இந்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் - வாட்ஸ் ஆப் செயல் அதிகாரி சந்திப்பு ஏன்?

வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்தியாவில் பணம் சம்பாதிக்கும் முயற்சியாக பணம் செலுத்தும் சேவை ஒன்றை 'வாட்ஸ்ஆப் பே' என்ற பெயரில் அறிமுகப்படுத்த முயற்சி செய்துவருகிறது. ஆனால் இந்திய அரசு வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு எதிராக தனது நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கியுள்ளது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

பட மூலாதாரம், Hindustan Times

இந்தியாவில் கும்பல் வன்முறைக்கு காரணமாக இருக்கும் போலிச் செய்திகள் அதிகம் பரவுவதில் வாட்ஸ்ஆப் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில் இந்த தவறான செய்திகளை கண்டுபிடிக்க கவனம் செலுத்துமாறு இந்திய அரசு கூறிவருவதால் இந்தியாவில் 'வாட்ஸ்அப் பே' அறிமுகப்படுத்தும் திட்டம் தாமதமாகி வருகிறது.

இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பிபிசியிடம் பேசுகையில் '' போலிச் செய்திகளை பரிசோதிக்கும் பொறுப்பு வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு உள்ளது. இது போன்ற தவறான செய்திகளை நிறுத்துவதற்கு தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுடன் இங்கே வரவேண்டும்.

இந்தியாவில் தனது பணம் செலுத்தும் சேவையை கொண்டுவருவதற்கு முன்னதாக முதலில் வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது வணிக அலுவலகத்தை இந்தியாவில் அமைக்க வேண்டும். அப்போதுதான் இந்திய சட்டங்களுக்கு கீழ் அந்நிறுவனம் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும்'' என்றார்.

போலிச் செய்திகள் பரப்பப்படுவதைக் கண்டறிய வாட்ஸ் ஆப்பில் மறையாக்கம் (ENCRIPTION) செய்யப்பட்டு இன்னொரு பயனருக்கு அனுப்பப்படும் செய்திகளைப் படிக்க இந்திய அரசு அனுமதி கோருகிறது.

இது தொடர்பாக டெல்லியில் இன்று வாட்ஸ் ஆப் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸை இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சந்தித்தவுடன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் வாட்ஸ் ஆப் தலைமை அதிகாரி இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.

இந்திய அரசு ஏற்கனவே வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு இரண்டு நோட்டீஸ் விட்டிருக்கிறது. டேனியல்ஸ் இச்சந்திப்பு குறித்து எந்தவொரு தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: