கேரளத்தில் கனமழை, நிலச்சரிவுக்கு 26 பேர் பலி

முக்கிய நாளிதழ்களில் இன்று வெளியான செய்திகளின் தொகுப்பை நேயர்களுக்கு வழங்குகிறோம்.

கேரளத்தில் கனமழை, நிலச்சரிவுக்கு 26 பேர் பலி

கேரளா மாநிலத்தில் கனமழை மற்றும் காரணமாக புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை வரையில் 26 பேர் இறந்தனர். இதில் 17 நபர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டுநாள்களில் வீடுகளை விட்டு பத்தாயிரம் பேர் வெளியேறியுள்ளனர். கனமழை முழு கொள்ளளவு எட்டி வருவதையடுத்து அம்மாநிலத்தில் உள்ள 22 அணைகள் மற்றும் நீர் தேக்கங்களில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது. ''கேரளா வரலாற்றிலேயே முதல் முறையாக 22 அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டுள்ளன. மழை வெள்ள மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல்படைகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது'' என கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரள வெள்ள பாதிப்பு ஐந்து கோடி நிதி உதவி உடனடியாக வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கேரள அரசுக்குத் தேவைப்படும் எத்தகைய உதவிகளையும் செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது என எடப்பாடி தெரிவித்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது தினமணி சென்னை பதிப்பு.

யானைகள் வழித் தடத்தில் உள்ள 27 ரிஸார்டுகளுக்கு சீல்

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யானை வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சீகூர், சிங்காரா மற்றும் முதுமலை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. யானைகள் வழித்தடமான மசினகுடி, மாவநல்லா, வாழைத்தோட்டம், பொக்காபுகாரம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் அதிகமான தனியார் காட்டேஜ், ரிசார்ட்டுகள் உள்ளன.

இவற்றின் உரிமையாளர்கள் வன விலங்குகள் தங்கள் நிலத்தினுள் நுழையாமல் இருக்க மின் வேலிகள், முள் வேலிகள் போன்றவற்றை அமைத்துள்ளனர். இதனால் யானைகள் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு இடம்பெயர முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒரு உயர் அதிகாரிகள் கமிட்டியை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 2010-ல் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கடைசி 8 ஆண்டுகளில் காட்டேஜ், ரிசார்டுகள் வேலிகள் அகற்றப்பட்டாலும் கட்டடங்கள் அகற்றப்படவில்லை. இது குறித்து பலரும் உச்ச நீதிமன்றத்தை நாட, நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 27 கட்டடங்கள் 48 மணிநேரத்துக்குள் மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது என தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

5 வழக்குகள் போட்டு சட்ட சிக்கலை உருவாக்கியது யார்?

முரசொலி நாளிதழில் வெளியான ஸ்டாலின் கடிதத்தில் அபாண்டமான குற்றச்சாட்டும் நஞ்சை விதைக்கும் பழிச்சொல்லும் இருந்ததை கண்டு உள்ளம் பதைபதைக்கிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காழ்புணர்ச்சியாலும், ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும் தமிழக அரசு கருணாநிதிக்கு அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தது என ஸ்டாலின் கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

''மெரினா கடற்கரையில் புதிய கல்லறைகள், நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக 5 மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளாக நிலுவையில் இருந்தது. ஜெயலலிதாவின் நினைவிடத்தை மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்த துடித்தவர்கள் தொடுத்த வழக்குகள் இவை.

சட்டசிக்கல்கள் உருவாகி, கடைசி நேரத்தில் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே காமராஜர் நினைவிடம் அருகே கருணாநிதிக்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு முன்வந்தது. இதில் ஏது காழ்ப்புணர்ச்சி? மெரினா கடற்கரையில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தை அப்புறப்படுத்துவோம் என மேடை போட்டு பேசிய திமுகவினருக்கு மனசாட்சி இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது''என ஜெயக்குமார் அறிக்கையில் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :