'என்னை பழி வாங்குகிறார்கள்' - தலித் பெண் பாப்பாள்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தலித் பெண் சத்துணவு சமைக்கக்கூடாது என்று பலர் முற்றுகையிட்ட விவகாரத்தில், சமையலாளர் பாப்பாள் மீது பள்ளியின் தலைமையாசிரியர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

தன்னை பழிவாங்கவே இவ்வாறு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சமையலர் பாப்பாளும் தனது தரப்பிலிருந்து புகார் அளித்துள்ளார்.
கடந்த 7ம் தேதி மதியம் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம் பாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி குழந்தைகள் சத்துணவு சாப்பிட்ட பின் வாந்தி எடுத்துள்ளனர்.
உடனடியாக சத்துணவு சாப்பாட்டை ஆய்வு செய்த தலைமை ஆசிரியர், சாப்பாட்டில் பல்லி கிடந்ததாக மாணவர்கள் தெரிவித்ததை அடுத்து சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவியரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 25 மாணவ, மாணவியர், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினர்.
75 மாணவ, மாணவியர் படிக்கின்ற இந்த பள்ளியில் கடந்த மாதம் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சமையலாளர் பாப்பாள் சமைக்கக்கூடாது என அந்த ஊரை சேர்ந்த ஒரு குறிப்பிட பிரிவினர் கடந்த ஜீலை மாதம் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பல்வேறு அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் காரணமாக பாப்பாள் மீண்டும் அதே பள்ளியில் பணியாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, சாதிய வன்கொடுமையில் ஈடுபட்டதாக 88 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்துணவில் பல்லி கிடந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் தெரிவித்த பள்ளியின் தலைமையாசிரியர் சசிகலா, உணவு வழங்கும் பொறுப்பு முழுவதும் சத்துணவு வழங்கும் அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே பார்த்துக்கொள்கிறார்கள்.
சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் தெரிவித்த பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா," கடந்த 7 ஆம் தேதி 25 மாணவியர் சத்துணவு சாப்பிட்டுள்ளார். ஒரு சில மாணவிகள் தாங்கள் சாப்பிட்ட உணவில் பல்லி இருப்பதாக தட்டுடன் என்னிடம் கொண்டுவந்து காட்டினர்."


"அதற்குள் நான்கு மாணவர்கள் வாந்தி எடுத்ததாக தெரிவிக்கவே, சத்துணவு சாப்பிட்ட 25 மாணவர்களையும் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்," என்று கூறினார்.
"தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலருக்கும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பள்ளியில் நடந்தது குறித்து தெரிவித்தேன். பள்ளியில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் காவலர்களும் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்."
"அதனைத் தொடர்ந்து சேவூர் சென்று பாப்பாள் மற்றும் சமையல் உதவியாளர் மீதும் புகார் கொடுத்தேன். தற்போது என் மீது பாப்பாள் புகார் கொடுத்திருப்பதாக கேள்விப்பட்டேன்," என்று அவர் தெரிவித்தார்.
"1995ம் ஆண்டு தொடங்கி 23 ஆண்டுகளாக ஆசிரியை பணியில் உள்ளேன். 5 வருடங்களாக தலைமையாசிரியை பணியையும் செய்து வருகிறேன். இதுபோன்ற பிரச்சனையை நான் கடந்த காலங்களில் சந்தித்தது இல்லை."

மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பள்ளிக்கு வந்து, எந்த அனுமதியுமின்றி நேரடியாக வகுப்பறைக்குள் சென்று ஆசிரியர்களை திட்டுகின்றனர்.
மாணவர்களை அழைத்து செல்கின்றனர். மிகவும் மன உளைச்சலாக உள்ளது. கல்வி அதிகாரியிடம் வேறு நிர்வாகப்பணியில் பணி மாறுதல் கேட்டுள்ளதாக அவர் கூறினார்.
அவிநாசி மருத்துவமனையில் மாணவர்கள் சிகிச்சை பெற்றது குறித்து மருத்துவர் பாலாஜி கூறுகையில், வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் 11 மாணவியர், ஒரு மாணவர் உட்பட 12 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. மற்ற, 13 பேருக்கு, முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது என்றார்.
அவிநாசி வட்டாச்சியர்ர் வாணிலட்சுமி ஜெகதாம்பாளிடம் இந்த சம்பவம் பற்றி கேட்டபோது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி உட்பட அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார் என்று கூறினார்.


பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்தது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தபோது, பாப்பாள் மற்றும் தலைமையாசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்தது தொடர்ப்பாக இதுவரை காவல்நிலையத்திலிருந்து எனக்கு தகவல் எதுவும் வரவில்லை.
"மாணவர்கள் பல்லி கிடந்த சாப்பாட்டை உண்டது பற்றி தலைமையாசிரியை தகவல் தந்ததை தொடர்ந்து பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டேன். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்," என்று கூறினார்.
இந்நிலையில், சத்துணவு மிகவும் பாதுகாப்பாக மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டதாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாக இதனை திட்டமிட்டு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் சமையலாளர் பாப்பாள்.

அன்று என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை பிபிசி தமிழிடம் சமையலாளர் பாப்பாள் பகிர்ந்துகொண்டார்.
"எப்பவும் ஒன்பதே கால் மணிக்கெல்லாம் சமைக்கிற இடத்திற்கு போய்விடுவேன். சமைக்கின்ற இடம் ஓலக்குடிசை என்பதால், ரொம்ப கவனமா இருப்பேன். குழந்தைங்களுக்கு சாப்பாடு பரிமாறும் வரை எங்கும் போகமாட்டேன். எனது மகளும் இதே ஸ்கூல்லதான் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். நான் சமைப்பதைதான் சாப்பிடுகிறாள்."
"எப்பவும் சாப்பாடு சமைத்தவுடன் பரிசோதனைக்கு கொடுக்க கண்ணாடி பாட்டிலில் கொஞ்சம் எடுத்து வைப்போம். மறுநாள் வந்து அந்த சாப்பாட்டை கீழ போட்டுவிட்டு, அன்றைக்கு சமைப்பேன்."
"எனக்கு உதவி செய்றவங்க, அமைப்பாளர் ராதாமணி மூன்று பேரும் இருந்தோம். தினமும் சமைத்த சாப்பாட்டை நான் சாப்பிட்டு பாத்த பின்னர்தான் குழந்தைங்களுக்கு பரிமாறுவேன். அன்று வெஜிடபுள் பிரியாணி செய்திருந்தேன்."
"எப்பவும் போல நான் சாப்பிட்டுவிட்டு, பாட்டில்ல எடுத்து வைத்த பின்புதான், குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டேன்."
"அப்போது திடீர்னு டீச்சர் வந்து என்ன சாப்பாட்டுல பல்லி கிடக்குது? எப்படி வந்ததுன்னு கேட்டாங்க. அப்புறம் எம்மேல ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டாங்க."
"நானும் எம்மேல தப்பு இல்லை, என்ன பழிவாங்க இப்டி பண்றாங்கன்னு டீச்சர் மேல புகார் கொடுத்துருக்கேன் என்றார் சமையலாளர் பாப்பாள் கூறினார்."
சேவூர் மற்றும் அவிநாசி காவல்நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
- நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட திருமுருகன் காந்தி மீண்டும் கைது
- வெள்ளத்தில் மூழ்கும் கேரளா: சமாளிக்க போராடும் அரசு
- கருணாநிதி விடுதலைப் புலிகளை எந்த அளவு ஆதரித்தார்? - என். ராம் பேட்டி
- ‘யானை, சிறுத்தை, மற்றும் சில பறவைகள்’ - மசனக்குடி காடும், நீதிமன்ற தீர்ப்பும்
- எண்ணற்ற வசவுகள், ஏராளமான எதிரிகள் - கருணாநிதியின் ஒரே பதில் இதுதான்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












