திமுகவுக்குள் மீண்டும் அழகிரி?

முக்கிய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகள் குறித்த ஒரு தொகுப்பை நேயர்களுக்கு வழங்குகிறோம்.

திமுகவுக்குள் மீண்டும் அழகிரி?

சென்னையில் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறவுள்ள திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் அழகிரிக்கான பதவி உள்பட பிற முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது போல திமுகவில் எவ்வித பிளவும் ஏற்படக்கூடாது என்பதில் கருணாநிதி குடும்பத்தினர் மிகவும் கவனத்துடன் உள்ளனர். இதனால் திமுகவில் மீண்டும் அழகிரி சேர்க்கப்படவுள்ளார். அதற்கு ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அழகிரிக்கு தென் மண்டல செயலாளர் பதவியை தர ஸ்டாலின் முன் வருகிறார்.ஆனால் அழகிரி ஏற்க மறுக்கிறார். கனிமொழி கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை எதிர்பார்க்கிறார். திமுகவின் பொருளாளர் பதவியை கைப்பற்ற பலர் போட்டியில் இருக்கின்றனர். மேலும் திமுகவில் புதிதாக 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதற்கு மேற்பார்வையாளராக அழகிரியை நியமிக்குமாறு அழகிரி தரப்பு கேட்டு வருகிறது என செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ் (சென்னை பதிப்பு).

போராட்டத்தின் போது பொது சொத்தை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்

போராட்டங்களின் போது பொது மற்றும் தனியார் சொத்து சேதப்படுத்தப்பட்டால் அதற்கு போராட்டத்தை நடத்தியவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2009-ல் வழங்கிய ஒரு தீர்ப்பில் கூறியது.

இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரிய மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் வந்தது.

போராட்டங்களின்போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்க சட்ட திருத்தம் செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு நீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும் என்றது மத்திய அரசு.

சட்டத்திருத்தம் நிறைவேற்றும் வரை பொறுத்திருக்க முடியாது. அரசு பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் எனக்கூறி மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம் என்கிறது தினமலர் செய்தி

கருணாநிதிக்கு பாரதரத்னா - மாநிலங்களவையில் கோரிக்கை

தினகரன்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மாநிலங்களவையில் திமுக கோரிக்கை வைத்துள்ளது. நேற்று திமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் இது தொடர்பாக வலியுறுத்தினர்.

''திமுக தலைவர் தனது 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் ஏழைகள், அடித்தட்டு மக்கள், பின்தங்கியவர்கள் நலனுக்காக போராடியவர். கருணாநிதி மிகச்சிறந்த பேச்சளார், திறமைமிக்க எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். வாழ்வின் அனைத்து தடங்களிலும் முத்திரை பதித்த ஈடு இணை இல்லாதவர். சமூக நீதிக்காகவும்,மதச்சார்பின்மைக்காகவும் சுய மரியாதைக்காகவும் போராடியவர். அவருக்கு பாரத ரத்னா வழங்குவதே அவரின் சேவைக்கு உண்மையான மரியாதை.'' என எம்.பி சிவா பேசினார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு எம்பிக்களும் ஆமோதித்து வரவேற்றுள்ளர்.

கேரளாவில் 50 ஆண்டுகளாக இல்லாத பெரு மழை

கேரளாவில் கடந்த அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு பெரு மழை பெய்திருக்கிறது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக ஓய்ந்திருந்த தென் மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை வெள்ளம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்து அணைகளிலும் நீர் நிரம்பியுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 439 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலைப்பிரதேசங்களுக்கு தற்போது சுற்றுலா செல்வதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என கேரள சுற்றுலா துறை தெரிவித்துள்ளது என தினத்தந்தியின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :