மற்றொரு வகை போதை மருந்துக்கு செல்வதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மற்ற போதை மருந்துக்களை காட்டிலும் ஹெராயின் விலை அதிகமானது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஒரு கிராம் ஹெராயின் சுமார் 4000-6000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், போதை மருந்துக்கு அடிமையான ஒருவர் சராசரியாக ஒருநாளைக்கு 0.5 - 2 கிராம் ஹெராயினை உட்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
போதை மருந்துகளை தேர்வு செய்யும் விதம் கிராமப்புறத்திலும் நகர்ப்புறத்திலும் வேறுபடும் என்று காவல்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
"உதாரணமாக, லூதியானாவில் பெரும்பாலும் மருத்துவம் சார்ந்த போதை மருந்துகள் பற்றிதான் புகார்கள் வருமே தவிர கிராமப்புற பகுதிகளில் அதிகளவில் கிடைக்கும் ஹெராயின் பற்றியோ சிட்டாவை பற்றியோ புகார்கள் வருவதில்லை. கடந்த சில மாதங்களாக எங்கள் பகுதியில் இந்த போதை மருந்துகளின் விநியோகம் கட்டுப்பாட்டில் உள்ளன"என்று முன்னர் சண்டிகர் காவல்துறைக்கு தலைமை வகித்த லூதியானா காவல்துறை ஆணையர் சுக்செயின் சிங் கூறுகிறார்.
சமீப காலங்களில் அதிகளவில் பிடிபட்ட வழக்குகள் போதை மருந்துகளை பயன்படுத்தும் முறை மற்றும் அதை வழங்கும் கும்பல்களைக் குறிக்கின்றன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு மே மாதம், லூதியானா காவல்துறையினர் ஐந்து கிலோ எடையுள்ள ஹெராயினை கைப்பற்றிய பின்னர் அதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர்.
கிராம நிர்வாகி ஒருவரின் மகனான கர்மெயில் சிம் என்பவரும் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும் ''பாகிஸ்தான் சிம் கார்டுகள் உதவியுடன் எல்லை தாண்டியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் பேசுவதற்கு பயன்படுத்தினர்'' என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த சரக்கு இரயில் ஒன்றில் ஏற்றிவரப்பட்ட தள்ளுவண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.75 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை அமிர்தசரஸ் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.
போதை பொருட்கள் அற்ற மாநிலமாக பஞ்சாப்பை மாற்றப்போவதாக அம்ரிந்தர் சிங் மக்களுக்கு அளித்த வாக்குறுதியே அவர் பதவிக்கு வர முக்கிய காரணமாக அமைந்தது. போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க முயன்றாலும் அது பாதியளவுதான் பயனளிக்கும்.
"திட்டங்களை நடைமுறைப்படுத்த நாங்கள் கடுமையாக முயன்றுவருகிறோம். ஆனால், விழிப்புணர்வு மாற்றும் தற்காப்பு மையங்களை மூலம் போதை மருந்துகளை பயன்படுத்துவதை மக்கள் நிறுத்தும்வரை இது மிகவும் கடினம்தான்" என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
பிற செய்திகள்:
- “இன்று நிலவும் அச்ச உணர்வு, நெருக்கடி கால கட்டத்தில் கூட இருந்ததில்லை”: ரொமிலா
- பணமதிப்பு நீக்கம்: சாமானிய மனிதன் பெற்ற பலன் என்ன?
- கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் மவோயிஸ்ட் தொடர்புடையவர்களா?
- பதவி விலகும் அமெரிக்க வெள்ளை மாளிகை வழக்கறிஞர் - ஏன், எதனால்?
- அமெரிக்காவில் பிறந்து இந்திய தொழிலாளர்களுக்காக போராடும் சுதா பரத்வாஜ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்